1. டாஸைத் தோற்றதும் இந்திய பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுக்கும் ஆர்வத்தை இழந்து விட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல களத்தடுப்பாளர்களும் எதிர்மறை மனநிலையில் தான் இருந்தார்கள். ஆஸ்திரேலியாவில் நாம் கேட்சுகளை விட்டோம், கவனக்குறைவினால். ஆனால் களத்தில் துடிப்பாய் இருந்தோம். இங்கு முதலிரு நாட்களும் களத்தடுப்பாளர்களின் உடல்மொழி மோசமாக இருந்தது. இதை கோலியே தோல்விக்குப் பின்பான ஊடக சந்திப்பில் ஒப்புக் கொண்டார். இங்கிலாந்து மிகப்பெரிய இலக்கை அடைய இது உதவியது.
2. டாஸைத் தோற்று சிறப்பான மட்டையாட சூழலில் பந்து வீசவும், அதுவே பந்து திரும்பத் துவங்கியதும் மட்டையாட நேர்ந்ததும் இந்திய அணிக்கு நேர்ந்த ஒரு துரதிஷ்டம்.
3. மோசமான அணித்தேர்வு - நதீமை தேர்வு செய்தது. அவர் தொடர்ச்சியாக ஆடவில்லை. அண்மையில் முடிந்த முஷ்டாக் அலி தொடரிலும் சிறந்த ஆட்டநிலையில் இல்லை. ஐந்து போட்டிகளில் மூன்றே விக்கெட்டுகள் தாம் எடுத்திருக்கிறார். ஐ.பி.எல்லில் கூட சொற்ப விக்கெட்டுகளே வீழ்த்தினார். எதிர்பாராது வந்த இவ்வாய்ப்பை அவரால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆனால் உண்மையான பிரச்சனை கோலி ஒருவரை (குல்தீப் யாதவ்) டெஸ்ட் வாய்ப்புக்காக நீண்ட காலமாக வரிசையில் நிற்க வைத்து விட்டு, வாய்ப்பு வந்ததும் தெருவில் போகிற ஒருவரை (நதீம்) பிடித்து மாப்பிள்ளை ஆக்கினது. இதற்கு கோலி சொன்ன காரணம் - குல்தீப்பின் பந்து வலதுகையாளர்களுக்கு உள்ளே வரும், நதீமின் பந்து வெளியே போகும் — ஏற்புடையதாக இல்லை. குல்தீப்பின் கூக்ளி பந்து வெளியே போகும். அவர் கால்சுழலர் வேறு. உண்மையான காரணம் கோலிக்கு குல்தீப்பின் மீது நம்பிக்கை இல்லை என்பது. இப்போது அதை விட பெரிய பிரச்சனை அடுத்த போட்டியில் இந்தியா டாஸ் வென்று குல்தீப் மூன்றாவது நாள் வீச வந்து ஐந்து விக்கெட்டுகள் எடுத்தால் அவர் கோலியின் செல்லப்பிள்ளை ஆகி விடுவார். அடுத்த தொடரில் ஜடேஜாவை மூன்றாவது சுழலராக்கி ஜடேஜா நான்கு போட்டிகளில் விக்கெட் எடுக்காவிடில் ஜடேஜாவை அணியை விட்டு நீக்கி குல்தீப்பை பிரதான் சுழலராக்கி மூன்றாவது சுழலராக யாரோ ஊர் பேர் தெரியாத பையனைக் கொண்டு வந்து அதற்கு ஆயிரம் வியாக்கியானங்கள் சொல்லி .... இப்படி தேர்வு விசயத்தில் கோலி ஒரு முழுப்பைத்தியம். அவரால் தர்க்கபூர்வமாய் யோசிக்க முடியாது. ஒரே சமயம் நான்கு விதமாய் யோசித்து குழப்புவதே அவரது பாணி. எத்தனையோ போட்டிகளை முன்பு கோலியின் அணித்தேர்வினால் இழந்திருக்கிறோம். இப்போது இப்போட்டி. அவ்வளவு தான்!
4. கோலி அமைத்த மோசமான களத்தடுப்புகள், பந்து வீச்சு முடிவுகள் - தொடர்ந்து இளம் நதீமை அவர் அழுத்தம் கொடுத்து அச்சுறுத்தி வந்தது. சுந்தருக்கு இரண்டாவது இன்னிங்ஸில் வாய்ப்பளிக்காதது.
5. கடந்த இரு ஆண்டுகளாகவே நமது துவக்க மட்டையாளர்கள் சதமடிப்பதில்லை. துவக்க மட்டையாட்டம் அமையாததால் நமது 3வது, 4வது எண் மட்டையாளர்களால் சரளமாக அடித்தாட முடிவதில்லை. இதனாலே 35ஐ தாண்ட மாட்டேன் என்கிறோம். இங்கிலாந்துக்கு துவக்க மட்டையாளர்கள் சிறப்பான அடித்தளம் அமைத்துத் தந்ததாலே ரூட்டால் சிறப்பாக, ஓரளவுக்கு சுதந்திரமாக ஆட முடிந்தது. இதுவே அவர் 30/3 எனும் நிலையில் வந்திருந்தால் இங்கிலாந்து 280 தாண்டி இருக்காது.
