Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஆஸி தொடர் - அஷ்வினுக்கும் ஸ்மித்துக்கும் இடையே ஒரு மகத்தான சமர்




இந்த ஆட்டத்தொடரில் மலை மலையாய் ரன்களைக் குவிக்கப் போகிறார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டர் இருவர் ஆஸி மட்டையாளர் ஸ்மித்தும் இந்திய மட்டையாளர் புஜாராவும். இருவருமே ஒரே பாணியில் தொடர்ந்து வெளியேற்றப்பட்டதை முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் கண்டோம். இத்தொடரின் மகத்தான கணங்கள் என இவற்றை சொல்வேன்.


முதலில் ஸ்மித்-அஷ்வின் சமரைப் பார்ப்போம்.


ஸ்மித் எனும் அசகாய சூரன் 

ஸ்மித்துக்கென்றே ஒரு தனித்துவமான தடுப்பாட்ட பாணி இருக்கிறது. ஒரு off spinner பந்தை நான்காவது, ஐந்தாவது குச்சியில் போட்டு உள்ளே திருப்பி மூன்றாவது குச்சிக்கு கொண்டு வருகிறார் என்றால் மரபான மட்டையாளர் ஒருவர் அதை முன்னங்காலை நடுக்குச்சிக்கு நகர்த்தி முன்னுக்கு வந்து - திருப்பத்துக்கு எதிராக - கவர் அல்லது mid off பகுதிக்கு விரட்டுவார் அல்லது அப்பகுதி நோக்கி தடுத்தாடுவார். அல்லது புஜாரா போன்ற ஒருவர் அதே பந்தை உள்ளே வரும் வரை பொறுத்து நேராக தடுத்தாடி பந்து வீச்சாளரை நோக்கி செலுத்துவார். முதலாவதில், இப்பந்து நன்றாக திரும்பி மட்டையாளரை முறியடிக்கும் பட்சத்தில் அவர் பவுல்ட் ஆகலாம், LBW ஆகலாம். இரண்டாவதில் பந்து மிக மிக அதிகமாய் திரும்பும் பட்சத்தில் மட்டும் ஷார்ட் லெக்குக்கு கேட்ச் கொடுக்கலாம். ஆனால் ஸ்மித் இதே பந்தை மூன்று குச்சிகளுக்கும் குறுக்காக சென்று பந்து விழுகிற நான்காவது குச்சி லைனில் எதிர்கொண்டு நேராக அடிப்பார் - அதாவது பந்து திரும்பும் முன் அதை ஒரு மரபான பேட்ஸ்மேன் கவர் பகுதியில் அடிப்பார் எனில் அதையே ஸ்மித் தன் வித்தியாசமான காலாட்டம் மூலம் நேராக அடிப்பார். மற்றவர்களுக்கு 5, 6வது குச்சியாக இருப்பது அவருக்கு மட்டும் மூன்றாவது குச்சியாகி விடும். இது பந்து வீச்சாளரின் வியூகத்தை தலைகீழாக்கி ஆட்டத்தை குழப்பி விடும். ஸ்மித் இதை வெற்றிகரமாய் சாமர்த்தியமாய் அலட்சியமாய் ஆடுவதைக் கண்டால் அவர் ஒரு தனி உலகில் தனக்கான விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆடுவதைப் போல இருக்கும்

சரி offspin பந்து உள் நோக்கி திரும்பினால் அவர் அதை திரும்பின் பின் புஜாரா பாணியில் ஆடினால் என்னவாகும்? மற்றவர்களுக்கு middle and legஇல் திரும்பும் பந்து ஸ்மித்துக்கு உடம்பில் படாமல் வெளியே போகும். ஸ்மித்துக்கு ஏற்றபடி பந்து வீச்சின் லைனை - பந்து விழும் திசையை - மாற்ற நினைக்கும் பந்து வீச்சாளர்கள் அவரது பொறியில் வந்து மாட்டிக் கொள்வார்கள். அவரது குச்சிகளை அடிப்பது ஒரு வழி என நினைத்தால் அப்படி வீசப்படும் பந்தை அவர் fine leg அல்லது mid wicket நோக்கி தட்டியோ திருப்பியோ விட்டு தப்பித்து விடுவார், ரன்களையும் கறப்பார். நேராக வீசினால் மற்றவர்கள் நேராக அடிக்க வேண்டிய பந்து ஸ்மித்துக்கு கால் பக்கமாய் வீசப்படும் ஒரு வைட் பந்தாக இருப்பதால் பந்து வீச்சாலருக்கு முகத்தில் முட்டையை அடித்ததைப் போல ஆகி விடும்.


