முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாஜகவின் ஊடக டூல் கிட் சொல்லும் சேதிகள்!


கடந்த ஆண்டு முதற்கொண்டு ஜீயின் அரசு தன்னைக் குறித்த பிரச்சாரத்தில் ஊடகங்கள் இன்னும் மும்முரமாக ஈடுபட வேண்டும் என நோக்கில் ஊடகவியலாளர்கள், ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து பல கலந்துரையாடல்களை நடத்தி அதில் பேசப்பட்ட கருத்துக்களை தொகுத்து ஒரு 'டூல் கிட்' தயாரித்துள்ளது. (பார்க்க இணைப்பில் உள்ள படங்களை) இதில் எப்படி அரசுக்கு பத்திரிகையாளர்கள், நெறியாளர்கள், பேஸ்புக், டிவிட்டர் பிரபலங்களை ஊக்குவிக்க வேண்டும், அரசை விமர்சிப்பவர்களை காயடிக்க (neutralize) வேண்டும் (அதிஷா, செந்தில் போன்ற பல ஊடகவியலாளர்கள் அண்மையில் வேலை நீக்கம் செய்யப்பட்டது நினைவிருக்கும்), ஊடகங்கள் பொருளாதார நெருக்கடியில் இருப்பதை பயன்படுத்தி அரசு ஆதரவு ஊடகங்களுக்கு நிதியுதவி அளித்து வளைத்துப் போட வேண்டும், இப்போதைக்கு 75% ஊடகக்காரர்களை நம்மை ஆதரிக்கிறார்கள், மிச்ச 25%யும் வீழ்த்த வேண்டும், அரசை புரொமோட் செய்யும் பணியில் முன்னாள் ராணுவ அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட வேண்டும், பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் கதையாடல்களை திணிக்க வேண்டும், the print மாதிரியான சில இணைய இதழ்களை குறிப்பிட்டு அவற்றை முடக்க வேண்டும் என்பது போன்ற பல 'அற்புதமான', 'முத்தான' பரிந்துரைகள் உள்ளன. இவற்றில் என் கவனத்தை உடனடியாகக் கவர்ந்தது எல்லா பிராந்திய மொழிகளிலும் உள்ள பாஜக ஆதரவு எழுத்தாளர்களைக் கண்டடைந்து அவர்களை ஊக்கப்படுத்தி ஆதரவளிக்க வேண்டும் எனும் பரிந்துரை.
 இந்த வேலையை ஜீயின் அரசு ஏற்கனவே எல்லா மாநிலங்களிலும் ஆரம்பித்து விட்டதன் தாக்கத்தை தமிழில் வெளிப்படையாகவே இப்போது காண்கிறோம். முன்பு முற்ப்போக்காக தெரிந்தவர்கள் தடாலடியாக இந்துத்துவ எழுத்தாளர்கள் ஆகி விட்டார்கள். ஆனால் இது ஒரு சித்தாந்த மாற்றம் அல்ல, அப்படி பொதுப்படையாகத் தோன்றினாலும். இவர்கள் அதிகார மோகிகள் மட்டுமே, அசல் சங்கிகள் அல்ல. ஒரு சின்ன அங்கீகாரம், விருது, தொடர்பு வலை ஆகியவற்றுக்காக ஒரு நாள் தூங்கி எழுந்ததும் சங்கி ஆகி விட்டவர்கள். நாளை அரசு மாறியதும் இவர்கள் மீண்டும் தம்மை முற்போக்காளர்களாக காட்டிக் கொள்வார்கள். இன்று மிகத்தீவிரமாக பாஜகவை ஆதரித்து காங்கரசை பழித்து எழுதும், பேசும், கதறும், உதறும் பல ஊடக முகங்களும் பச்சோந்திகள் தாம். ஒரு ஆர்.எஸ்.எஸ்காரனைக் கூட மன்னிக்கலாம், திருத்தலாம், ஆனால் இவர்கள் அவனை விட கொடூரமானவர்கள். நாளொரு மேனி, பொழுதொரு தோற்றம். யார் மீதும் அக்கறை இல்லை, எதன் மீதும் பற்றுதல் இல்லை. அதிகார வளையத்தில் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதைத் தவிர.

அண்மையில் நான் ஊடகங்களிலும்,சமூகவலைதளங்களிலும் ஜீ ஆதரவாளர்களை சங்கி என அழைக்கும் பழக்கத்தை விட்டு விட்டேன். ஏனென்றால் அவர்கள் நாளை ஆட்சி மாறியதும் நம் தோளில் கையிட்டு "தோழர்" எனக் கொஞ்சுவார்கள். அந்த அரசிடம் போய் தெண்டனிட்டு "முந்தின பாஜக ஒரு பாசிசக் கட்சி" எனக் கூறுவார்கள். 

இன்னொரு விசயம் அண்மையில் ஜீ எடுத்த பல சர்வாதிகார நடவடிக்கைகள் மீது ஒரு அதிருப்தி, கோபம் பொது மக்களிடையே ஏற்பட்டுள்ளதை அவரே உணர்ந்துள்ளார்கள். அதனால் தான் ஊடகங்களை மகுடியாகக் கொண்டு  மக்களை கூடுதலாக ஊதி மயக்க வேண்டும் என முடிவெடுத்திருக்கிறார். இது ஜீயின் அநீதிகளை, பிழைகளை விமர்சிப்பவர்களுக்கு ஊக்கமளிக்கும் சேதி! 25% என்றாலும் அவர்கள் சொல்வதே மக்கள் மனசாட்சியின் குரல் என ஜீக்குத் தெரியும், அவர் அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள மாட்டார் என்றாலும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...