முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கமலின் தில்லுமுல்லு: சூரப்பாவை போற்றுதல்

 







கமல் தன் முகத்தில் போலி உணர்ச்சிகள் வெடிக்க மய்யம் சேனலில் சூரப்பாவை ஊழலுக்கு எதிரானசூரராகப் போற்றிபேசியிருந்த காணொளியைக் கண்டால் ஒருவிசயம் சட்டெனப் புலனாகும்: இது குருமூர்த்தி போன்றவர்களின் தூண்டுதலால் நடக்கும் கவனம் திருப்பும் செயல்.

 சூரப்பா மீதான குற்றச்சாட்டு அவர் தன்னிச்சையாக, மாநில அரசிடம் போதுமான ஆலோசனை செய்யாமல், அண்ணா பல்கலையை மத்திய அரசின் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வர முயல்கிறார், எதிர்காலத்தில் தமிழக மாணவர்கள் இடம்பெற முடியாமல் வடக்கத்திய மாணவர்கள் அதிகம் இங்கு வந்து படிக்கிற அநீதியான சூழலுக்கு வழிவகை செய்கிறார் என்பது. நமது பல்கலைக்கழகங்களை சூறையாடுவது என்பது மத்திய அரசின் நீண்ட காலத் திட்டம். அதுவும் அண்ணா பல்கலைக்கழகம் எனும் உயர்தர கல்வி நிறுவனத்தை தனியாருக்கு ஒரு பக்கம் தாரை வார்த்து விட்டு, இன்னொரு பக்கம் எந்த சமூகநீதிக் கொள்கையையும் பின்பற்றாமல் வர்ணாசிரம அடிப்படையிலும், இந்தி-சார்பு மாநில மக்களுக்கு பயன்படும் வகையிலும் அங்கு மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவதுமே அவர்களின்தொலைநோக்குத்திட்டம். இதை செயல்படுத்தும் முகவராகவே பாஜக ஆதரவாளரான சூரப்பா இங்கு கொண்டு வரப்படுகிறார்.

 சூரப்பா மீது எப்போதெல்லாம் எதிர்ப்பு வருகிறதோ அப்போதெல்லாம் பாஜகவின் பெருந்தலைகள் கொதிப்பதைப் பார்க்கலாம். அதாவது நீங்கள் பிரதமரை விமர்சித்தால் கூட அவர்கள் பதற மாட்டார்கள், ஆனால் சூரப்பா மீது தூசு விழுவதை பொறுக்க மாட்டேன் என்கிறார்கள். ஏனென்றால் அவர் அஸ்திரம் மட்டுமே, அவரை ஏவி விட்டவர்கள் கல்வியை ஒற்றைமயப்படுத்தும் பாஜகவின் சித்தாந்தத் தலைமையும் அரசு நிதியால் உருவாக்கப்பட்ட பல்கலைகளை தம் வயப்படுத்த துடிக்கும் சங்கி பணமுதலைகளுமே. எப்படி தூதுவர் மீது கைவைத்தால் எதிரி நாடு துடிக்குமே அப்படியே சூரப்பா மீது விசாரணைக் கமிஷன் அமைப்பதற்கும் அவர்கள் துடிக்கிறார்கள்.

 இவ்விசயத்தில், சூரப்பாவை அவரது தமிழக விரோத கொள்கையை நியாயப்படுத்தி பேச முடியாது என பாஜக அறியும். ஆக, திசைதிருப்ப ஒரு சக்தி தேவை. அதற்காக களமிறக்கப்பட்டவரே கமல். தன் பேச்சில்சூரப்பாவின் அரசியலை நாம் அறிவோம்என சேம் சைட் கோல் அடிக்கும் கமல் ஆனால் அதைப் பற்றி இப்போது பேச வேண்டாம், ஊழலைப் பற்றி பேசுவோம் என்கிறார். 60 லட்சம் வாங்கிக் கொண்டு பேராசிரியர் நியமனம் நடப்பது நீண்ட காலமாய் உள்ள ஒரு பிரச்சனை, ஆனால் அதற்கும் சூரப்பா விவகாரத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அண்ணா பல்கலை சென்றால் அதைவிட அதிகமான பணத்தை ஆர்.எஸ்.எஸ்-பாஜக தலைமை பெற்றுக் கொண்டு அவர்களுக்குத் தேவையான ஆட்களை நியமனம் செய்வார்களே தவிர ஊழல் ஒழியப் போவதில்லை. ஊழல் என்பது ரேஷன் பொருள் கொள்முதல் துவங்கி கொரோனா முகமூடி கொள்முதல் வரை இருக்கலாம், ஆனால் அதற்காக அத்தனையையும் நீங்கள் மத்திய அரசிடம் ஒப்படைப்பீர்களா? அதுதான் தீர்வா? இல்லை.

