முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கல்வியில் ஏற்பட வேண்டிய சீர்திருக்கங்கள் (1)





நேற்று ஒரு நண்பரிடம் நமது பள்ளிக் கல்வி முறையில் கொண்டு வர வேண்டிய சில சீர்திருக்கங்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். இது குறித்த என் கருத்துக்களில் சிலவற்றை மட்டும் சுருக்கமாக இங்கு தருகிறேன்.


1. சந்தையில் இன்று உள்ள தவிர்க்க முடியாத பண்டம் கல்வி. கல்வி தனியார்மயமானது மக்களிடையே ஏற்றத்தாழ்வை அதிகமாக்கி, பெற்றோர்களுக்கு கடும் சுமையை ஏற்படுத்தி உள்ளது. அடுத்து, ஜி.எஸ்.டி மூலம் வரி வசூலை அப்படியே மத்திய அரசே அபகரித்து விடுகிறது. மேலும் பல வரிகளையும் வருடாவருடம் அரசு இழந்து வருகிறது, இழக்கப் போகிறது. இந்த சூழலில் மாநில அரசு தனக்கான வருமானத்தை அதிகப்படுத்த ஒரு வழி கல்வியில் தனியாரிடம் இருந்து மூன்றில் ஒரு பங்கை தன் வசம் கொண்டு வருவது.

2.  முதற்கட்டமாக, ஒரு சட்டம் இயற்றி ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கையை அங்கு வசிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை பொறுத்து கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அடுத்து அங்கு செயல்பட அனுமதிக்கப்படும் பள்ளிகளில் மூன்று இரண்டு மடங்கு அரசின் பள்ளிகளாக இருக்க வேண்டும். இந்த பள்ளிகளை இலவசம், கட்டணம் என இரண்டாக பிரிக்க வேண்டும். பெற்றோரின் வருமான சான்றிதழின் படி ஏழைப் பிள்ளைகளுக்கு மட்டுமே இலவசப் பள்ளிகளில் அனுமதி அளிக்க வேண்டும். மத்திய வர்க்க, மேல் மத்திய வர்க்க பிள்ளைகளுக்கு அவர்கள் ஏற்கனவே தனியாரில் செலுத்தும் கட்டணத்தில் பாதியை வசூலிக்கலாம். தனியாரில் உள்ள அதே கட்டமைப்பு, வசதிகள் இப்பள்ளிகளிலும் இருக்க வேண்டும். ஆசிரியர்களைப் பொறுத்தமட்டில் அரசிலே அதிகத் திறமையான தகுதியான ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்பதால் பிரச்சனையில்லை. இரண்டு விதமான பள்ளிகளில் ஒரே தரம், கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும் - கட்டணத்தை தவிர எந்த வித்தியாசமும் தெரியக் கூடாது.

3.  பள்ளிகளின் எண்ணிக்கை குறைவதால் மக்கள் கணிசமாய் தம் பிள்ளைகளை அரசுப் பள்ளிக்கே அனுப்பும் நிலை ஏற்பட்டு, அரசின் வருமானம் பெருமளவில் கூடும். 

4. அடுத்து, 12ஆம் வகுப்பு வரை பிள்ளைகளின் கல்வியை கட்டாயமாக்க வேண்டும்; பிள்ளைகள் பாதியில் நிற்பதற்கான பிரதான காரணம் வறுமை அல்லது தேர்வில் தோற்பதாக உள்ளது. இதை சரி செய்யும் நோக்கில் இப்போதுள்ள வருட இறுதி தேர்வுமுறையை ரத்து செய்து, தொடர் மதிப்பீட்டு முறை மட்டுமே வைத்திருக்க வேண்டும். இதில் மதிப்பெண்ணுக்குப் பதில் கிரேட் முறை கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு மாணவரும் பெறும் மதிப்பீட்டை அவர் மட்டுமே அறிந்திருக்க வேண்டும். பொதுவில் வெளியிடக் கூடாது - இது ஏற்கனவே சில மேற்கத்திய நாடுகளில் உள்ள முறை தான். இதன் மூலம் தேர்வின் போது மாணவர்கள் அனுபவிக்கும் நெருக்கடி இல்லாமல் ஆகும். மதிப்பெண் அன்றி கற்றலே இலக்காகும்.

5.  மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளிலும் எழுத்து பொதுத்தேர்வு இருக்கக் கூடாது - மாறாக மாணவர்கள் செய்யும் ஆய்வு புரோஜெக்டுகளை மதிப்பிட்டு அதன் அடிப்படையில் தேர்வு செய்யலாம். இதன் மூலம் டியூஷன், பயிற்சி மையங்கள் அனைத்தையும் ஒழித்துக் கட்டலாம். CBSE, மாநில பாடத்திட்டம் என உள்ள வேறுபாடுகளும் மாணவர்கள் மீது தாக்கம் செலுத்தாமல் பார்த்துக் கொள்ளலாம் (மாற்றுப் பாடத்திட்டத்தில் இருந்து பெயர்ந்து வரும் மாணவர்களுக்கு.)

