முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரண்டு வைரஸ்கள்


இன்று நிகழ்ந்த ஸிஸெக்கின் காணொளி உரை அட்டகாசமாக இருந்தது. முடிக்கும் போது அவர் இவ்வாறு சொன்னார்: "இந்தியாவை இரு வைரஸ்கள் பிடித்தாட்டுகின்றன. ஒன்று நிஜ கொரோனா வைரஸ். இன்னொன்று கருத்தியல் வைரஸ். இரண்டில் இருந்தும் நீங்கள் விடுபட வேண்டும் என விரும்புகிறேன்." அவர் கருத்தியல் வைரஸ் என்றது பொதுவாகக் இந்துத்துவ, இந்து தேசியவாத கருத்தியலைத் தான் என்பது மொத்த உரையையும் கேட்டவர்களுக்கு தெளிவாகி இருக்கும்.

அவர் தன் கேள்வி பதிலில் போலி பிற்போக்குவாதிகளைப் பற்றி சொன்னது சுவார்ஸ்யமானது. குறிப்பாக டிரம்பைப் பற்றி சொல்லும் போது அவருக்கு தன்னுடைய பிற்போக்குவாதம், இனவாதம் மீதே ஒரு நம்பிக்கை இல்லை என்றார். இதனாலே அவரைப் போன்றவர்கள் தொடர்ந்து மற்றமைகளை கட்டமைத்து வெறுப்பை விதைத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்றார். மாறாக, ஐயர்லாந்து, திபெத்தை சேர்ந்த தேசியவாதிகள் உண்மையானவர்கள், அவர்களிடம் ஒரு உறுதிப்பாடு உண்டு என்றார். ஸிஸெக் சொல்லும் இவ்விசயத்தை நான் இந்து தேசியவாதிகள் குறித்து சிந்தித்திருக்கிறேன். சாவர்க்கர் காலத்தில் இருந்தே அவர்களுக்கு தேசம், மதம் போன்ற விசயங்களில் தன்னுறுதியான கருத்தோ பிடிப்போ இல்லை, இன்றும் தான், அவர்களை தமது கருத்தியல் என்னவென தத்துவார்த்தமாக விளக்கக் கேட்டால் இஸ்லாமிய வெறுப்பு, தேசப்பற்று, இந்து அடையாளம் என உருண்டு உருண்டு சென்று கொண்டிருப்பாளர்கள். ரொம்ப உணர்ச்சிகரமாக பேசுவது போல நடிப்பார்கள். ஒரு பெரிய கலவரத்தில் இரு தரப்பிலும் மக்கள் கொத்துக் கொத்தாய் சாகும் போது (இந்திய பிரிவினை கலவரங்களில் போல) இந்துக்கள் மட்டுமே இறந்தது போல கண்ணீர் வடிப்பார்கள். இது போலியான துக்கம், கோபம் என ஒரு குழந்தைக்குக் கூட புரியும். இன்று கொரோனாவின் பெயரால் மக்கள் கொலைக்களத்துக்கு அனுப்பப்படும் போது எல்லாரும் நேர்மறையாக இருங்கள் என பிரச்சாரம் செய்கிறார்கள். இப்படி தேசப்பற்றே, மதபற்றே இல்லாமல் தம்மை தேசப்பற்றாளர்களாக, மதப்பற்றாளர்களாக காட்டிக் கொள்கிறவர்கள் எல்லா நாடுகளிலும் பரவி வருகிறார்கள் என ஸிஸெக் கூறினார். இந்தியாவின் பிரச்சனையும் அது தான். நாட்டை மிக அதிகமாக சுரண்டி விற்கிறவர்கள், பிணங்களை கங்கையில் மிதக்க விடுகிறவர்கள் தாமே தேசம், தம்மை பாராட்டுவது மட்டுமே தேசப்பற்று என புது கதையாடலை ஆரம்பிக்கிறார்கள். டிரம்ப் இதையே வெள்ளையின பெருமை, வெள்ளையினத்தின் அடையாளம் நான் மட்டுமே என்று பேசி வந்தார். ஆனால் அவருடைய மோசமான நிர்வாகத்தினால் வெள்ளையர்கள் கொத்துக்கொத்தாக கொரோனாவுக்கு பலியானதற்கு அவர் கவலைப்படவில்லை. இதுவே போலி இனவாதம், போலி தேசியவாதம், போலி பிற்போக்குவதம். 

முடிக்கும் போது ஸிஸெக் தனக்கு 72 வயதாகி விட்டது. முன்பு போல நெடிய நேரம் பேச முடியவில்லை, களைத்து ஓய்ந்து போய் பதற்றம் வந்து விடுகிறது என்றார். காரில் ஒரு அழகான கல்லறையைத் தோட்டத்தை கடக்க நேர்ந்தால் இங்கு ஒரு கல்லறை வைக்க எவ்வளவு செலவாகும் என நண்பர்களைக் கேட்க ஆரம்பித்து விடுகிறேன் என தன்னைத்தானே பகடி செய்து சிரிக்கவும் செய்தார். 

அழகான ஸ்டைலான மனிதர். மகத்தான சிந்தனையாளர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...