இது ஒன்றும் கிரிக்கெட் வரலாற்றில் புதிது அல்ல. மே. தீவுகளின் சந்தர்பால், தென்னாப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித், ஆஸ்திரேலியாவின் கேட்டிஷ் போன்றவர்கள் இந்த - ஸ்டம்புகளுக்கு குறுக்காக சென்று பந்தை கால்பக்கமாய் விரட்டும் - பாணியை வெற்றிகரமாய் பின்பற்றின இடதுகை மட்டையாளர்கள். ஸ்மித்துக்கும் இவர்களுக்குமான முக்கிய வித்தியாசம், எதிரணித் தலைவர் கால்பக்க ஆடுகளத்தை தடுப்பாளர்களைக் கொண்டு இறுக்கமாக்கி நிறைய பந்துகளை off பக்கம் வைடாக போட்டு அவர்களை அமைதியாக்க முடியும், ஒரு பக்கமாய் (கால் பக்கம்) மட்டுமே அவர்களை ஆட செய்ய முடியும் என்பது. ஆனால் ஸ்மித்தோ off-leg பக்க ஆடுகளப் பரிமாணங்களை முழுக்க மாற்றியமைத்தவர், அவரை சுலபத்தில் கட்டுப்படுத்த முடியாது.

 ஆறாவது, ஏழாவது குச்சிகளில் விழும் பந்துகளை இந்த இடதுகை மட்டையாளர்கள் போக விட்டு விடுவார்கள், ஆனால் ஸ்மித்தோ இதே பந்துகளை நேராகவும் off பக்கம் கவரிலுமாக விரட்டுவார். மிக மிக வைடாக கற்பனையே பண்ண முடியாதளவுக்கு வைடாக போட்டால் மட்டுமே ஸ்மித் அப்பந்துகளை விடுவார். ஸ்மித் விசயத்தில் வைடாக பந்துகளை அவர் முழுக்க தன் கட்டுப்பாட்டில் வைப்பது ஆட்டத்தை தலைகீழாக்கி விடுகிறது, கோணங்களை முழுக்க அவருக்கு சாதகமாக்கி விடுகிறது. இரவில் படுக்கையில் உங்களுடன் தூங்குகிறவர் இடித்து உங்களை படுக்கையின் விளிம்புக்கு தளும் போது நீங்கள் அவரை தோளால் திரும்ப இடித்து தள்ளுவது முதலில் குறிப்பிட்ட இடதுகையாளர்களுக்கானது. ஆனால் ஒருவர் படுக்கையையே மொத்தமாய் தள்ளிக்கொண்டு போனால் அதுவே ஸ்மித்துக்கானது


ஸ்மித்தை எப்படி சமாளிப்பது?


ஐந்தாவது, ஆறாவது குச்சியில் பந்தை தொடர்ந்து போட்டு ஆறாவது, ஏழாவது குச்சிக்கு வெளியே ஸ்விங் செய்து எடுத்துப் போவது, ஸ்மித் என்னதான் ஆர்ப்பாட்டமாக அசைந்தாலும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஒரே திட்டப்படி வீசுவது. பந்து அதிகமாய் ஸ்விங் ஆனால் மட்டுமே இது எடுபடும். மேலும் பெரும் பொறுமை வேண்டும். இங்கிலாந்து ஸ்விங் பந்து வீச்சாளர்கள் இதை முயன்று பார்த்திருக்கிறார்கள். மற்றொரு திட்டம் 2019இல் ஆஸி அணி நியுசிலாந்துக்கு டெஸ்ட் தொடர் ஆட சென்ற போது நியுசிலாந்தின் நெய்ல் வாக்னர் ஸ்மித்துக்கு எதிராக பயன்படுத்தியது

வாக்னரின் பாணி

வாக்னர் இதில் ஒரு வித்தியாசமான கால் பொறியை (leg trap) பயன்படுத்தினார் - அவர் bowled, LBW ஆகியவற்றை எதிர்பார்க்காமல், (short) குறைநீள பந்துகள் வீசி leg gully, short leg, fine leg, mid wicket போன்ற பகுதிகளில் கேட்ச் எடுக்க முயன்றார். குறுக்கே சென்றும் குச்சிகளை விட்டும் நின்று (டிவில்லியர்ஸ் பாணியில்) ஆடுகிற மட்டையாளர்களுக்கு குறைநீளப் பந்து, பவுன்சர் ஆகியவை வீசுவது ஒரு நல்ல உத்தி. வாக்னர் இடதுகை வீச்சாளராக ஓவர் தெ விக்கெட் வந்து வீசுவது கோணங்களை மாற்றியமைப்பதால் இது செமையாக எடுபடும்.


