முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நடராஜனின் எதிர்காலம் எப்படி இருக்கும்?



நட்டு என்கிற நடராஜனுக்கு இவ்வளவு சீக்கிரம் இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை (பொதுவாக இளம் வீரர்கள் இந்திய அணிக்குள் நுழைவது அவ்வளவு சிரமம் அல்லவா), ஆனால் வாய்ப்பு கிடைத்தால் அவர் நிச்சயம் பிரகாசிப்பார் என நம்பினேன். அப்படித்தான் அடுத்தடுத்த ஆட்டங்களில் நடந்திருக்கிறது - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஒரு விக்கெட் என்றால் முதல் டி-20 போட்டியில் மூன்று விக்கெட்டுகள் என கலக்கி இருக்கிறார்.

 

 இந்த .பி.எல் துவக்கத்தில் இருந்தே அவருக்கு அதிர்ஷ்டம் வலுவாக இருக்கிறது - 2018இல் அவர் சன் ரைசர்ஸ் அணிக்குள் வந்தால் 11இல் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. ஏனென்றால் பயிற்சியாளர் டாம் மூடிக்கு நட்டு மீது அதிகம் நம்பிக்கை இருக்கவில்லை. அவர் கலீலுக்கு அதிகம் வாய்ப்பளித்தார். ஆனால் மூடியின் இடத்தில் டிரவர் பெய்லிஸ் பயிற்சியாளர் ஆனது நட்டுவுக்கு பயன்பட்டது. அவர் நட்டு மீது அதிக நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்தார். அத்துடன் 2020 .பி.எல்லில் அதிகம் கவனிக்கப்பட்ட யார்க்கர் நிபுணராக நட்டு மாறினார்


அடுத்த அதிர்ஷ்டம்: ஆஸ்திரேலியாவுக்கு சென்ற இந்திய டி-20 அணிக்கு கூடுதல் வீரரகாக அவர் சேர்க்கப்பட்ட நிலையில் (அதுவும் கொரோனாவினால் ஏற்பட்ட புதிய பயிற்சித் தேவைகளினால் தான்) வருண் சக்கரவர்த்திக்கு காயம்பட நேரடியாக அணிக்குள் நட்டு வந்தார். ஆனால் அடுத்து வேகவீச்சாளர் செயினிக்கு காயம்பட்டது தான் அதிர்ஷட்டத்திலேயே பெரிய அதிர்ஷ்டம். அவர் இப்போது சயினிக்கு கூடுதல் பதில் வீரராக ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டு, சயினிக்கு காயம் மோசமாக மூன்றாவது ஒருநாள் போட்டியில் தேர்வாகி ஆடினார். சிறப்பாக பந்து வீசி பரவலான பாராட்டுகளைப் பெற்றார். அதாவது இரண்டு வீரர்களுக்கு அடுத்தடுத்து காயம் ஏற்பட்டு நட்டுவின் உடனடி பிரவேசம் நிகழ்ந்தது. ஆனால் அதிர்ஷ்டம் ஓரளவுக்குத் தான் கைகொடுக்கும் - அதைத் திறம்பட பயன்படுத்துவது என ஒன்றொருக்கிறவதல்லவா, அதில் தான் நட்டுவின் சில சிறப்பான இயல்புகள் உதவியிருக்கின்றன:


1) நிலையான மனம், தடுமாறான புத்தி, வலுவான மனத்திடம் - இதை ஒட்டுமொத்தமாக ஆங்கிலத்தில் temperament என சொல்லுவார்கள். இது நட்டுவுக்கு இயல்பாகவே நிறைய உள்ளது. திறமையான வீரர்கள் எல்லாரும் ஜெயிப்பதில்லை, ஏனென்றால் மனத்திடம் அவர்களுக்கு குறைவாக இருக்கும். இவ்விசயத்தில் நட்டு ஜெயிப்பதற்காகவே பிறந்தவர்.

