Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

பெரியாரும் ஜெ.கிருஷ்ணமூர்த்தியும் - யாருடைய சிந்தனை மேலானது?




மின்னம்பலம் இதழில் ராஜன் குறை ஜித்து கிருஷ்ணமூர்த்தியையும் பெரியாரையும் ஒப்பிட்டு ஒரு சுவாரஸ்யமான கட்டுரை எழுதி இருக்கிறார். ஆனால் இன்னும் ஆழமாக இருவரையும் இணைத்து சிந்திக்க இயலும் எனத் தோன்றுகிறது - ஒரு பௌத்த கண்ணோட்டத்தில். ராஜன் குறை சமூக அரசியல் சார்ந்து மட்டும் அவர்கள் இருவரின் பொருத்தப்பாட்டை நிறுத்துவது கட்டுரையின் ஒரு சிக்கல். ஒரு போதாமை. நான் அவர் விட்ட இடத்தில் இருந்து மற்றொரு தத்துவ ஒப்பீட்டை செய்ய முயல்கிறேன்:

 தத்துவார்த்தமாக பார்த்தால் ஜெ.கெயின் சிறப்பு அவர் மனம் செயல்படும் சார்புநிலைகளை பகுத்து விளக்கும் விவாதங்கள். அவர் படிப்படியாக ஒரு தர்க்க விவாதத்துக்கு நம்மை அழைத்து செல்வது ஒரு மயிர்க்கூச்செறிய வைக்கும் அனுபவமாக இருக்கும். நம்மைக் கொண்டே தான் நினைப்பதை சொல்ல வைக்க அவருக்குத் தெரியும். நமது மனமானது பிரக்ஞை எனும் மையப்புள்ளியில் திரள்வதாக அவர் நம்பினார். இந்த பிரக்ஞை நிஜமல்ல என நிறுவ பலவிதங்களில் முயன்றார். உ.தா., நமக்குள் காலம் நேர்கோட்டில் ஓடுவதில்லை. ஆனால் நான் எனும் சுயத்தின் அடிப்படையில் நாம் சிந்தனைகளை, உணர்வுகளை ஒரு புள்ளியில் குவிப்பதற்காக காலத்தை நேர்கோட்டில் கட்டமைக்க முயல்கிறோம்; இதுவே நமது துக்கத்திற்கு காரணம், மற்றபடி இந்த உலகில் துக்கமே இல்லை என அவர் நம்பினார். இதை முதலில் கேட்க பிரமிப்பாக இருக்கும், ஆனால் சுயம், பிரக்ஞை குறித்து மத்யமகா பௌத்தம் என்ன சொல்கிறது என அறிந்தால் இது ஒரு சின்ன விசயமாகத் தான் தெரியும். ஏனென்றால் சுயம் குறித்து கேள்வி கேட்ட ஜெ.கெ நமது இருப்பை மனம் சார்ந்ததாக மட்டுமே கண்டார். ஆனால் பௌத்தமும், இருபதாம் நூற்றாண்டில் ஹைடெக்கர் போன்ற தத்துவ ஆசிரியர்களும் இருப்பு இந்த உடலுக்கும் உலகுக்குமான பிணைப்பில், காலத்துக்குள், தோன்றும் ஒன்று என வரையறுத்தனர். ஜெ.கெவால் இந்த இடத்துக்கு வர முடியாமையில் தான் நாம் பெரியாரின் சிறப்பை ஒரு ஒப்பீட்டளவில் காண முடியும். 