நமது அஷ்வின் வாக்னரின் இதே உத்தியை இடதுகை வீச்சின் கோணம் இல்லாமல், பவுன்சரின் தனிச்சிறப்பு இல்லாமல் ஸ்மித்துக்கு எதிராக செயல்படுத்தி வெற்றியடைந்திருக்கிறார் என்பதே சுவாரஸ்யம்.


முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஸ்மித் ஒரு ரன்னுக்கு அஷ்வினால் வெளியேற்றப்பட்டார். அடுத்த டெஸ்டில் முதல் இன்னிங்ஸிலோ பூஜ்யத்துக்கு.


அஷ்வின் இத்தொடர் முழுக்க தன் off break பந்துகளை வலது, இடது கை மட்டையாளர்களுக்கு நேராகவே வீசி வருகிறார். பந்து திரும்பினாலும் அவர் மரபான முறையில் வலதுகை மட்டையாளரை பவுல்ட் ஆக்கும் படி 5வது குச்சியில் இருந்து off குச்சிக்கு கொண்டு வந்து மட்டையாளரை விரட்டத் தூண்டுவதை விட நேராக வீசவே முயன்று வருகிறார். ஸ்மித்துக்கு அஷ்வின் வழக்கமாக ஷார்ட் லெக், லெக் ஸ்லிப் ஆகியன வைக்கிறார். கூட offஇல் ஒரு ஸ்லிப்பும் (ரஹானே). முதல் டெஸ்டில், ஏன் ரெண்டு பக்கத்திலும் அஷ்வின் ஸ்லிப் வைத்திருக்கிறார் என ஸ்மித் யோசிக்கிறார். அஷ்வினுக்கு தூஸ்ரா பந்து கிடையாது. ஆகையால் இந்த off ஸ்லிப்பானது தான் வைடாக போய் நின்று கால் பக்கமாய் அடிக்காமல், தன்னை நேராக ஆடச் செய்வதற்கான அஷ்வினின் ஒரு தந்திரம் (bluff) என ஸ்மித் நினைத்திருக்கலாம். பந்து அதிகமாய் திரும்பும் என நினைத்து (தன் வழக்கப்படி) அவர் off குச்சியில் இடது காலையும் நான்காவது / ஐந்தாவது குச்சிகளில் வலது காலையும் வைத்து உள்ளே திரும்பும் பந்தை fine leg பக்கமாய் அடித்திருக்கலாம். (leading edgeஆக வேறெங்காவது போயிருக்கும்.) ஆனால் அஷ்வினின் பந்து அதன் கோணப்படி உள்ளே வருவதாய் தோன்றினாலும் நேராகவே போகிறது (arm ball). ஸ்மித் சற்று குழம்பி off குச்சியின் நின்றபடி அரைமனதாக அதை ஷார்ட் லெக் பக்கமாய் தட்டுகிறார். பந்து நேராக சென்று கொஞ்சம் கூடுதலாய் திரும்பி எகிறிட அவர் Off slipக்கு கேட்ச் கொடுத்து வெளியேறுகிறார். அதாவது, இங்கிலாந்து மற்றும் நியுசிலாந்து பந்து வீச்சாளர்களின் யுக்திகளை இரட்டிப்பாக ஒரே சமயம் பயன்படுத்தி double bluff செய்து அஷ்வின் ஸ்மித்தை டம்மி பீஸாக்குகிறார். இரண்டு பக்கமும் பொறியை வைத்து இல்லாத பந்துக்கு ஆட வைத்து வெளியேற்றுகிறார். இதே பந்து ஒரு அடி வெளியே விழுந்திருந்தால் எடுபட்டிருக்காது - arm பந்து தான் விழப்போகிறது என கணித்து அவர் அதை நேராக தடுத்தாடியிருப்பார் - என்பது முக்கியம்.


