முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நடிகர்களின் சர்வாதிகார மனம்




கமல், சீமான் போன்றோருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை என நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். இந்த பொதுப்பண்பை எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிடமும் கண்டோம். நட்சத்திர வெளிச்சத்தில் மிகையான புகழ், ஈகோவுடன் வளரும் நாயக நடிகர்களுக்கு ஒரு கட்டத்தில் இந்த பெருக்கப்பட்ட ஊடக பிம்பத்துக்கும் உண்மைக்குள் வித்தியாசம் தெரியாதபடிக்கு மனக்குழப்பம் ஏற்படும். தானே தன் பிம்பம் என நம்பத் தொடங்கி அதை முன்னெடுப்பவர்களை தன் நட்பு வட்டத்தில் வைத்துக் கொள்வார்கள். இதை தொடர்ந்து நிகழ்த்தி நிஜமாக காட்ட ரசிகர் மன்றங்களை நடத்தி படவெளியீடுகளை கொண்டாட்டமாக மாற்றுவார்கள். அப்படத்தில் வேலை செய்த யாருமே முக்கியமில்லை, தானே அனைத்துக்கும் மையம் என சித்தரிப்பார்கள். இந்த சித்தரிப்புக்கு வணிக லாபம் கிடைப்பதால் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் இதற்கு உடன்படுவார்கள். அடுத்து இந்த செயற்கையாக தோற்றுவிக்கப்பட்ட பிம்பத்தை முதலீடு செய்து தமது மிகையான சம்பளத்தை நியாயப்படுத்துவார்கள். அந்த வியாபாரம் படுக்கத் தொடங்கியதும் அந்த பிம்ப அரசியலை சினிமாவிலும் பயன்படுத்த முயல்வார்கள். அங்கும் அதே ரசிக மன்றங்கள், அதே ஸ்பான்சர்கள், ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க புகழுரைகள், ஊடக வெளிச்சம் என வலம் வரப் பார்ப்பார்கள். கடைசி வரை மக்கள் பிரச்சனைகளுக்கான தீர்வுகள், சமூக மேம்பாட்டுக்கான கொள்கைகள் எதுவும் அவர்களிடம் இருக்காது. 


அடுத்து கட்சி அரசியலில் ஈடுபடத் தொடங்கியதும் இந்த தன்னை மையப்படுத்திய மிகை பிம்ப கதையாடல்கள் அகங்காரம் எனும் நிலையில் இருந்து சர்வாதிகார விழைவு எனும் ஆபத்தான கட்டத்துக்கு தடம் மாறும். என் பேச்சை கேட்காதவர்கள் உயிருடன் இருக்கக் கூடாது என்பது தொடங்கி, அனைவரும் காலில் விழ வேண்டும், என்னை மறுப்பவர்களிடம் கட்சிக்காரர்கள் பேசக் கூடாது, அவர்களை பச்சை மட்டையால் அடிப்பேன், என்னை எல்லாரும் சதா புகழ வேண்டும், சமூகம் முன்னேற நினைப்பவர்களிடம் சர்வாதிகாரமும் வெளிப்படும், நானே சர்வாதிகாரி என இந்த பிதற்றல்கள், கோரல்கள், கூச்சல்கள் வளர்ந்து கொண்டே போகும். கமல் இவ்விசயத்தில் ஒரு மென்மையான சீமான். அவ்வளவு தான்!அவர் கமீலா நாசரை பதவி விலக்கியது, தன் தொகுதி தவிர வேறெங்கும் பிரச்சாரத்துக்கு செல்லாதது, கட்சியின் கொள்கை என்னவெனக் கேட்டால் தன்னைப் பற்றி பேசி தற்புகழ்ச்சியில் ஈடுபடுவது, டார்ச்சை உதவியாளர்கள் மீது வீசி எறிவது என இந்த குணாதசியத்தை கண்டோம்.


முதல் வரிசை பலியாடுகளான மகேந்திரன், பொன்ராஜ் போன்றோர்  வெளியே வந்து உண்மையை கக்கி விட்டாகிற்று!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...