முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாதியை ஒழிப்பது எப்படி?



சாதி கடந்த திருமணங்களால் சாதியை ஒழிக்க முடியாது, பெற்றோர்களில் ஒருவருடைய சாதியை குழந்தைக்கு அளிப்பதை தவிர்க்க முடியாது தானே என கோகுல் எழுதியிருந்தார். ஆம், ஆனால் இத்திருமணங்களால் சாதியை நிச்சயமாக தளர்த்த முடியும் என நினைக்கிறேன். இது மதப்பிடிப்புக்கும் பொருந்தும். இதை என் நேரடியான அனுபவத்தில் இருந்தும், நான் பார்த்த மனிதர்களில் இருந்தும் உறுதியாக சொல்ல முடியும். வீட்டில் தாய் தந்தையர் சாதி, மதத்தில் பிடிப்பின்றி, நம்பிக்கையின்றி இருந்தால் குழந்தைகளும் பெரும்பாலும் அப்படியே வளரும். இரண்டு நிபந்தனைகள்: 1) தாம் ஏன் அப்படி இருக்கிறோம் என சித்தாந்தரீதியாக குழந்தைக்கு சொல்லி வளர்க்க வேண்டும்; 2) சொந்த பந்தங்களுடன் பெரிய ஒட்டுறவில்லாமல் பலவித பின்னணியில் இருந்து வருகிற நண்பர்கள் சூழ வாழ் வேண்டும். நம்மால் இவையிரண்டையும் செய்ய முடியாமல் - எதிர்பாலின ஈர்ப்பினால் மட்டுமே சாதியை மீறி திருமணம் செய்தவராக இருந்தால் - குழந்தையும் சாதிச்சகதிக்குள் மாட்டிக் கொள்ளும். எனக்கு தெரிந்த ஒரு நண்பர் சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர். அந்த மதத்தின் எந்த சடங்குகள், வழிமுறைகள், நம்பிக்கைகளையும் ஏற்காமல் வாழ்கிறவர். அவர் மனைவி பெரும்பான்மை மதத்தவர். அவரும் அப்படியே. குழந்தை பெயரளவில் மட்டும் இந்துவாக வளர்கிறது.


சாதி மனித உறவாடல்களால் மட்டுமே உயிர்க்கிற ஒரு ஜீவி. அதைக் கொல்ல உறவாடலை துண்டித்தாலோ மாற்று உறவாடல்களை உண்டு பண்ணினாலோ போதும். 


ஆனால் இத்துடன் மட்டுமே நிறுத்தி விடலாகாது - இன்னும் மூன்று காரியங்களை செய்ய வேண்டும்:


 1) பொருளாதார அடிப்படையிலும் சாதிப் படிநிலை தக்க வைக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சாதியினர் பல தலைமுறைகளாக அதிக பொருளாதார வலுவுடன் இருப்பார்கள். காரணம் விவசாயம் செய்ய நிலமும், வியாபாரத்துக்கான முதலீடு, இறுதியாக சமூக முதலீடும் அவர்கள் வசம் இருக்கும். இதை உடைப்பதும் அவசியம். நான் இப்போது சொல்லப் போவதை பெரும்பாலானோர் ஏற்க மாட்டீர்கள். ஆனால் இது என் உறுதியான நம்பிக்கை - வாரிசு சொத்துரிமையை நாம் சட்டரீதியாக ரத்து செய்ய வேண்டும். ஒருவர் இறந்த பின்னர் அவருடைய சொத்து பொதுச்சமூகத்துக்கு ஆனதாக வேண்டும். வசந்த் ஆண்டு கோ நிறுவனருக்குப் பின்னர் அவருடைய சொத்துக்கள், வியாபாரம் அவருடைய பிள்ளைகளுக்கு செல்லும். அவரை நாடி இருந்த மக்களும் இப்போது அவருடைய பிள்ளைகளை நாடி இருக்க ஆரம்பிப்பார்கள். இது சாதியுணர்வை பலப்படுத்தும். வலுவான சாதியை சேர்ந்தவர்கள் என தம்மை அடையாளப்படுத்தி பெருமைப்பட மக்கள் விரும்புவார்கள். மாறாக இந்த சொத்து, பணம், வியாபாரம் ஆகியவை பொதுச்சொத்தாகி விட வேண்டும். வியாபாரத்தை அரசே எடுத்து நடத்தி அதில் இருந்து வரும் லாபத்தை மக்கள் நலத்திட்டங்களுக்காக செலவிடலாம். அல்லது குறிப்பிட்ட ஊரில் உள்ள அனைத்து மக்களையும் அச்சொத்தில் பங்குதாரராக்கி அவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டோரை வைத்து ஒரு குழுவை உருவாக்கி வியாபாரத்தையும் பணத்தையும் நிர்வகித்து லாபத்தை மக்களுக்கு பகிர்ந்து அளிக்கலாம். இப்போது நீங்கள் எந்த வலுவான சாதியை சார்ந்தவர் என்றாலும் இந்த உலகத்தில் எந்த சொத்தும், பின்னணியும் இல்லாதவராக எல்லாரையும் போல சமமாக நீங்கள் உங்கள் வாழ்க்கையை பூஜ்யத்தில் இருந்து ஆரம்பித்தாக வேண்டும். நீங்கள் குப்பை அள்ளுகிறவரின் மகன் என்றாலும் மருத்துவரின் மகன் என்றாலும் ஒரே முதலீட்டுடனே வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும். தனிமனிதர்களிடம் இவ்வளவு தான் பணமும் சொத்தும் இருக்கலாம் என ஒரு வரம்பை கொண்டு வந்தால் பெரும்பகுதி முதலீடும் சொத்துக்களும் அரசிடமும் பொதுசமூகத்திடமுமே இருக்க முடியும் எனும் நிலைவந்தால் கல்வியில் தனியாருக்கு இடமே இருக்காது. எல்லா பிள்ளைகளும் ஒரே வசதியுடன் கல்வித்தரத்துடன் படித்தாக வேண்டும். இது ஒரு சாதிக்கான சமூக முதலீட்டையும் காலி பண்ணி விடும். ஹரி நாடார் போல ஒருவர் நகைகளுடன் சுற்ற முடியாது. அம்பானியின் மகன்கள் சம்பாதிக்கும் முன்பே பெரும் நிறுவனங்களின் முதலாளி ஆக முடியாது.


 இன்னொரு விசயம், நாம் வழிவழியாக பெற்ற நிலமும், அடைந்த பொருட்கள் மீதான உரிமையும் சாதியை தோற்றுவிப்பதில்லை, ஆனால் இவற்றை நமது வம்சத்தினருக்கு கடத்தலாம் எனும் நம்பிக்கை ஒரு தொடர்ச்சியை உண்டு பண்ணி அதுவே மரபு, வரலாறு, சம்பிரதாயம், சாதி என ஒரு கேடுகெட்ட கட்டமைப்பை உருவாக்குகிறது. சாதிய தொடர்ச்சிக்கு பௌதீகமான உருவத்தை அளிப்பது சொத்து தான். அதனால் இதை ரத்து பண்ணினால் சாதி பெருமளவில் தளர்ந்து விடும். 


சிலர் சொத்தையும் பணத்தையும் பிள்ளைகளுக்கு கொடுக்க முடியாவிட்டால் மக்களுக்கு வேலை செய்யும் ஆர்வமே போய் விடுமே என சொல்லுவார்கள். எனக்கு இதில் நம்பிக்கை இல்லை. பணம் சம்பாதிக்க நமக்கு ஒரு நோக்கம், அர்த்தம் வேண்டும். தன்னை செலவு செய்கிற உரிமையே பணமே முதலில் தந்து விடுகிறது. எந்த சந்தையில் சம்பாதித்தோமே அங்கே திரும்ப கொடுக்கிறோம். இந்த பரிவர்த்தனை தரும் மதிப்பைக் கொண்டு நமக்கான அந்தஸ்தை உருவாக்குகிறோம். அடுத்து எதிர்கால கனவுகள். ஆனால் பிள்ளைகளைப் பற்றின கவலையில்லாதவர்கள் சம்பாதிப்பதுடன் மகிழ்ச்சியாகவும் வாழலாம் என நம்புகிறேன். 