ஜெ.கெவும் வாழ்நாள் முழுக்க பாலியல், இந்த உடலின் நிர்வாணம், அதன் இருண்மையான விழைவுகள் குறித்த ஒரு கூச்சம், தயக்கம் இருந்தது என நினைக்கிறேன்; மணமான ஒரு பெண்ணுடனான (ரோஸலிண்ட் ராஜகோபால்) தனது காதலை அவர் 35 ஆண்டுகளாக மறைத்துக் கொண்டு பிரம்மச்சாரியாக வலம் வந்ததற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது சிறுவயது முதலே தியோசபிக்கல் சொசைட்டி நிறுவனர்களில் ஒருவரான லௌட்பீட்டர் என்பரிடம் அவர் அனுபவித்த பாலியல் ஒடுக்குமுறையின் விளைவாகவும் இருக்கலாம். ஆனால் பல முரண்கள் கொண்ட வேடதாரியாகவே இறுதியாக வாழ்ந்தார். ஓஷோ அவர் காலத்தில் கட்டற்ற பாலியலை கொண்டாட ஜெ.கெ செக்ஸை தவிர்த்தே வந்தார். அது உடலை தவிர்க்கும் முனைப்பின் ஒரு பகுதி தான். நமது மரபில் பௌத்தம் இத்தவறை செய்ய வில்லை; அது நமது சுயம், பிரக்ஞை, இருப்பு இவை எவையும் உலகியல் அனுபவத்தின் நீட்சியே, உடலுடன் காலத்துக்குள் உறைவது, இம்மண்ணில் வாழ்வதே சுயம் என அவதானித்தது. ஆகையால் விடுதலை அடைய மக்கள் திரளுக்கு கல்வி கற்பித்தல், உணவளித்தல் போன்ற விசயங்களும் முக்கியம் என புரிந்து கொண்டனர். இதைக் கொண்டே நமது இருப்பின் இன்மையை அறிய சுயத்தை கட்டுடைத்தால் மட்டும் போதாது எனக் கருதி, பொருட்களின் தோற்றம், செயல்களின் விசை போன்ற இயல்பியல் சார்ந்த விசயங்கள் குறித்தும் தத்துவத்தில் உரையாடினர்; அவையும் இன்மையாலானவை என நிறுவுவது நமது விடுதலைக்கு அவசியம் என வலியுறுத்தினர். நாகார்ஜுனரை வாசிக்கையில் நம்மை ஆச்சரியப்படுத்தும் விசயம் அவர் உலகியல் நம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து இருப்பை குறித்து அவற்றின் தளத்தில் வைத்து எந்தளவுக்கு பேசுகிறார் என்பதே. ஒரு கல்லை விட்டெறிந்தால் மாங்கா விழுகிறது அல்லது தெருவில் போகிறவரின் மண்டை உடைகிறது; அப்போது கல்லை விட்டெறிந்து மட்டுமே சாராம்சமாக அது நடந்ததா என பௌத்தம் கேட்கும். இதை அத்வைதம் செய்யாது. இதை ஜெ.கெ செய்ய மாட்டார். ஜெ.கெயின் பலவீனம் அவரால் அத்வைதத்தின் எல்லையை கடக்க முடியவில்லை என்பது. 


