சீனாவில் ஜியாங்சு எனும் மாவட்டாரத்தில் (province) நடந்த சம்பவம் இது. தன் மகனின் திருமணத்திற்கு முன் மருமகளை பார்த்த அந்த தாய்க்கு ஒரு சந்தேகம் வருகிறது. அந்த பெண்ணின் உடலில் இருந்த பிறவிக்குறி (birthmark) அவருக்கு முன்பு தொலைந்து போன தனது மகளை நினைவுபடுத்துகிறது. அப்பெண்ணின் பெற்றோரிடம் சென்று “நீங்கள் எடுத்த வளர்த்த மகளா இவள்?” என வினவுகிறார். இந்த விசயம் யாருக்கும் தெரியாது என்பதால் ஆச்சரியப்படுகிறார்கள். வழி மறந்து தெருவில் தனியாக நின்று தவித்த குழந்தையை தாம் வீட்டுக்கு அழைத்து வந்து தத்தெடுத்து வளர்த்ததாக சொல்லுகிறார்கள். தன் நிஜ அன்னையை கண்டு கொண்ட மகளுக்கு பெருமகிழ்ச்சி. ஆனால் இங்கே தான் கதையில் ஒரு திருப்பம்:
திருமணம் நடந்தே விடுகிறது. எப்படி? தன் மகனையும் தான் தத்தெடுத்தே வளர்த்ததாக அவர் சொல்லுகிறார். மருமகள் சொந்த மகள். சொந்த மகனோ தத்து பையன். அதனால் திருமணம் செய்தால் தவறில்லை என முடிவு செய்து இணைகிறார்கள்.
இப்போது மூன்று கேள்விகள்:
1) மருமகளை மகளாக்கிய பின் இனி அந்த அம்மா தன் மகனை மருமகனாக காண வேண்டுமா? ஒருவேளை மகள் தொலைந்து போகாமல் இருந்து, மற்றொரு மகனை தத்தெடுத்து அவர் வளர்த்திருந்தால் இருவரும் திருமணம் செய்து கொள்ள அவர் அனுமதித்திருப்பாரா?
2) தன் தாயின் சாயலில் இருந்ததால் தான் மணமகன் அப்பெண்ணை நோக்கி ஈர்க்கப்பட்டாரா? நாளை தன் மனைவியிடம் காணும் சாயை, இயல்புகள், சுபாவம் தன் முன்னாள் தாயாகிய மாமியாருடையது எனத் தோன்றும் போது இதையெல்லாம் வெறுப்பாரா இல்லை கூடுதலாக விரும்புவாரா?
3) Sibling rivalry எனச் சொல்கிறார்களே சகோதர சகோதரிகளுக்கு இடையிலான பொறாமைப் பூசல் அது இந்த ஜோடிக்கு இடையில் ஏற்படுமா? “உங்களுக்கு அவன் / அவள் தான் எப்பவுமே ஸ்பெஷல்...” என தாயிடம் புகார் சொல்வார்களா?

Comments