6. மத்திய வரிசையில் இப்போதைக்கு பிரச்சனைக்குரிய எண்கள் 4 + 5. ரஹானே தொடர்ச்சியாக ரன் அடித்து சில வருடங்கள் ஆகின்றன. கோலி சதமடித்தும் காலமாகிறது. எண் 3, 6, 7 ஆகியவற்றை சரி செய்து விட்டோம். 4 + 5 எண்ணின் சீனியர்கள் ரன் அடிக்க ஆரம்பித்தால் இந்திய அணி பெரிய இன்னிங்ஸை விரைவில் எடுக்கும்.
7. இப்போட்டியில் இஷாந்த் என்னதான் சிக்கனமாக வீசியிருந்தாலும், அவரிடத்தில் தாகூரை எடுத்திருந்தால் அது நமது முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 450ஐ தொட உதவியிருக்கும். சுந்தரும் சதம் அடித்திருப்பார். தாகூரை எடுக்காததால் இந்திய கீழ்மத்திய வரிசை மட்டையாட்டம் பலவீனமாகி விட்டது. இஷாந்துக்கு வயசாகிறது. இனி அவரை இந்தியாவில் ஆட வைப்பது வீண். வெளிநாட்டில் மட்டும் வீச வைத்து விட்டு, பெரும்பாலான போட்டிகளில் தாகூர் போன்ற இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பதே அணியை வளர்க்க உதவும். இதே இஷாந்த் 4வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடியிருந்தால் இந்தியா நிச்சயமாக தோற்றிருக்காதா? யோசியுங்கள்.
8. பும்ரா என்னதான் சிறப்பாக அவ்வப்போது வீசினாலும் அவர் முழுமையான உடல்தகுதியுடன் இல்லை. அவரால் குனிந்து பந்தை எடுக்க முடியவில்லை. முதுகுக்காயம் போல. இது அவரது ரன்னப்பை, ரிதமை நிச்சயமாக பாதித்தது. அவரிடத்தில் நல்ல உடற்தகுதியுடன், சிறந்த ஆட்டநிலையில் இருக்கும் முகமது சிராஜை கொண்டு வந்திருக்கலாம். மட்டையாட்டத்திலும் சிராஜ் கூடுதலாக 30 ரன்கள் சேர்க்கக் கூடியவர். பும்ராவால் உடல் பிரச்சனை காரணமாக கவனித்து மட்டையாட முடியவில்லை. மூச்சுக்கு முன்னூறு முறை உடல்தகுதியின் முக்கியத்துவம் பற்றி பேசி விட்டு குனிய முடியாத ஒரு வீரரை தேர்வு செய்யும் என்ன கட்டாயம் கோலிக்கு ஏற்பட்டது? ஒரே காரணம் தான் - கோலியின் குழப்பவாதம், பிடிவாத சுபாவம், நெருக்கடியை சமாளிக்கத் தெரியாதது!
9. இது மிக முக்கியமான காரணம் - இந்த போட்டி இப்படி போகும் என இந்திய அணி எதிர்பார்க்கவில்லை. ஆஸ்திரேலிய தொடரின் போது ஒரு மாதத்துக்கு மேலான பயிற்சி, தயாரிப்பு இருந்தது, திட்டமிடல் ஆறு மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்து விட்டிருந்தது என பந்து பயிற்சியாளர் பரத் அருண் சொல்கிறார். ஆனால் இத்தொடரை எப்படி ஆடினாலும் ஜெயித்து விடுவோம் எனும் மிகை நம்பிக்கையுடன் நம் ஆட்கள் இருந்தார்கள். ஒரு படு தட்டையான ஆடுதளத்தில் இங்கிலாந்து மட்டையாளர்கள் டாஸை வென்று இப்படி பட்டையை கிளப்புவார்கள் என இந்தியா எதிர்பார்க்கவில்லை. போதுமான திட்டமிடல், தயாரிப்பு இல்லை. கோலி தன் குழந்தையின் டயப்பரை மாற்றிய புளகாங்கிதத்துடன் முதல் போட்டியை ஆட வந்து விட்டார். நடுவே மத்திய அரசுக்காக டிவீட் போட்டது, அதைப் பற்றி அணியில் விவாதம் நடத்தியது வரை தேவையில்லாத விசயங்களிலே அவரது கவனம் இருந்தது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஜடேஜா இல்லையென்றானதும் தேர்வாளர்கள் மாற்று குறித்து அதிகமாய் யோசித்ததாய் தெரியவில்லை. அக்ஸர் பட்டேல் உள்ளூர் போட்டிகளிலேயே பிஸ்தா ஸ்பின்னர் அல்ல. அவரை ஒரு மாற்றாக கருதியதே அபத்தம் தான். பதிலாக இரண்டு நல்ல இளம் கால் சுழலர்களை அணிக்குள் கொண்டு வந்திருக்கலாம். எதுவும் நடக்கவில்லை. அதன் விளைவு பந்து வீச்சின் தரத்தில் தெரிந்தது.
