முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய கிரிக்கெட் அணியின் சாபக்கேடு



இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் நதீம் மிக மோசமாக பந்து வீசினார், அவரது தேர்வே தவறு என ஒரு பார்வை உள்ளது. எனக்கு இதனுடன் முழு உடன்பாடில்லை. 


1) நதீம் ஒரே நீளத்தில், திசையில் வீச முயலவில்லை. இரு வருடங்களுக்கு முன்பு ராஞ்சியில் அவர் அப்படியே வீசி பலரது பாராட்டுக்களைப் பெற்றார். இப்போது என்னவாயிற்று? நதீம் சிறப்பாக ஆடியிருந்தும் தன் இடத்தை இழந்தார். ஜடேஜா தொடர்ந்து ஆடியது, கோலியின் தேர்வில் தொடர்ச்சி இல்லாதது நதீமை இருட்டில் இருக்க வைத்தது. இப்போது இந்த வாய்ப்பும் அவருக்கு எதேச்சையாக அமைந்ததே. நியாயமாக அக்ஸர் ஆடியிருக்க வேண்டும். அல்லது அதை விட நியாயமாக நீண்ட காலமாக இரண்டாவது ஸ்பின்னரின் வாய்ப்புக்காக காத்திருக்கும் குல்தீப் ஆடியிருக்க வேண்டும். அக்ஸர் காயம்பட்ட நிலையிலாவது குல்தீப்பை தேர்வு செய்திருக்க வேண்டும் கோலி. ஆனால் அவர் தன் வழக்கப்படி குல்தீப்புக்குப் பதில் யாரை வேண்டுமானாலும் எடுப்பேன் என நினைத்து நதீமை திடீரென உள்ளே கொண்டு வந்தார். மனதளவில் நதீம் இதற்கு தயாராகவே இருந்திருக்க மாட்டார். மேலும், குல்தீப்புக்கு வர வேண்டிய வாய்ப்பு தனக்கு வந்தது, தன் அணித்தலைவரின் முதன்மைத் தேர்வு தானல்ல என்பது, விரைவில் ஜடேஜா தன் இடத்தை எடுத்துக் கொள்வார் என்பது அவரை முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகள் எடுக்க வேண்டும் எனும் ஆவேசத்தில் வீச செய்து சொதப்ப வழிவகுத்தது என நினைக்கிறேன்.


2) நதீம் பொதுவாக நேராக middle and leg இல் இருந்து வீசி அங்கிருந்து பந்தை திருப்பக் கூடியவர். ஆனால் இந்த போட்டியில் அவர் நிறைய பந்துகளை வெளியே வீசினார். அதோடு பந்தை திருப்பும் ஆவேசத்தில் நிறைய குறைநீளப் பந்துகளைப் போட்டார். இதெல்லாம் அடி வாங்க அவர் மேலும் பதற்றமானார். கோலி எரிச்சலாவது வெளிப்படையாகத் தெரிந்தது. இதை விட மோசமான துவக்கத்தை இங்கிலாந்தின் லீச் பெற்றார். ஓவருக்கு பத்து ரன்கள் விதம் கொடுத்தார். ஒவ்வொரு ஓவரிலும் பண்ட் அவரை சிக்ஸர்களாக விளாசினார். ஆனால் ரூட் அவருக்கு தொடர்ந்து புன்னகையுடன் ஆறுதலளித்தார். அவருக்காக இரண்டு ரெவ்யூக்களை வீணடித்தார். பண்ட் வெளியேறின பின்னர் லீச்சின் பந்து வீச்சு மேம்பட்டது. விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் ரோஹித் ஷர்மாவையும் வீழ்த்தியிருக்கிறார். இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் பெரிய ஸ்கோர் அடித்தது இதற்கு உதவியது என்றாலும் ரூட் தன் இளம் வீரர்களை கையாளும் விதத்தை பாராட்டியாக வேண்டும். அந்த பெரிய மனிசத்தன்மை தான் கோலிக்கு இல்லை. “மகாநதியில்” வரும் துலுக்காணம் கேரக்டரைப் போலவே அவர் களத்தடுப்பாளர்களை, இளம் வீச்சாளர்களை நடத்துகிறார். பேட்ஸ்மேன் அடிப்பார் என்பதை விட கோலி கத்துவார் என்பதே அவர்களை நடுங்க வைக்கிறது. இந்திய அணி பேட்ஸ்மேன்கள் கூட கோலி எனும் ரௌடி உருவாக்கும் நெருக்கடியினாலே பலமுறை கொலாப்ஸ் ஆகிறார்கள் என்பது என் பார்வை. ஆஸ்திரேலியாவில் அவர் போன பின்னர் எவ்வளவு கெத்தாக இளம் வீரர்கள் மட்டையாடினார்கள் பாருங்கள்.