  2) இறுதியாக நான் அளிக்கும் பரிந்துரை கடுமையானதாக, 99% ஆட்களாலும் ஏற்க முடியாததாக இருக்கும் என அறிவேன். இதை பிளேட்டோ தனது Republic நூலில் முன்பே பரிந்துரைக்கிறார். “ஏற்றத்தாழ்வை ஒழிக்க தனது லட்சிய சமூகத்தில் பிள்ளைகளை பெற்றோர்கள் வளர்க்காமல் அரசே வளர்க்க வேண்டும். எந்த பிள்ளைக்கும் தன் பெற்றோர் யாரெனும் விபரங்களை அளிக்கக் கூடாது” என சாக்ரடீஸ் சொல்கிறார். அப்போது அவரது நண்பர்களும் சீடர்களும் இதன் நடைமுறை சிக்கல்களை எடுத்து வைக்கிறார்கள். இதை ஒட்டி ஒரு விவாதம் ஏற்படுகிறது. நான் இதை சற்றே லகுப்படுத்தி பிள்ளைகளை பெற்றோரே வளர்க்கட்டும், ஆனால் சட்டரீதியாக அதை அங்கீகரிக்க வேண்டாம் என பரிந்துரைக்கிறேன். ஒருவர் தன்னுடைய பெயருக்கு முன்னால் பெற்றோரின் பெயரை சேர்ப்பது, விண்ணப்ப படிவங்களில் திரும்பத் திரும்ப எழுதுவது முன்பு மக்கள் சிறிய கிராமங்களில் வாழ்ந்த போது பெற்றோர், தாத்தா பாட்டியால் அறியப்பட்ட போது தேவைப்பட்டது. இனி அதற்கான அவசியம் இல்லை. இன்று ஐந்து வயது குழந்தை கூட தனக்கு ஒரு தனி அடையாளம் உண்டென நம்புகிறது. இங்கு பிறக்கிற ஒவ்வொருவரும் முழுக்க சுதந்திரமானவராக இருக்கட்டும். பிறந்த பின் குழந்தைகள் தத்தமது அடையாளத்தை தாமே உருவாக்கட்டும். “என் மகன் என் மகள்” என யாரும் பெருமைப்பட வேண்டாம். என் தாய், என் தகப்பன் என யாரும் உருக வேண்டாம். சொல்லப் போனால் ஒரு குழந்தையின் பெயரைக் கூட பத்து வயதுக்குப் பின் அதன் ஒப்புதலுடன் தேர்ந்தெடுப்பதே நியாயமாக இருக்கும். இதை நம்மால் செய்ய முடிந்தால் சாதியின் சவப்பெட்டியில் அடிக்கிற இறுதி ஆணியாக இது இருக்கும். 


இட ஒதுக்கீடு? அது இப்போதைய முதலீட்டிய அமைப்புக்குள் இருந்தபடி சமத்துவத்தை நிறுவுவதற்கான முயற்சி. ஓரளவுக்கு இது வெற்றி பெற்றுள்ளது என்றாலும் சமத்துவம் எட்டாக் கனவாகவே இருக்கக் காரணம் முதலீடும் சொத்தும், கூடவே குடும்ப பந்தங்களும் தாம்.  வழிவழியாக பொருளாதார, குடும்ப ரீதியாக ஒரு தொடர்ச்சி ஏற்படாமல் தடுக்க முடியும் என்றால் ஒரு புதிய சமூக அமைப்பில் சமூக முதலீடுகள் (சொந்த சாதியினருக்கு வேலையில், வியாபாரத்தில் தொடர்புகளை உருவாக்கி ஆதரவளிப்பது) இருக்கும் வரை, முழுமையான சமூக மாற்றம் நிகழும் வரை, மட்டுமே இட ஒதுக்கீடு தேவைப்படும் என நினைக்கிறேன்.


நான் மேலே பரிந்துரைப்பவை ஒரு லட்சிய சமூகத்துக்கானவை என அறிவேன். ஆனால் ஒரு லட்சிய சமூகத்தை தொடர்ந்து கனவு காணாமல், அதைப் பற்றி பேசாமல், இங்கே எதையுமே மாற்ற முடியாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...