10. தேர்வு, திட்டமிடல், பயிற்சி, முனைப்பு, களத்தடுப்பு, உடல்தகுதி என எல்லா விசயங்களிலும் இங்கிலாந்து மேலான அணி. அதுவே நியாயமாக வென்றிருக்க வேண்டும். அதுவே வென்றது.
இனி என்ன செய்யலாம்?
இனியும் இத்தொடரை காப்பாற்ற முடியும். அதற்கு
1. அடுத்து வரும் ஒவ்வொரு போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் இரண்டு பேராவது சதமடிக்க வேண்டும். குறைந்தது 400-450ஐ எட்ட வேண்டும். இதை ஒரு பொறுப்பாக, முக்கிய இலக்காக எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. குல்தீப், ராகுல் சஹார் போன்ற கால் சுழலர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் - அது இங்கிலாந்தின் முக்கியமான பலவீனம். அக்ஸர் காயத்தில் இருந்து மேம்பட்டால், அவர் மூன்றாவது சுழலாக இருக்கலாம். ஒரு போதும் அவரை இரண்டாவது சுழலராக பயன்படுத்தக் கூடாது. அக்ஸர் அணித்தலைவராக இருந்தால் கூட அப்படியான முடிவை எடுக்க மாட்டார். சுந்தரை ஒரு மட்டையாளருக்கு (ரஹானேவை துவக்க மட்டையாளராக்கலாம் அல்லது நீக்கலாம்) பதிலாக ஆட வைக்கலாம். அவர் நான்காவது சுழலராக 5-8 ஓவர்கள் மட்டும் வீசட்டும்.
3. கோலியுடனான லடாய் காரணமாகவோ என்னவோ ரோஹித்தின் மட்டையாட்டம், களத்தடுப்பு மிக மட்டமாக இருந்தது. அவரிடம் தேர்வாளர்கள் பேச வேண்டும் - விருப்பமில்லையெனில் (விருப்பமிருந்தாலும் கூட) அவர் விலகிக் கொள்ளட்டும். அவரிடத்தில் கெ.எல் ராகுல் / பிரியங்க் பஞ்சல் / அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோரில் ஒருவரை கொண்டு வரலாம். எப்படியும் ரோஹித்துக்கு வயதாகி விட்டது என்பதால் அவர் இனி ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துவதே நலம்.
4. அடுத்த போட்டியில் இருந்தே நான் இத்தகைய மாற்றங்களை விரும்புவேன் - ஒரு இளைய அணியே துடிப்பாக ஆடும். இதை ஆஸ்திரேலியாவில் பார்த்தோம். காயத்தில் இருந்து மீண்டு வரும் சீனியர்கள் செட்டில் ஆகவே நாளெடுக்கும். அவர்கள் களத்தடுப்பில் மெதுவாக இருப்பார்கள். கோலி, ரஹானே, அஷ்வின் தவிர மிச்ச 8 பேரும் இளம் வீரர்களாக இருந்தால் இத்தொடரை நிச்சயமாக இந்தியா வெல்லும்.
5. அடுத்த மூன்று போட்டிகளில் இரண்டிலாவது டாஸை வெல்ல வேண்டும்!
6. இந்தியாவின் வெற்றிக்கு மிகப்பெரிய இடையூறு கோலியின் முடிவுகள், தேர்வுகள், நிலையற்ற மன அமைப்பு, தேவையில்லாமல் கொந்தளிக்கும் சுபாவம், (மனைவியைத் தவிர வேறெதிலும்) தொடர்ச்சியின்மை. ஆக இந்தியா கோலியையும் மீறி இத்தொடரை வென்றாக வேண்டும். கோலி தலைமையேற்ற கடந்த நான்கு டெஸ்ட் போட்டிகளை இந்தியா இழந்திருக்கிறது. இங்கிலாந்துக்கு இரண்டு அணித்தலைவர்கள்; நேரடித் தலைவர் ரூட்; மறைமுகத் தலைவர் கோலி. கோலி செய்கிற ஒவ்வொன்றுமே இங்கிலாந்துக்கு சாதகமாகும் போது அவரையும் மீறி நாம் வென்றாக வேண்டும் - ஆகையால் அது ஒரு மகத்தான சாதனையாக இருக்கும்

Comments