இந்த போட்டியில் கூட நதீம் ரஹானே போன்ற ஒரு அணித்தலைவருக்கு கீழே இன்னும் நிதானமாக வீசி இருப்பார் எனத் தோன்றுகிறது. நான்காவது நாள் ஆட்டத்தில் ரூட் வந்தவுடன் short leg, mid wicket என கால் பக்கம் தடுப்பரணை அளிக்காமல் அவர் நதீமை வீச வைக்கிறார். off பக்கமாய் வைடாய் வீசு என அழுத்தம் கொடுக்கிறார். இது நதீமின் இயல்புக்கு விரோதமானது. டூட் கால்பக்கமாய் பவுண்டரிகள் அடித்து பிளந்து கட்டுகிறார். இப்போது கோலி மேலும் கடுப்பாகிறார். கேப்டன் கடுப்பாவதைக் கண்டு நதீம் இன்னும் மோசமாக வீசுகிறார். அஷ்வினுக்கான களத்தடுப்பு அமைப்பு கூட மோசமாக உள்ளது, இந்திய சூழலுக்கான கள அமைப்பை ஜோ ரூட் இன்னும் சிறப்பாக செய்கிறார் என வர்ணனையாளர்கள் திரும்பத் திரும்ப சொல்லுகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மிக மட்டமான தலைவர் கோலியே எனத் தோன்றுகிறது. அவரது அதிர்ஷ்டம் மோசமான தேர்வுகள், கள அமைப்பையும் மீறி பல டெஸ்ட் போட்டிகளை அவருக்கு கீழ் வென்றிருக்கிறோம்.

3) கோலிக்கு தனிப்பட்ட வாழ்க்கை, கிரிக்கெட் வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை இம்மூன்றுக்கும் வித்தியாசம் காணத் தெரியாது. தனிப்பட்ட வாழ்வின் சிக்கல்களுக்காக, குரோதங்களுக்காக சூர்யகுமார் யாதவ், ரோஹித் ஷர்மா ஆகியோரை அவர் எப்படி பழிவாங்கினார் எனப் பார்த்தோம். இது வீரர்களுக்கு ஒரு பயத்தை உண்டு பண்ணுகிறது. இதுவரை இந்திய வெற்றி பெற்ற தொடர்களில் எப்போதுமே பயிற்சியாளர்களின் பங்களிப்பு பற்றி யாரும் பேசியதில்லை. ஆனால் இம்முறை ஆஸ்திரேலிய தொடர் முடிந்த பின் அந்த மகத்தான வெற்றியை ரவிசாஸ்திரி, பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், மட்டையாட பயிற்சியாளர் ரத்தோர் ஆகியோர் வெளிப்படையாக அணித்தலைவர் ரஹானேவுடன் பகிர்ந்து கொண்டனர். நிறைய பேட்டியளித்தார்கள். ஏன் இதை முன்பு பண்ணியதில்லை? ஏனென்றால் அப்போதெல்லாம் அவர்களுக்கு கோலியின் மீது பயம். வெற்றிகளுக்கு முழு பெருமையும் கோலிக்கே என அர்ச்சனை செய்து விட்டு பயிற்சியாளர்கள் அணி வழிவிட்டு விடுவார்கள். அப்படியான ஒரு சர்வாதிகாரி கோலி.

அணியின் தனிப்பட்ட விருந்துகளில் மனைவி அனுஷ்காவை பங்கேற்க வைப்பது, கிரிக்கெட் விவகாரங்களில் அவரை கருத்து தெரிவித்து சர்ச்சையை உண்டு பண்ண விடுவது, சிலர் சொல்லுவது படி பார்த்தால் கிரிக்கெட் தேர்வில் கூட அவரை தலையிட விடுவது என பல பிரச்சனைகள் இருக்கின்றன.

