முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிக்கன் மசாலா பிரெட் செய்முறை

முதலில் ஒரு விசயத்தை சொல்லி விடுகிறேன் - அடிப்படையில் பிரெட் என்பது மாவு, கொஞ்சம் வெண்ணெய் / எண்ணெய், உப்பு + சர்க்கரை, பேக்கிங் சோடா + பேக்கிங் பவுடர் (அல்லது) yeast சேர்த்து ovenஇல் வைத்து பேக் செய்து தயாரிப்பது. இதில் எதையும் கலந்து நீங்கள் விரும்புகிறபடியான பிரெட்டை தயாரிக்கலாம். அதாவது, எப்படி சாதத்துடன் சாம்பார் கலந்து சாம்பார் சாதம் பண்ணுவதைப் போல. எப்படி விதவிதமான சாதங்கள் உண்டோ அதே போல விதவிதமான பிரெட்டுகளும் பண்ணலாம். அப்படித்தான் நான் இந்த சிக்கன் மசாலா பிரெட்டையும் முயன்று பார்த்தேன் - பிரமாதமாக வந்திருக்கிறது. எப்படி செய்தேன் என சுருக்கமாய் சொல்கிறேன்.


1) முதலில் உலர் கலவை (dry ingredients): நான் ஒரு கோப்பை மைதா + ஒரு கோப்பை கோதுமை மாவு என எடுத்து கலந்து கொண்டேன். நீங்கள் விரும்பினால் இரண்டு கோப்பைகளுக்கும் மைதா மாவே எடுத்துக்கொள்ளலாம். இதில் தேவையான அளவுக்கு உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் பேக்கிங் பவுடர், இரண்டு ஸ்பூன்கள் பேக்கிங் சோடா கலந்து கொள்ளவும்.


2) அடுத்து ஈரக் கலவை (wet ingredients):  தேவையான அளவுக்கு வெண்ணெய்யும் சன்பிளவர் எண்ணெய்யும் (அரை கப் வருமளவுக்கு) கலந்து அடித்து வைத்துக் கொண்டு அதனோடு இரண்டு முட்டைகளை உடைத்து சேர்த்து இம்மூன்றையும் நன்றாக அடித்து வைக்கவும். 


3) அடுத்து சிக்கன் மசாலா: எலும்பில்லாத சிக்கனாக 300 கிராம் வாங்கி அதை கழுவியபின் மிக்ஸியில் இட்டு ஒரு சுற்று சுற்றி கீமாவாக பண்ணி வைக்கவும். வாணலில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மூன்று பச்சை மிளகாய்கள், கருவேப்பிலை, கடுகு சேர்த்து தாளித்தபின், ஒரு நறுக்கின வெங்காயம் சேர்த்து வதக்கி, அதில் இஞ்சி பூண்டு அரவை மற்றும் மஞ்சள் பொடி சேர்க்கவும். அடுத்து இதில் கால் ஸ்பூன் மிளகாய் பொடி, ஒரு ஸ்பூன் மல்லிப்பொடி சேர்த்து வதக்கவும். அடுத்து நான்கைந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பின், சிக்கன் கீமாவை சேர்க்கவும். முக்கியமான விசயம் எந்த கட்டத்திலும் தண்ணீர் சேர்க்கக் கூடாது. எண்ணெய்யிலே முழுக்க சிக்கன் வேக வேண்டும். ஓரளவுக்கு வெந்த பிறகு அரை ஸ்பூன் மசாலா பொடி சேர்த்து கிளறி சில நிமிடங்கள் வேக வைக்கவும். இரு கை பிடி அளவுக்கு புதினா, கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும். சிக்கன் மசாலா ரெடி.


4) இறுதியாக உலர் கலவையில் ஈரக்கலவையுடன் சிக்கன் மசாலாவை படிப்படியாக கலந்து பிசையவும். இறுதி வடிவில் மாவு ஒட்டுபடியான ஈரத்தில் இருக்க வேண்டும். ஆனால் தண்ணீர் சேர்க்கலாகாது. இறுக்கமாய் வந்தால் கூடுதலாக முட்டை சேர்த்துக் கொள்ளலாம். 


Ovenஐ 185 டிகிரி டெல்ஷிஸுக்கு 45 நிமிடங்கள் முன்-சூடு செய்யவும். 45 நிமிடங்கள் முடிந்ததும் இந்த மாவை mouldஇல் வைத்து உள்ளே வைக்கவும். 45-55 நிமிடங்களில் தயாராகி விடும். இருந்தாலும் அரை மணி போனதும் ஒருமுறை எடுத்து வெந்து விட்டதா சோதிக்கலாம் - ஒரு கத்தியை நுழைத்தால் ஒட்டாமல் வந்தால் தயார் என அர்த்தம்.


நான் இது தயாரான பின் சுவைத்த போது கிட்டத்தட்ட கொத்துப்பொரோட்டா சுவை கிடைத்திட மகிழ்ந்து போனேன் - நான் ஒரு அதிதீவிர கொத்துப் போரிட்ட ரசிகன் என்பதால்.


ஆர்வமுள்ளோர் முயன்று பாருங்கள். Oven இல்லாதவர்கள் குக்கரில் வைத்து கூட செய்யலாம். எப்படி என யுடியூபில் பாருங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...