2) நீங்கள் நட்டு பந்து வீசும் போது ஒன்றை கவனியுங்கள் - ஒரு பந்தை குறிப்பிட்ட நீளத்தில் வீசுகிறார் என்றால் அதை அவர் ஏற்கனவே தீர்மானித்து விட்டு வீச வந்திருக்கிறார் எனப் பொருள். அந்தப் பந்து நான்கு ரன்களுக்கு அடிக்கப்பட்டால் அதில் தவறில்லை என தொடர்ந்து அங்கேயே - மிகச்சிறிய மாறுபாட்டுடன் - நட்டு வீசுவார். ‘இந்த வீச்சாளரை நம்மால் சுலபத்தில் அச்சுறுத்த முடியாதுஎனும் சேதி மட்டையாளருக்கு போய் சேர்ந்து விடும். அதாவது நான்கு ரன்களை அடித்தாலும் மட்டையாளருடனான சமரில் நட்டு வென்று விடுகிறார். ஒருவேளை இரண்டாவது பந்தில் அடி வாங்கினாலும் நட்டு ரொம்ப கவலைப்படாமல் அடுத்து வீச ஒரு மாற்றுப் பந்தை வைத்திருப்பார் - யார்க்கர் அடி வாங்கினால் ஒரு மெதுவான பந்து. இந்த இரண்டு பந்துகளையே அவர் திரும்பத் திரும்ப வீசுவார். மற்ற பந்து வீச்சாளர்களைப் போல அந்நேரத்தில் தோன்றுகிறாற் போல புதுப்புது பந்துகளாக வீச முயன்று சொதப்ப மாட்டார். இதையே இத்தனை வருடங்களாக ஆடி வரும் உமேஷ் யாதவ், ஷாமி போன்றோருடன் ஒப்பிட்டுப் பாருங்கள் - இரண்டு பந்துகள் சரியாக விழ வில்லை, 4, 6 என அடி வாங்கினால் இவர்கள் அதன் பிறகு மிக மிக மோசமாய் வீசுவார்கள். இந்த வயதிலேயே நட்டுவுக்கு நிலையான திட்டம் உள்ளது என்பது சிறப்பு. இவ்விசயத்தில் அவர் பும்ராவைப் போன்றவர்.

3) மூன்றாவதாக, முக்கியமாக, நட்டுவுக்கு தான் நினைக்கும் பந்தை வீசுகிற கூர்மை உண்டு. முதல் டி-20 போட்டியில் மத்திய ஓவர்களில் வலது கை வீரர்களுக்கு நேராக, உள்ளே வரும் பந்துகளை round the wicket வந்து வீசுவது ஒரு திட்டம். ஆனால் இதை துல்லியமாக நிறைவேற்றினாலே சிறப்பு. அப்படியே அவர் மேக்ஸ்வெல்லை வீழ்த்தினார். அதாவது மேக்ஸ்வெல்லுக்கு இதுவே பலவீனம் என்றெல்லாம் யோசித்து பந்துக்கு பந்து குழப்பிக் கொள்வதல்ல. எல்லாருக்கும் ஒரேவிதமான பந்துதான். எல்லாம் யானைக்கும் ஒரே குழிதான் தோண்டுவோம், விழுந்தால் விழு. இல்லாட்டி தப்பிச்சு போ. இந்த எளிமை அவரது பந்துகள் தொடர்ந்து ஒரே இடத்தில் விழுவதற்கு உதவுகிறது.


4) மேலே சொல்லியிருப்பதன் தொடர்ச்சியாக திட்டமிடலில், கள-அமைப்பில் உள்ள எளிமை நட்டுவின் நீட்டுப்புக்கு உதவுகிறது. சில நேரம் இறுதி ஓவர்களில் யார்க்கர் எடுபடாமல் ஓவர் பிட்ச் பந்தை வீசினால் அவர் அடிவாங்குவார். ஆனால் அந்த ரிஸ்கை எடுக்க அவர் தயாராகவே வருகிறார். அடுத்தடுத்து அதே பந்துகளை முயல்வார். எடுபடவில்லை என்றால் அதை ஏற்பார். இது தோனியின் பாணி. யார்க்கர் சரியாக விழ வில்லை, அதனால் பவுன்சர் போடுவோம், வெவ்வேறு பந்துகளை வீசுவோம் என்றெல்லாம் அந்நேரத்துக்கு யோசிக்க மாட்டார். இது டி-20யில் பேட்ஸ்மேன் முன்னெடுக்கும் யுக்தியும் தான் - MIக்காக பொலார்ட் பேட்டிங் பண்ணும் போது கவனியுங்கள்; முழுநீளத்தில் நேராக தன் அரைவட்டத்தில் விழும் பந்துக்காக காத்திருப்பார்; அதுவரை ஒற்றை இரட்டை ஓட்டங்கள் எடுப்பார். விழுந்ததும் நேராக அடித்து 4, 6 என விளாசுவார். அப்படியும் சொதப்பினால் போனால் போச்சு என தோல்வியை ஏற்றுக் கொள்வார். இந்த அணுகுமுறையின் சிறப்பு என்னவென்றால் அழுத்தத்தை எதிர்த்தரப்பின் மீது சுமத்துவது தான். இதை நட்டு தன் பந்து வீச்சில் செயல்படுத்துகிறார்.


