வணக்கம், அபிலாஷ் சார்.
நாகார்ஜுனரின் சூன்யவாதம் பற்றிய உங்களது பதிவுகளை படிக்க / கேட்கத் துவங்கிய பின், எனக்குள் எழுந்த எண்ணம்:
பருப் பொருட்களில் (matter - wave) சாராம்சம் இருப்பதை தவிர்க்க இயலாது; நாம் ஒன்றைப் பற்றி சிந்தித்து, அதன் மூலம் நாம் வாழும் உலகில், நாம் காணும், உணர்பவற்றில், இல்லாத சாராம்சத்தை இருப்பதாக நினைத்துக் கொண்டு அல்லது அவற்றில் சாராம்சத்தை ஏற்றுவதால், உருவாக்கும் / உருவாகும் பிரச்சனைகள் தான் உண்மையான, நாம் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் ஆகும்;
இது பற்றிய ஒரு தெளிவான, நுண்ணிய புரிதல் இருப்பின், அதனை செயல்படுத்தும் போது, தனி மனித வாழ்க்கை சிக்கல்களற்று எளிமையாகும் அல்லவா?
நேரம் கிடைக்கும் போது பதில் சொல்லுங்கள்.
நன்றி.
ராதாகிருஷ்ண பட்
வணக்கம் ராதாகிருஷ்ண பட்
பருப்பொருட்களின் பருண்மையை நாகார்ஜுனர் மறுப்பதில்லை. உதாரணமாக ஆற்றில் ஓடும் நீர் நீராக இருப்பதன் வேதியல் கூட்டுப்பொருட்களை அவர் ஏற்கிறார். அவற்றையும், புவியீர்ப்பு விசையையும், காற்றின் போக்கையையும் சேர்த்து உடனடி நிலை என்கிறார். ஆனால் இந்த பருண்மையானது சாராம்சமாக தன்னளவில் தோன்றுவதில்லை என்பதே நாகார்ஜுனரின் பார்வை. ஏனென்றால் பருண்மை முதல்முழுதாக தோன்றியது எனில் அதை யாரோ தோற்றுவித்தார் என வருகிறது. இந்த உலகை இவ்வாறாக இறைவன் தோற்றுவித்தார் என பழைய ஏற்பாடு சொல்வது பருண்மையின் சாராம்சத்தை வலியுறுத்தும் இடத்தில் நின்று கொண்டே. அடுத்து இது ஆணுடல், பெண்ணுடலின், ஊனமுற்ற, தாழ்த்தப்பட்ட உடல்களின் பருண்மையை சாராம்சப்படுத்துவதில் போய் முடியும். நம் சமூகத்தின், மனித குலத்தின் இழிவுகள், கொடுமைகள் பருண்மையை சாராம்சப்படுத்தும் புள்ளியில் ஏற்படுகிறது என நினைத்தால் ஆச்சரியம் ஏற்படும்.
நமது பார்வையில் மட்டும் சாராம்சமற்று இருந்தால் போதாது, இந்த பிரபஞ்சத்தின் இருப்புமே சாராம்சமற்றதாக இருப்பதை நம்மால் காண முடிய வேண்டும். அப்போதே நாம் ஒடுக்குமுறைகளில் இருந்து, அகக்கசடுகளில் இருந்து, அறியாமையில் இருந்து விடுபடுவோம்!
நன்றி,
ஆர். அபிலாஷ்

Comments