பெரியார் அப்படி எதிலும் சுலபத்தில் மாட்டிக் கொள்ளவில்லை என்பது அவரது சிறப்பு. பெரியார் ஒரு பக்கம் மார்க்ஸியத்தாலும் இன்னொரு பக்கம் பௌத்தத்தாலும் தாக்கம் பெற்றதால் அவரால் லௌகீக வாழ்க்கைக்கு பூரண மதிப்பளித்து மனிதனை அவனுடைய சமூக, வாழ்வியல், அரசியல் உரிமைகள் சார்ந்து கடைத்தேற்றுவது, அதன் பின் அவன் எந்த பண்பாட்டு சிடுக்குகளிலும் மாட்டிக் கொள்ளாமல் சுதந்திரமாக இருப்பது அவசியம் என நினைத்தார். பெண்கள் உருப்பட வெறுமனே சமத்துவமாக நடத்தப்பட்டால் போதாது, குடும்ப அமைப்பை உடைக்க வேண்டும் என அவர் சொன்னது இதனால் தான் - சமத்துவம், சுயமரியாதை போன்றவை சிந்தனை அளவில் சாத்தியப்படாது, சமூகவியல் சார்ந்தும், நடப்புலகிலும் அடிமைத்தனத்தை ஒழிப்பது அவசியம், அதற்கு முதலில் புனிதங்கள் மீது கைவைக்க வேண்டும் என நினைத்தார். அவர் சுயமரியாதை, மானம் எனக் கூறியது தமிழர் ஒருங்கிணைப்பு, தமிழுணர்வு அல்ல. அவர் அச்சொற்களால் உணர்த்த வந்தது ஒரு தனிமனிதன் எந்த கட்டமைப்புகளையும் சாராமல் தன் தேவைகளை உணர்ந்து சுயமாக பகுத்தறிவுடன் இயங்குவதே. (பெரியார் ஆரம்பத்தில் அனார்க்கிச சிந்தனைகளால் தாக்கம் பெற்றிருந்ததை வைத்து நாம் இதை புரிந்து கொள்ள முயல வேண்டும்.) இந்த தன்மானத்தை தான் புத்தர் சுயவிடுதலை, துக்கத்தில் இருந்து விழிப்புணர்வு பெற்று விடுபடுதல் என்றார். துக்கம், நிலையாமை, மரணம், காலம் போன்ற தத்துவப் பதங்களை பெரியார் பயன்படுத்தவில்லையே ஒழிய புத்தரின் பாதையில் தான் அவரும் பயணித்தார் என்பதில் ஐயமில்லை.


இங்கிருந்து ஜெ.விடம் வந்தோமானால் அவர் ஏன் சமூக முன்னேற்றம், சமத்துவம், சாதி உள்ளிட்ட ஒடுக்குறைகளை ஒழிப்பது போன்றவற்றில் ஆர்வம் காட்டவில்லை எனப் புரியும். அது அவருடைய எலைட்டிசத்தினால் அல்ல, அவருடைய அத்வைதத்தினால் தான். அதாவது பெரியார் தனது உள்ளுணர்வால் பௌத்தத்தை வரித்துக் கொண்டது போல ஜெ.கெவால் இயலவில்லை. அவர் சுயம் குறித்த விசாரணையில் பௌத்தத்தை பயன்படுத்தினாலும் அவருடைய மனத்தால், சுயத்தால் அத்வைதத்தின் பிணைப்பில் இருந்து முழுக்க விடுபட இயலவில்லை. இத்தனைக்கும் அவர் எங்குமே பிரம்மத்தை ஏற்கவில்லை. கடவுளை முன்வைக்கவில்லை. ஆனால் சிந்தனையறுத்தலே உலகம், இருப்பு என அவர் சுருக்கிக் கொண்டார்.