அடுத்த ஆட்டம் மெல்பொர்னில்ஸ்மித் அஷ்வினின் பந்தை மீண்டும் எதிர்கொள்கிறார். சுழல் பந்து அதிகமாய் திரும்புவதனாலோ ஏனோ களத்தடுப்பில் கால் ஸ்லிப்பை leg gullyஆக வைத்திருக்கிறார்கள். ஒரு ஷார்ட் லெக். முந்தின ஆட்டத்தைப் போன்றே ரஹானே off ஸ்லிப்பில் நிற்கிறார். இந்த ஓவரின் சிறப்பு அஷ்வின் முந்தின ஆட்டத்தில் வீசிய ஆர்ம் பந்தை மீளுருவாக்கம் செய்ய முயலவில்லை என்பது. அடுத்த சிறப்பு பந்தின் லூப். லூப் என்றால் பந்தின் வீச்சுத் தடம் ஒருவிதமாகவும் அது ஆடுதளத்தில் விழுகிற திசை (line) வேறாகவும் இருப்பது. இப்பந்து வரும் தடத்தைப் பார்த்தால் அது off குச்சிக்கு சற்று வெளியே விழுந்து உள்ளே வருகிறதோ எனத் தோன்றும். அதனாலே ஸ்மித் இதை நேராக தடுத்தாடுவதா இல்லை கால் பக்கமாய் அடிப்பதா என சற்றே குழம்புகிறார். முதலில் அவரது மட்டை உயர்ந்துள்ள விதத்தைப் பார்க்கும் போது அவர் இப்பந்து off குச்சிக்கு வெளியே விழுவதால் அதை மிட் விக்கெட்டுக்கு அடிக்கலாம் என எதிர்பார்த்து, பின்னர் பந்து எதிர்பார்த்ததைப் போல வெளியே விழாமல் உள்ளே வர குழம்பி ஷாட்டை மாற்றுகிறார் எனத் தெரிகிறது. இப்போது அவர் லெக் ஸ்லிப் இருந்த பக்கமாய் தட்டி விட முயன்று லெக் கல்லிக்கு (புஜாரா) கேட்ச் கொடுத்து வெளியேறுகிறார். இம்முறை பூஜ்யத்துக்கு.


இங்கு மற்றொரு விசயத்தை குறிப்பிட வேண்டும். ஸ்மித் தனது வழமைப்படி குச்சிகளுக்கு குறுக்கே நடந்து போய் ஆடியிருந்தால் இப்பந்து கால் பக்கமாய் அவரைக் கடந்து தொடாமல் போயிருக்கும். ஆனால் அவர் தன் காலாட்ட பாணியை மாற்றிக் கொண்டதாலே இம்முறை அவுட் ஆகிறார். ஒருவேளை அவர் அண்மையில் முதுகுக் காயத்தினால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்திருப்பதால் தனது காலாட்டத்தில் அந்தளவுக்கு நேர்த்தியாக இயங்க முடியவில்லையா அல்லது அஷ்வின் இரண்டு பக்கமும் ஸ்லிப், gully வைத்திருப்பது அவரைக் குழப்புகிறதா? அடுத்தடுத்த ஆட்டங்களிலும் அஷ்வினால் தொடர்ந்து  ஸ்மித்தை இந்த முறையில் பொறியில் தொடர்ந்து வைத்திருக்க முடிந்தால் அது ஒரு மகத்தான சாதனையாக இருக்கும் எனத் தோன்றுகிறது


Comments

Popular posts from this blog

நடிகையரின் பிம்பச்சிறை - அழகு ஏன் ஒரு பிரச்சினையாகிறது?

  ( இது நவம்பர் 2025 இல் எழுதப்பட்ட கட்டுரை . டிசம்பர் 2025 உயிர்மையில் வெளியானது . ஆனால் இப்போதும் படிக்கத்தக்க ஒரு முக்கிய பிரச்சினைதான் இது என்பதால் பகிர்கிறேன் .) அண்மையில் கௌரி கிஷன் தன்னைக் குறித்து ஒரு யுடியூபர் உருவக்கேலிக் கேள்வியை எழுப்பியதாகச் சொல்லி அதை விமர்சித்த சம்பவத்தைப் பார்த்தேன் . தன் திறமையாலே தான் ஜொலிக்க விரும்புவதாகவும் , செறிவான வேடங்களிலே நடிக்க முயல்வதாகவும் அவர் கூடுதலாகச் சொன்னார் . எனக்கு இதுதான் பிரச்சினையின் மையம் , அவரது உடல் எடை அல்ல என்று தோன்றுகிறது . ஏன் ஆண்கள் மீது என்றுமே இவ்வகை கேள்விகள் வைக்கப்படுவதில்லை என்றால் தமிழ் சினிமா அவர்களை மட்டுமே நடிகர்களாகக் காண்கிறது . நடிகைகள் பார்வை இன்பம் அளிக்கிற பொம்மைகள் . அவர்கள் எவ்வளவுதான் புகழ் பெற்றாலும் விதவிதமான பாத்திரங்களை அவர்களால் பூண முடியாது . வந்து சிரித்து கவர்ச்சியாக நடனமாடி க்யூட் முகபாவனைகள் காட்டிவிட்டுப் போய்விட வேண்டும் . முப்பது படங்களில் நடித்தாலும் அந்த முப்பதும் ஒரே வேடம்தான் . வணிகப் பட நாயகர்கள...

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...