5) நட்டுவின் பந்து வீச்சைப் பார்க்கிறவர்களுக்கு அவர் இன்னும் 5-8 கி.மீ வேகத்தை அதிகப்படுத்தினால் இன்னும் வெற்றிகரமாக விளங்கலாமே எனத் தோன்றும். ஆனால் சமிந்தா வாஸ் இதே வேகத்தில் (130 கி.மீ) வீசியே தலைசிறந்த வீச்சாளராக விளங்கினார் என மறந்து விடக் கூடாது. இந்தியாவை எடுத்துக் கொண்டால் பிரவீன் குமார். சஹீர் கான் கூட தன் வேகத்தைக் குறைத்துக் கொண்ட பிற்பகுதியிலேயே சிறந்த பந்து வீச்சாளரானார். வேகம் என்பது மிகைப்படுத்தப்படும் சங்கதி என்றே தோன்றுகிறது. அதைவிட கட்டுப்பாடு, தெளிவு, தீர்மானமான அணுகுமுறை முக்கியம். நட்டு வாசிம் அக்ரமாக வேண்டியதில்லை. அவர் சமீந்தா வாஸாகவே தொடர்ந்து இயங்கலாம். நடைமுறைவாதியான அவர் அப்படியே செய்யப் போகிறார் என நினைக்கிறேன்


5) அடுத்து, இறுதியாக, நட்டுவின் வாய். ஆமாம் வாயே தான். இதை நான் எனது .பி.எல் அலசல்களின் போது குறிப்பிட்டிருந்தேன். அஷ்வினுடனான நட்டுவின் யுடியூப் பேட்டியில் நான் ஒன்றை கவனித்தேன்: நட்டுவின் வாயில் இருந்து ஒன்றை பிடுங்குவது ரொம்ப கஷ்டம். அவர் பட்டும்படாமல் பேசுகிற, எல்லாருக்கும் பணிந்திருப்பதாக காட்டிக்கொள்கிறவர், கழுவுற மீனில் நழுவுற மீன். அவரைப் போன்றவர்கள் இந்திய அணியில் நிலைத்திருப்பது சுலபம். வாய்க்கொழுப்பு கொண்ட பல தென்னிந்திய வீரர்கள் அணித்தலைமையுடன் முறைத்துக்கொண்டு, அரசியலில் மாட்டிக்கொண்டு வெளியேற்றப்பட்டதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் நட்டு பிழைத்துக் கொள்வார். கிரிக்கெட் அரசியலிலும் அவர் மற்றொரு எம்.எஸ். தோனி. எதிர்காலத்தில் தன் உடற்தகுதியை தக்க வைத்தால், இந்தி பேச கற்றுக் கொண்டால் அடுத்த ஐந்தாண்டுகளில் அவர் இந்திய அணியின் துணைத்தலைவர் ஆனாலும் ஆச்சரியப்பட மாட்டேன். அதற்கு மேல் அணித்தலைவர் ஆவதெல்லாம் அவரது அதிர்ஷ்டம்.

கருத்துகள்

விசு இவ்வாறு கூறியுள்ளார்…
கிரிக்கெட் ஆட்டத்தை வெறித்தனமாக ரசித்த நான் 90 களில் நடந்த சூதாட்ட ஏமாற்று வேலைகளினால் இந்த ஆட்டத்தை முழுவதும் தவிர்த்தேன். என்ன தான் தவிர்த்தாலும், இணைய தளத்தை தட்டினால் ஏதாவது ஒரு இடத்தில கிரிக்கெட் பற்றி ஏதாவது ஒரு செய்தி கண்ணில் படும், அப்படி கண்ணில் பட்டது தான் தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜனின் பெயர்.

இன்றி தங்களின் பதிவை படிக்கையில் நடராஜனை இளைய வீரர் என்று குறிப்பிட்டது மட்டுமல்லாமல் அவர் இன்னும் ஐந்து வருடங்களில் கேப்டன் - வைஸ் கேப்டனாக வர வாய்ப்பை பற்றியும் எழுதி இருந்தீர்கள்.

நடராஜானுக்கு தற்போது முப்பது வயது. முப்பது வயது என்பது கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளார்களுக்கு ஓய்வு பெறுவதற்கான முதல் தகுதி. அவரை எப்படி இளம் வீரர் என்று குறிப்பிட்டீர்கள் என்று வியக்கிறேன்.

அனைத்தும் சரியாய் அமையும் பட்சத்தில் நடராசன் அவர்கள் இன்னும் ஒரு வருடம் இந்திய அணிக்கு விளையாடும் வாய்ப்புள்ளது. அதற்கு மேல் இளைய தலை முறையினால் நீக்கப்படுவார்.

தாமதமாக வந்தாலும் தவறாமல் வந்த நடராஜனுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
நான் அவரை இளம்வீரர் என்பது புதியவர் எனும் பொருளிலே, வயதை வைத்தல்ல. அவர் இன்னும் 4 வருடங்கள் நிச்சயமாய் ஆட முடியு என நம்புகிறேன்.
Cricket Brains இவ்வாறு கூறியுள்ளார்…
மிக நன்று. ஆனால் நடராஜனால் கேப்டன் ஆவது கடினம். வேண்டுமெனில், பும்ரஹ்வைப் போல் அவரும் ஒரு அசைக முடியாத வர வாய்ப்புள்ளது. டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்கு அவர் நிறைய ஸ்விங் பந்து வீச்சில் பயிற்சி பெற வேண்டும். அப்போதுதான் ட்ரெண்ட் போல்ட் போல் நல்ல இடது கை வேகப்பந்து வீச்சாளராக வர முடியும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...