 ஜெ.கெயின் இன்னொரு குறைபாடு அவர் தர்க்கத்துக்கும் உளவியலுக்கும் தத்துவார்த்த தளத்தில் முன்னிலை அளித்தார் என்பது. அவரது தத்துவ உரைகள் அடிப்படையில் விவாதங்களே. அவை பிளேட்டோவின் Dialogues நூலை நினைவுபடுத்தும் வகையிலானவை. பிளேட்டோவும், அவருடைய ஆசான் சாக்ரடீஸும், கருத்துமுதல்வாதிகள். கருத்து அதன் தூய நிலையில் இருக்கும் போது எந்த சார்பும் இன்றி, தர்க்க குழப்பம் இன்றி, தெளிவாக சிந்திக்க உதவும்; தூய கருத்தை நாம் தர்க்கப்பிழைகளால் இருண்மையில் மூழ்கடிக்கிறோம், அதில் இருந்து மீளும் போது மனிதர்கள் துக்கத்தில் ஆழ்ந்திட மாட்டார்கள் என சாக்ரடீஸ் நம்பினார். ஆனால் அந்த லட்சிய கருத்து வடிவம் உலகில் இருக்க முடியுமெனில் அது எப்படி எந்த சார்புநிலையும் இன்றி தோன்ற முடியும் என அவர் கேட்கவில்லை. ஜெ.கெவும் சிந்தனையால், நேர்கோட்டு காலத்தால், பிரக்ஞையால் வரையறுக்கப்படாத கட்டற்ற மனநிலை கொண்டு துக்கமில்லாத நிலைக்கு மனிதனால் செல்ல முடியும் என நம்பினார். ஆனால் இந்த கட்டற்ற மனநிலையானது இரு இருமையின் அடிப்படையில் காலத்துக்குள் தானே செயல்பட்டாக வேண்டும்? அதுவும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது தானே? தானற்று இருக்கும் ஒருவன் அந்த சுயமின்மையை சாராம்சப்படுத்தி கடவுளாக்கத் தானே செய்கிறான்? இந்த கேள்விகளை - சாக்ரடீஸ், பிளேட்டோவைப் போன்றே - ஜெ.கெவும் எதிர்கொள்ளவில்லை. இந்த reification அவருடைய தத்துவத்தின் முக்கியமான பிழை. ஆனால் பெரியார் இறுதி வரை எதையும் reify செய்யவில்லை. குடும்பத்தை உடைப்பது அவசியம் என்றவர் அந்த கருதுகோளை கடவுளாக்கி அதை இறுக்கமாக பற்றிக் கொண்டிருக்கவில்லை. தேவைப்பட்ட போது மணம் புரிந்து கொண்டார். ஒன்று அவசியப்பட்டால் செய்கிறோம், எந்த லட்சியத்துக்கும் நடைமுறையில் தனிமதிப்பில்லை என்றார். இதையே புத்தரும் பல பிரச்சனைகளுக்கு விடையாக அளித்தார். புலால் உண்பதை தவிர்க்கலாம், ஆனால் புலால் உண்ண வேண்டுமென்றால் உண்ணலாம் என்று ஜீவகாருண்யத்தையும் சாராம்சப்படுத்த அவர் மறுத்தார். இந்த இடத்தில் தான் ஜெ.கெ சறுக்கினார். இந்த புள்ளியில் தான் பெரியார் ஜெ.கெவை விட ஆழமான புரிதலை கொண்டிருந்தார்.


ஒரே வரியில் சொல்வதென்றால் ஜெ.கெவின் பெரும் குறை அவர் வந்த அத்வைத பாதை.  பெரியாரின் வலிமை அவர் இந்த அத்வைதத்தை பிராமணியம் என அடையாளம் கண்டு அதை எதிர்த்து மாற்றுப்பாதைகளைத் தேடி நடப்பியல் வாழ்வை எந்த சாராம்சவாதமும் இன்றி பிரதானப்படுத்தினார் என்பது. எதையும் சாராமல் சிந்திப்பது எனும் அவருடைய கொள்கையை நாம் ஐரோப்பிய தர்க்கவாதம், புலனறிவாதம் (ஜான் லாக், ஹோப்ஸ்) என்று வரையறுக்க முடியாது. அவ்விதத்தில் அவருடைய பகுத்தறிவானது premise-conclusion என அலசி ஆராய்ந்து பிழையின்றி சிந்திப்பதல்ல. பெரியாரின் பகுத்தறிவானது எந்த தளையும் இன்றி, சமத்துவத்துடன் வாழ்வதே. ஏனென்றால், அவர் முழுக்க வேறொரு (அவைதீக) மரபில் தோன்றி சிந்தித்தார். ஜெ.கெ-பெரியார் முரணானது இந்திய மண்ணில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வைதீக-அவைதீக மரபுகளின் மோதலின் நவீனத் தோற்றம் தான். வைதீகத்தால் வழக்கம் போல ஒரு எல்லையை தாண்டி சிந்திக்க இயலவில்லை.  பெரியாரால் முடிந்தது.

Comments

Ram said…
அபிலாஷ், அற்புதம்....

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...