இப்போது விவசாயிகள் போரட்டத்திற்கு எதிராக அணியினரை டிவீட் போட வைத்தார். இது தேவையில்லாத ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. அடுத்து ஊடகங்களிடம் பேசும் போது “அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் விவசாயிகளின் போராட்டம் குறித்து தம் தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கின்றன” என்றார். இதை அவர் ஏன் சொல்ல வேண்டும்? என்ன நோக்கத்தில் இந்த அரசியலை செய்கிறார்? சில வீரர்கள் அரசுக்கு விரோதமாக இருப்பதாக குறிப்புணர்த்தினாரா? ஒரு புகைச்சலை உண்டு பண்ணுகிறாரா? இது போக பிரதமரை அடிக்கடி தன் மனைவியுடன் சேர்ந்து சந்தித்து புகைப்படம் எடுத்து வெளியிட்டு தன் அதிகாரத்தை காட்டி தேர்வாளர்கள் முதல் வாரிய நிர்வாகிகள் வரை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்.

  கோலி அனுஷ்காவிடம் மட்டுமே நியாயமாக கனிவாக இருக்கிறார். அல்லது அப்படிக் காட்டிக் கொள்கிறார். மனைவி ஆணையிட்டால் எந்த வீரரையும் வெளியேற்ற தயார். மனைவி கேட்டால் பாதி பயணத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பி விடுவார். ஆனால் குழந்தையைப் பார்க்க ஊர் திரும்பும் இந்த உரிமை நடராஜனுக்கோ, தந்தையை இழந்த முகமது சிராஜுக்கோ இல்லை. இந்த ஏற்றத்தாழ்வு அணிக்குள் எப்படியான மனநிலையை ஏற்படுத்தும்? ஒரு முதிர்ச்சியான பொறுப்பான தலைவர் பிற இளம் வீரர்களுக்காக தன் வீடுதிரும்பலை ஒத்திப் போட்டு தியாகம் செய்திருப்பார். ஆனால் கோலிக்குத் தான் அந்த கண்ணியம் இல்லையே. தனது அதிகாரத்தை சட்டையில் பின் வைத்து குத்திக் கொண்டு திரிபவர் அல்லவா அவர்!

 கோலியின் இந்த நிலையற்ற மனப்பான்மை பதின்வயது பையன்களுக்கானது. 

அவர் செய்ய வேண்டியது வீட்டில் கண்டிப்பானவராக, கோபத்தை காட்டுகிறவராக, வெளியே கனிவாக பொறுமையாக இருப்பது. ஆனால் அவருக்கு அதை யாரும் சொல்லித் தரவில்லை போல. ரோஹித் ஷர்மா, அஷ்வின் போன்றோரின் மனைவியரும் தாம் டிவிட்டரில் இருக்கிறார்கள். அவர்கள் கிரிக்கெட் விவகாரங்களில் தலையிட்டு கவாஸ்கர் போன்றோரை அவமதிக்கிறார்களா? இல்லை. ஏனென்றால் வீட்டுக்கும் வேலைக்குமான எல்லையை அந்த வீரர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால் கோலி விசயத்தில் எல்லாமே தலைகீழ். 


இப்படியான ஒரு அணித்தலைவரின் கீழ் ஒரு இளம் சுழலர் எப்படி நிம்மதியாக வீச முடியும்? அடுத்த போட்டியில் குல்தீப் வீச வந்தாலும் அவரது நிலையும் இப்படித்தான் இருக்கும். கோலியின் அணியில் கோலியைத் தவிர வேறு யாருமே நிலையாக நிம்மதியாக ஆட முடியாது! 


இந்திய அணிக்குத் தேவை முதிர்ச்சியான நிதானமான, தன் அதிகாரத்தை பகிர்வதில் அச்சமில்லாத எளிமையான ஒரு தலைவர். தன் அந்தஸ்தை, அதிகாரத்தை தம்பட்டம் அடிக்காத அடக்கமான தலைவர். அப்போதே இளம் வீரர்கள் அந்த அணியில் ஜொலிப்பார்கள்.


இந்திய கிரிக்கெட் அணியின் சாபக்கேடு கோலி எனும் தலைவர்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...