 அரசியல்வாதிகள் ஊழல் செய்வதற்குக் காரணம் பொருளாதார வலிமையே அரசியல் அதிகாரமாக மாறுகிறது, கடந்த சில பத்தாண்டுகளில் கார்ப்பரேட்-அரசியல் தலைவர் கூட்டணி என்பது (மோடி-அதானி) ஒரு தவிர்க்க முடியாத கூட்டமைப்பாக தோன்றி விட்டது என்பது. ஊழல் என்பது நவதாராளவாத பொருளாதாரத்தின் ஒரு நோய்க்குறி. இந்த பொருளாதார அமைப்பில் - சமூகநீதி சார்ந்து - சீர்திருத்தங்கள் செய்யாமல் ஊழலை ஒழிக்க முடியாது. அன்னா ஹசாரே துவங்கி அவ்வப்போது தோன்றி ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் வரை இதை ஒரு ஒழுக்கப் பிரச்சனையாக எளிமைப்படுத்தி முன்வைப்பதை கவனியுங்கள். இவர்கள் யாருமே ஊழலில் பெருமுதலாளிகளுக்கு உள்ள பெரும்பங்கைப் பற்றி, ஊழலின் அச்சாணியாக உள்ள அம்பானி, அதானிகளைப் பற்றி பேச மாட்டார்கள். இவர்கள் எப்போதுமே பாஜகவின் அரசியல் ஆதாயத்துக்காக பினாமியாக நின்று உழைப்பவர்கள். ஊழலுக்கு எதிராக பெரிய இரைச்சலைக் கிளப்பி, ஊடகங்களில் மாதக்கணக்கில் இடம்பெற்று, அதைக் கொண்டு மோடி அரசை அரியணை ஏற்றி விட்டு ஏன் அன்னா ஹசாரே ஒரேயடியாக அரசியலே பேசாமல் ஒதுங்கி விட்டார் என யோசியுங்கள். அவர் தனக்கு அளிக்கப்பட்ட அசைன்மெண்டை நிறைவேற்றி விட்டார். கமலும் இப்போது அப்படியே. மாநில நலன்கள் பாசிச-கார்ப்பரேட் சக்திகளுக்கு இரையாக்கப்படுவதை நாம் எதிர்க்கும் போது அவர் குறுக்கே வந்துவாங்க ஊழலைப் பற்றி பேசுவோம்என்கிறார். சூரப்பா இங்குள்ள ஊழலை எதிர்த்து, விசாரித்து நடவடிக்கை எடுக்க முயன்றார் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? மத்திய அரசின் கீழுள்ள பல்கலைகள், நிறுவனங்களில் ஊழல் இல்லையா? ரபேல் ஊழல் என்றால் என்ன? இது மிக எளிமையான ஒரு கவனம் திருப்பும் உத்தி.

 இனிமேல் சூரப்பா என்றால் ஊழல் எதிர்ப்பு போராளி, அன்னா ஹசாரே 2.0 எனும் பிம்பம் உருவாக வேண்டும், இதைக் கொண்டு அண்ணா பல்கலையை ஆர்.எஸ்.எஸ் கைகாட்டும் பெருமுதலாளிகளுக்கு நாம் தாரை வார்க்க வேண்டும். தனியார்மயம் வந்தால் ஊழல் ஒழிந்து விடும் என சில பத்தாம்பசலிகள் பேசிக் கொண்டிருப்பார்கள், ஆனால் தனியார் வந்த பின் தான் இங்கு ஊழல் பெருத்து விட்டது என்பது அவர்கள் கவனிக்க மாட்டார்கள். கமலும் அப்படியான ஒருவரே.

 கமலின் மய்யம் யுடியூப் சேனலைப் பாருங்கள்: உப்புசப்பில்லாத பிரச்சனைகளைப் பற்றி அவ்வப்போது சில காணொளிகளை பதிவேற்றுவதைத் தவிர அதில் வேறெந்த அன்றாட அரசியல் பிரச்சனைகளைப் பற்றிய பதிவும் இல்லை. திடீரென இந்த சூரப்பா விவகாரத்தில் கமல் வெண்தாடியுடன் கண்களை உருட்டி உருட்டி வந்து பேசுவது நிகழ்கிறது. ஏன் இந்த திடீர் அரசியல் அறிக்கை இப்போது வருகிறது? குருமூர்த்தி அழைத்து பேச சொன்னாரா? இல்லை, எல்.முருகனா?


தேர்தலுக்கு ஆறு மாதங்கள் வரை கமல், ரஜினி போன்றோர் யாரிடமெல்லாம் போனிலும் நேரடியாகவும் பேசுகிறார்கள் என்பது கண்காணிக்கப்பட்டு மக்களுக்கு அம்பலபடுத்த வேண்டும். இது போன்ற மூன்றாம் அணிகள் பி-டீம்களாக மாறி மக்களை ஏமாற்றாமல் இருக்க இது அவசியம். இதை ஒரு தனி சட்டமாகவே ஆக்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...