அ) இதனால் அரசின் வருமானம் பெருகும் - இது டாஸ்மாக் விசயத்தில் ஏற்கனவே தமிழகத்தில் வெற்றிகரமாக இயங்குகிற பாணி தான். அப்படியே கல்வி நிலையங்களுக்கும் கொண்டு விடலாம். 

ஆ) இதை தனியார் பள்ளிக்கூடங்களின் கூட்டமைப்புகள் எதிர்க்கும் - ஆனால் அங்கு பணி செய்யும் ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள். ஏனென்றால் அவர்களின் பணி நிரந்தர அரசுப் பணியாக உறுதி செய்யப்படும்; அதே வேலை, ஆனால் அதிக சம்பளம், நிலையான பணி என அவர்கள் நிம்மதி அடைவார்கள். இப்பள்ளிகளில் படிப்பதால் தனியாரில் உள்ள அதே தரம், ஆனால் பாதி கட்டணம் என்பதால், அங்கு படிக்க வைக்கும் பெற்றோர்களுக்கு வரிக் குறைப்பு, அம்மாணவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை எனும் அனுகூலங்கள் இருப்பதால் மக்களும் ஆதரிப்பார்கள். 

ஈ) அரசுப் பள்ளிகளின் தரம் குறித்த கவலைகள், அவை மக்களின் வரிப்பணத்தில் நடக்கின்றன எனும் புலம்பல்கள் மறையும் - இப்போது அரசு தான் ஈட்டும் பணத்தைக் கொண்டே இலவச கல்வி உள்ளிட்ட சமூகநீதித் திட்டங்களையும் நிறைவேற்ற முடியும்.

உ) உள்கட்டமைப்புகளுக்கு எங்கே போவது? எப்படி ஒரு சாலை வரும் போது அரசு மக்கள் நிலங்களை எடுத்துக் கொள்கிறதோ அப்படியே தான். இச்சட்டம் வந்த பின் எப்படியும் பெரும்பாலான தனியார் பள்ளிகளின் கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்த கட்டிடங்களை விற்கவோ இடிக்கவோ வேறு விசயங்களுக்கு பயன்படுத்தவோ பூட்டி வைக்கவோ கூடாது என ஒரு சட்டம் போட்டு விட்டால் (இதற்கு எதிராக நீதிமன்றங்களுக்கு போகக் கூடாது, இதில் அரசுக்கு மட்டுமே விதிவிலக்கு எனவும் சட்டம் போட்டால்) அவர்களில் பாதி பேர் அரசுக்கே குறைந்த விலையில் கொடுத்து விடுவார்கள். ஒரு பகுதியில் மூன்றில் ஒரு பகுதியாக செயல்பட போகும் தனியார் பள்ளிகளுக்கான உரிமம் அளிப்பதில் இப்படி விட்டுத் தரும் நிர்வாகங்களுக்கு முன்னுரிமையும், வரிசலுகையும் கொடுக்கலாம் - இது நியாயமா என்றால் பெரும்பகுதி மக்களுக்கு பயன்படும் எதுவுமே - அது சிறுபான்மையை வருத்தினாலும் - நியாயம் தான்.   


(இப்படியான திட்டங்களைக் குறித்து சிந்திக்கிற துணிச்சலும் முன்யோசனையும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருந்தது - அவருக்கு கருத்தியல் தெளிவு இல்லையென்றாலும். அவ்விதத்தில், அவரது மறைவு ஒரு பெரிய இழப்பு தான்.)

கருத்துகள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று இவ்வாறு கூறியுள்ளார்…
மாநில அரசில் 1 முதல் 8 வகுப்பு வரை CCE எனப்படும் Continuous and comprehensive Evaluation என்ற முறைதான் கடந்த பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. 40 மதிப்பெண்கள் Formative Assessment முறையிலும் ( இதில் இரண்டு வகை FA 1, FA 2) 60 மதிப்பெண்கள் Summative Assesment (வழக்கமான தேர்வு) முறையிலும் கணக்கிடப்படுகிறது. இது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டுமே காணமுடியும்.சிபிஎஸ்ஸி பள்ளிகளை விட தமிழக அரசு பள்ளிகளில் சிறப்பாக பின்பற்றப் படுகிறது
Moorthy இவ்வாறு கூறியுள்ளார்…
visionary plan

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...