முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதிமுகவின் சுழல்வட்டப்பாதை

 




நேற்று பழைய அதிமுக வரலாற்றைப் பற்றி ஒரு நண்பருடன் அரட்டையடித்துக் கொண்டிருந்தேன், குறிப்பாக எம்.ஜி.ஆர் மறைவை ஒட்டி நிகழ்ந்தவை. ஒரு ஆச்சரியம் இன்று பாஜக அதிமுகவுக்கு செய்து கொண்டிருப்பதை எண்பதுகளிலேயே காங்கிரஸ் இதே அதிமுகவுக்கு செய்திருக்கிறது என்பது:


 எம்.ஜி.ஆர் முதல்வராக இருக்கையில் ஜெயா காங்கிரஸ் தலைமையுடனான ஒரு புரிந்துணர்வுடன் செயல்படுகிறார் என ஜானதி கோஷ்டி நினைத்தது, அவர்கள் இதை ஓரளவுக்கு எம்.ஜி.ஆரையும் நம்ப வைத்தார்கள் என நினைக்கிறேன். எம்.ஜி.ஆர் அமெரிக்காவுக்கு சிகிச்சை பெற்று திரும்பி, பின் தொடர்ந்து சிகிச்சையில் இருக்க நேர்ந்தது. அப்போது அவர் ஜானகி மீது அதிகம் நம்பிக்கை கொள்ள நேர்கிறது. இந்த சந்தர்பத்தில் அவர் காலமாக ஜானகி தரப்பு கட்சித் தலைமையையும் அதிகாரத்தையும் கைப்பற்றுகிறது. ஆனால் ஜெயலலிதா நம்பிக்கையுடன் இதற்கு எதிராக போராடுகிறார். யார் கொடுத்த நம்பிக்கை? மத்தியில் ஆண்ட காங்கிரஸ் தலைமை அளித்த நம்பிக்கை தான். ஆனால் காங்கிரசார் அப்போது ஜானகி வலுவாக அதிமுகவை தன் வசம் கொண்டு வருவார் என எதிர்பார்க்காததால், ஜெயா தனக்கே ஆட்சிக்கட்டில் அளிக்கப்படும் என எதிர்பார்த்தது போல உடனடியாக நடக்கவில்லை. இழுபறி. ஜெயலலிதா தன் ஆதரவு எம்.எல்.ஏக்களை இந்தூரில் ஒரு நட்சத்திர விடுதியில் தங்க வைக்கிறார். ஜானகி தரப்பு எம்.எல்.ஏக்களை சென்னையில் ஐந்து நட்சத்திர விடுதியில் அதிக வசதிகளுடன் சிறை வைக்கிறது. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் தலைமை ஜானகி ஆட்சி அமைக்க சம்மதம் நல்க ஆளுநர் ஏற்கிறார். 1988 ஜனவரி முதல் வாரம் ஜானகி முதல்வர் ஆகிறார். 24 நாட்களே நீடிக்கிறார். சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வன்முறை சம்பவங்கள், குழப்படிகள் நிகழ, சபாநாயகர் ஜானகி தரப்புக்கு சாதகமாக தீர்ப்பளிக்க, மத்திய அரசு ஆடையைக் கலைக்கிறது. அதுவரை ஜானகி தரப்பு ஆட்சிக்கட்டிலில் இருக்கட்டும் என அனுமதித்த காங்கிரஸ் தலைமை ஒரு யுடர்ன் எடுக்கிறது. அதன் பின்னர் நடந்த தேர்தலில் ஜெயா தரப்பு அதிமுக அதிக இடங்களைப் பெற்று பிரதான எதிர்க்கட்சியாக ஜானகி பூஜ்யமாகி மொத்த கட்சிப் பொறுப்பு, அதிகாரத்தையும் ஜெயாவிடம் கொடுத்தது, அதற்கடுத்து திமுக ஆட்சி கலைக்கப்பட்டது, தேர்தலின் போது ராஜீவ் காந்தி படுகொலையினால் விளைந்த திமுக எதிர்ப்பலையை பயன்படுத்தி காங்கிரஸ்-அதிமுக கூட்டணி வென்றது, ஜெயா முதல்வரானது் அனைவரும் அறிந்த வரலாறு. 

