முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“உளமார vs கடவுள் அறிய” - கண்கட்டி வித்தை


இந்த முறை சட்டமன்றத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்ட எம்.எல்.ஏக்களில் திமுகவினர் உளமார என்றும் அதிமுகவினர் கடவுள் அறிய என்றும் இருவேறாக மொழிந்து தம்மை முன்வைத்தது விவாதமானது. அப்போது ஒரு தரப்பு கடவுள் நம்பிக்கை உள்ளோர் கடவுள் அறிய என மொழிவதே நியாயம், அந்த உரிமை அவர்களுக்கு உண்டு எனக் கோர, இன்னொரு தீவிர வலதுசாரி தரப்பு தாம் நாத்திக கட்சி அல்ல எனக் கோரும் திமுக ஏன் “கடவுள் அறிய” என மொழிய தயங்குகிறது எனக் கேட்கிறது. கடவுள் தரப்பிலான இந்த இரண்டு கோரல்களும் பாஜக இங்கு பரப்புகிற நச்சு சிந்தனையின் விளைவு தான். குறிப்பாக, கடந்த 7 ஆண்டுகளில் நடப்பு வாழ்வில் சகல விசயங்களையும் - ஆட்சி, கொள்கை துவங்கி போலி வலதுசாரி வரலாற்றை போதிக்கும் கல்வி, கோமியம், கங்கை நீரை குடிக்க, கோ கொரோனா என கூவியபடி பேரணி செல்ல வலியுறுத்தும் மருத்துவம், தேஜஸ்வி சூர்யாக்கள் கொதிக்கும் பணி நியமனம் வரை -  மதம், மரபு, நம்பிக்கை சார்ந்ததாக மாற்றி விட்டனர் பாஜகவினர். சிவில் வாழ்க்கையையும் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் தனித்தனியாக வைத்துக் கொள்ள வேண்டும், மதத்தை, சாதியை பிரகடனப்படுத்தி அதை வைத்து பொதுவாழ்வில் முடிவுகள் எடுக்கவோ சர்ச்சைகள் உருவாக்கவோ கூடாது எனும் நாகரிகத்தை நாம் இழந்து வருகிறோம். இந்த போக்கு ஒரு தரப்பால் தமிழகத்திலும் திணிக்கப்படுகிறது. “கடவுள் அறிய” விவாதம் அதற்காக உருவாக்கப்படுவது தான்.

“உளமார” உறுதிமொழிவது ஒரு நாத்திக செயல் அல்ல, அதுவே ஒரு மதசார்பற்ற தேசத்தில் அரசியல்வாதிகள் பேச வேண்டிய மொழி. ஏனென்றால் அரசு என்பது கடவுளால் நடத்தப்படுவது அல்ல. ஆக்ஸிஜன் உற்பத்திக்கும், தடுப்பூசி உற்பத்தி மற்றும் வினியோகத்துக்கும், ஏழை எளியோருக்கான சமூகநீதித் திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் கடவுள், மதத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நடைமுறையில் தான் நான் சொல்கிறேன். ஆனால் மாறாக மதத்தை, கடவுளை நுழைப்பது அரசு நிர்வாகத்தில் நடக்கும் பிழைகளை, ஊழல்களை மக்கள் காணாமல் தடுப்பதற்கான ஒரு தந்திரம் மட்டுமே. உணர்ச்சிவயப்படுத்தி மக்களை திசைதிருப்ப மதம் ஒரு அற்புதமான கருவி. “கடவுள் அறிய” உறுதிமொழிபவர்கள் அப்படி ஒரு வாய்ப்புக்காக ஏங்குகிறார்கள். இன்று மத்தியில் உள்ள ஆட்சி இதற்கு ஒரு சிறந்த உதாரணம். அவர்களுடைய நிர்வாகப் போதாமை 2019இல் தேர்தலின் போதே மக்களுக்கு உறைத்திருக்க வேண்டும். ஆனால் மதப்பற்றும் தேசிய வேறியும் கண்ணை மறைக்க வாக்குகளை அள்ளி வழங்கினார்கள். இப்போது அதே மக்கள் தமது பெற்றோர்கள், கணவர், மனைவி, பிள்ளைகள் தெருவில் கிடந்து சாவதைக் காணும் போது, பிணத்தை சரிவர எரிக்க கூட வழியில்லாமல் தவிக்கையில் திருந்துவார்களா எனத் தெரியவில்லை.

 பெரும்பாலான ஆட்சியாளர்கள் இத்தகைய பேரழிவுக் குற்றங்களை இழைத்த பின் நிலைக்க மாட்டார்கள். ஆனால் ஜீ நீடிப்பார். ஏனென்றால் அவர் ஒரு பிரதமர் மட்டும் அல்ல, அவர் ஒரு கட்சித் தலைவரோ தேசத்தின் தலைமை நிர்வாகியோ மட்டும் அல்ல, அதை விட அவர் ஒரு மதத்தலைவர், சிவில் வாழ்வில் இருக்கும் ஒரு 'துறவி', அரசை நிர்வகிக்கும் ஒரு சாமியார்,  ஓஷோ, புட்டபர்த்தி பாபா, ஸ்ரீஸ்ரீ, ஜக்கி  போன்றோரின் அரசியல் கலவை. அவரை விமர்சிப்பது தெய்வ நிந்தனையாக அவரது ஆதரவாளர்களால் பார்க்கப்படுகிறது. கொரோனா காலத்தில் இரண்டாம் அலையின் போது மிக மோசமான நிர்வாக சீர்கேட்டால் மக்கள் லட்சக்கணக்கில் மடியும் போது ஜீயின் பிம்பம் சற்று ஒளியிழக்கிறது, ஆனால் அவரால் சுலபத்தில் மதப்பற்றையும் தேசிய வெறியையும் தூண்டி விட்டு பழைய இடத்தை பிடித்து விட முடியும். ஜீயால் இன்று செய்ய முடிவதை விட சிறப்பாக, சுலபமாக நாளை ஒரு ஜக்கியால், ஸ்ரீஸ்ரீயால் ஒரு தேசத் தலைவரின் இடத்தில் நின்று நிகழ்த்த முடியும். அந்த இடத்திற்கு தான் பாஜக நம்மை நகர்த்தி செல்கிறது. அதனால் தான் சொல்கிறேன் - மதப்பற்று ஒரு தேசத்தில் தீவிரமாகி விட்டால் அதன் பெயரால் உங்கள் சொத்தைப் பிடுங்கி, மானத்தை பிடுங்கி, உயிரையே பிடுங்கினாலும் நீங்கள் கண்டுகொள்ள மாட்டீர்கள். விமர்சிப்பவர்கள் மதவிரோதிகள், தெய்வ நிந்தனையாளர்கள், கிறித்துவ, இஸ்லாமிய ஏஜெண்டுகள் என திசை திருப்பிட முடியும். அதை கணிசமான பற்றாளர்கள் ஏற்கவும் செய்வார்கள்.

அதனால் தான் சொல்கிறேன், ‘கடவுளறிய’ உறுதிமொழிபவர்கள் ‘மக்களறிய’ நல்லாட்சி தராமல் இருக்கவே அப்படி செய்கிறார்கள். இதற்கும் நம்பிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது ஒரு கண்கட்டி வித்தை மட்டுமே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...