முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கிஷோர் கே சாமியும் ‘அறிவுஜீவிகளும்’



கிஷோர் கே சாமிக்காகவெல்லாம் அறிவுஜீவிகளில் சிலர் பேசுவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்கள் செய்கிற சில பிழைகள்:


1) ஆதிக்கவாதத்துக்கு எதிராக செயல்படும் போராளிகள், எழுத்தாளர்கள் மீது அரசும் வலதுசாரிகளும் தொடுக்கும் ஒடுக்குமுறையை கிஷோரின் கைதையும் பொதுமைப்படுத்துவது. இதை விட மோசமாக நீங்கள் மக்கள் போராளிகளை அவமதிக்க முடியாது. ஒரு மனித உயிர் என்பதைத் தாண்டி எந்த மரியாதையும் உரிமையும் கிஷோருக்குக் கிடையாது.


2) அவதூறு சட்டத்தில் கைது செய்திருக்க வேண்டும் என ஜல்லியடிப்பது. அதாவது சுலபத்தில் வெளிவரும்படி வழக்கை ஜோடித்திட வேண்டுமாம். என்ன சட்டம் என்பது முக்கியமல்ல - கிஷோர் இதுவரை செய்துள்ள அத்தனை அநீதிகளுக்குமான - பெண்களை தொடர்ந்து அவமதிப்பது, சாதி மேலாதிக்கத்தை தூக்கிப்பிடிப்பது, தமிழ் மக்களுக்கு எதிராக செயல்படுவது, தனிப்பட்ட பாலியல் அவமதிப்புகளில் ஈடுபட்டு மிரட்டுவது என மிக நீண்ட பட்டியல் - மொத்தமான ஒரு சவுக்கடியாகவே இந்த கைதை பார்க்கிறோம். இத்தனை நாட்களாய் பாஜகவினர், அதிமுக அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகளின் துணையுடன் அவன் ஜம்பமாக குற்றங்களை செய்தான். இப்போது அரவணைக்க ஆளில்லாததால் உள்ளே போகிறான். சசிகலாவை ஒரு கட்சித்தலைவியாக பார்ப்பது போலத்தான் கிஷோரை போராளியாக்கி அழகு பார்த்து அவனுடைய உரிமைக்காக பேசுவது. அரசியல்ரீதியாக இது தவறு.


3) அவதூறை இதுவரை திமுக செய்ததில்லையா, இவர் செய்யலையா, அவர் செய்யலையா என்பது ஒரு அபத்தம். அவதூறு என்பது பெயரளவிலானது தான் - ஆனால் அவனுடைய கைது அதற்கானது மட்டுமல்ல. அதனால் பேஸ்புக்கில் அமித் ஷாவை பகடி செய்தவனையும் கிஷோரையும் ஒப்பிட முடியாது. இறந்து போன தீப்பொறி ஆறுமுகத்தைக் காட்டி கேள்வி கேட்பதும் நியாயமல்ல. இப்போது உயிருடன் உள்ள திமுக பேச்சாளர்களில் யாராவது எதிர்க்கட்சியினரின், பத்திரிகையாளர்களின் பாலியல் வாழ்க்கை பற்றி அவதூறு பரப்புவது, சாதி துவேசத்துடன், மதவெறியுடன் தொடர்ந்து பேசுவது என செயல்பட்டால் சொல்லுங்கள். அவர்களையும் கைது செய்யக் கேட்போம். ஆனால் அதற்காக கிஷோரை ‘தியாகியாக’ முடியாது.


4) மாரிதாஸ் புள்ளிவிபரங்களுடன் பேசுகிறார் என்பதும் ஏற்கத்தக்கது அல்ல. அவர் முழுக்க முழுக்க மதவெறியைத் தூண்டும் விசயங்களையே பேசுகிறார். அல்லது சந்தேகத்துக்குரிய பாஜக வாட்சப் போலி செய்திகள உண்மை என்பதாக திரித்து பரப்புகிறார். பாஜகவினரும், அக்கூட்டணியை ஆதரிக்கும் அதிமுக ஆதரவளர்களும், பாஜகவை எதிர்க்கும் அதிமுகவினருமே மாரிதாஸின் இந்த பேச்சுகளை ரசிக்கிறார்கள். இந்துத்துவாவை பேசலாம், ஆனால் அதை தர்க்கரீதியாக தரவுகளுடன் பேச வேண்டும். அதை செய்யாத வரையில் மாரிதாஸின் வாயை மூடுவது அவசியம். அவருடைய யுடியூப் சேனலை தடை செய்ய வேண்டும். அதையும் மீறி அவர் பேசினால் அவரை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்ப வேண்டும். 


5) மக்களுக்கு எதிராகப் பேசுவது, மக்களின் ஆதரவின் அடிப்படையில் அமைந்த ஆட்சியை கலைத்து விடுவோம் என மிரட்டுவது, மதவெறியை, பிரிவினையை தூண்டும் விதமாக பிரச்சாரம் செய்வது, சாதி ஆதிக்கத்தை முன்னெடுப்பது, பெண்களை பொதுவெளியில் அவதூறு செய்து மிரட்டுவது ஆகிய காரணங்களுக்காக ஒருவரை கைது செய்யக் கேட்டால் “திமுகவுக்கு எதிராகப் பேசியதால் கைது” என திரிப்பதே நடுநிலை குமார்களின் வேலையாக இருக்கிறது.  இந்த முறை கிஷோருக்கு எதிராக போடப்பட்ட வழக்கும், அதை செய்தி ஊடகங்கள்  முன்வைத்த விதமும் அவர்களுக்கு  வசதியாகப் போய் விட்டது. நாம் கவனிக்க வேண்டியது கிஷோர் கைதின் உண்மையான நோக்கம் திமுக எதிர்ப்பு அல்ல என்பது தான்  - அது அவனை இப்போது உள்ளே வைப்பதற்கான ஒரு சாக்கு மட்டுமே.

கருத்துகள்

Ram இவ்வாறு கூறியுள்ளார்…
அபிலாஷ், தெரு கூட்டத்தில் அவதூறு (உண்மையானாலும்) கூறுவது அன்றோ அல்லது நாளையோ விளைவை குடுக்கும்.... அந்த பயம் இல்லாததால் வசதியாக இருளில் அமர்ந்து கொண்டு பிறர் மீது வெளிச்சம் பாய்ச்சுவது விவேகம் அல்ல....

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...