அதிமுகவின் ஒரு பிரச்சனை அது ஒற்றை தலைமையை நம்பி இருந்த கட்சி, கட்சித் தலைவர் காலமானால் தலைமைக்கு வருவதற்கு அவருக்கு தகுந்த குடும்ப வாரிசோ வலுவான குடும்ப பின்னணியோ இருந்ததில்லை என்பது. அது மட்டுமல்ல எப்போதுமே - திமுகவுடன் ஒப்பிடுகையில் - அதிமுகவின் தலைவர்களுக்கு ஆயுள் குறைவு. தலைமையின் உடல்நிலை மோசமானதுமே மத்தியில் உள்ள தலைமை அதிமுகவை கைப்பற்றுவதற்கான காய்நகர்த்தல்களை ஆரம்பித்து விடுகிறது. ஒரே சமயம் இரண்டு மூன்று தலைமைகளை அதிமுகவில் உருவாக்கி அதை உடைத்து முழுக்க தம் வசம் கொண்டு வந்து தம் கைப்பாவையாக வைத்து ஆட வைக்கிறார்கள். அன்று ஜானகி-ஜெயா தலைமை இருமை என்றால் இன்று ஜெயாவின் மறைவுக்குப் பின் ஒ.பி.எஸ்-எடப்பாடி இருமை. இருவரையும் பரஸ்பரம் கோள் மூட்டி மோத விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள், தேவைப்படும் போது அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து மற்றவரை சமாதானப் போகத் தூண்டுகிறார்கள். பிறகு அதிகாரத்தில் இருப்பவர்கள் தமக்கு முழுக்க அடங்க வில்லை என்றால் எதிர்தரப்புக்கு தூபம் போட்டு அவர்களை வலுப்படுத்தி மோத விடுவார்கள். நெருக்கடியில் அதிகாரத் தரப்பு நடுவண் அரசின் காலில் விழும் போது சசிகலாவைப் போல ஒரு மூன்றாவது தரப்பை கூட கொண்டு வந்து ஆட்டத்தை சிக்கலாக்கி குட்டையை குழப்புவார்கள். அதுமட்டுமல்ல, எப்படி சசி தான் ஜெயாவைக் கொன்றார் என புரளி கிளம்பியதோ அன்றும் அப்படியே அன்றும் எம்.ஜி.ஆரைக் கொன்றது ஜெயா என பேச்சு இருந்தது. அது மட்டுமல்ல, 1984இல் எம்.ஜி.ஆருக்கு ஸ்டுரோக் வந்து விட தளர்ந்து போகிறார். அப்போது ஜெயா (மத்திய அரசின் உதவியுடன்) ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயன்றதாகவும் ஒரு பேச்சு உண்டு. ஜெயாவின் இறுதிக் கட்டத்தில் அவர் மோசமான உடல்நிலையில் இருந்ததால் சசியே பின்னணியில் நின்று தமிழகத்தை நிழல் ஆட்சி செய்தார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த பேச்சையெல்லாம் அப்போது கிளப்பி விட்டது மத்தியில் இருந்த சூத்திரதாரிகளோ எனத் தோன்றுகிறது. இப்போதும் தான்.

 

இந்த வரலாற்றின் ஒரு சிறிய பகுதியாக அன்று இருந்ததனால் தான் சசிகலா ஜெயாவின் மரணத்துடன் எம்.எல்.ஏக்களை தன் வசம் கொண்டு வருதல், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை, ஜெயாவின் பிம்பத்தின் நீட்சியாக தன்னை வடிவமைத்தல், அடுத்த முதல்வராக காட்டிக் கொள்ளுதல் என காட்சிகளை அரங்கேற்றினார். ஆனால் காங்கிரஸ் அன்று கட்சியை உடைத்து பலவீனப்படுத்தியதைப் போல அல்லது அதை விட மோசமாக தன் கால அதிமுகவுக்கு நிகழும் என சசி எதிர்பார்க்கவில்லை; அல்லது அவருடைய மனக்கணக்குகளை மீறி வரலாறு சென்று விட்டது. மேலும் ஜெயா அளவுக்கு அவருடைய தோழிக்கு மக்கள் ஆதரவோ புகழோ மதிநுட்பமோ இல்லை.


எண்பதுகளில் இந்த திரைமறைவு அரசியலின் சூத்திரதாரியாக இருந்த ராஜீவ் அடுத்து வந்த தேர்தலின் போது கொல்லப்பட்டதும், அதன் பலனை பயன்படுத்தி ஜெயா முதல்வர் ஆனதும் யாரும் அன்று எதிர்பார்த்திராத டிவிஸ்ட். அப்படி ஒரு அதிர்ஷ்டம் இம்முறை அதிமுக தலைமைக்கு அமையவில்லை. அதே போல இன்று பாஜக அதிமுகவை முழுக்க தம் வசப்படுத்தி, திமுகவை இல்லாமல் செய்து விரைவில் அந்த வெற்றிடத்தில் ஆட்சியை அமைககலாம் என வெளிப்படையாக கனவு காணும் அளவுக்கு கொடூரமாக அன்றைய காங்கிரஸ் இருக்கவில்லை; அல்லது அவர்களுக்கு இவர்களுடைய திராணியோ வெட்கமானமற்ற முரட்டுத்தனமோ இல்லை.


ஒரே சுழல்வட்டப்பாதை தான் - அதில் அதிமுக திரும்பத் திரும்ப மாட்டிக் கொள்கிறது! விடிவே இல்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...