முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியா நியுசிலாந்து டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி



முதலில் மட்டையாடும் இந்தியா 20 ஓவர்களில் விக்கெட் இழக்காமல் 62. நல்ல துவக்கம்.


ஆடுதளம் ஆச்சரியப்படுத்துகிறது. நிபுணர்கள் பலரும் இந்த ஆடுதளம் பச்சையாக வேகப்பந்து வீச்சுக்கு தோதாக இருக்கும் என்றார்கள். சுனில் கவாஸ்கர் கூட ஆடுதளத்தை சோதித்து விட்டு மட்டையாடுவது சவாலாக இருக்கும் என்றார். அதனாலே இன்று இந்தியா நான்கு வேக வீச்சாளர்களுடன் செல்லக் கூடும் என சொன்னார்கள். நியுசிலாந்து கூட ஒரு சுழலை எடுத்து விட்டு ஐந்து வேக, மிதவேக வீச்சாளர்களுடன் சென்றார்கள். ஆனால் ஆடுதளத்தைப் பார்த்து இந்திய நிர்வாகம் சரியான முடிவை எடுத்திருக்கிறார்கள். இதைப் பாராட்ட வேண்டும்.


இங்கிலாந்தில் வழக்கமான ஆடுதளங்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆடுதளம் மெத்தனமாக, பவுன்ஸ் இல்லாமல் இருக்கிறது.  குறிப்பாக உள்ளே பந்து வரும் இடத்தில், குச்சிகளுக்கு நேராக உள்ள பகுதியில் பந்து தாழ்வாக வருகிறது. ஆறாமல் குச்சியில் மட்டும் எகிறுகிறது. போகப் போக பந்து இன்னும் மெதுவாகும், வேகமாய் உள்ளே வரும் பந்து LBW முறையில் விக்கெட்டுகளை சாத்தியமாக்கும். ஷாமி இது போன்ற சூழலில் செமையாக வீசுவார். பும்ராவுக்கும் இது எடுபடும். ஆனால் இஷாந்துக்கு பெரிதாக கைகொடுக்காது. ஒருவேளை இந்தியா முதல் இன்னிங்ஸில் 150க்கு மேல் லீட் எடுத்து ஆட்டம் ஐந்தாவது நாளுக்கு சென்றால் இறுதியாக ஆட வரும் நியுசிலாந்தால் 220க்கு மேல் இல்லை அடிப்பது கூட சிரமமாக ஆகலாம்.


சுழலர்கள்? 

உள்ளே வரும் பந்து சில நேரங்களில் குறைநீளத்தில் இருந்து எகிறுகிறது. ஜடேஜாவுக்கு சரியாக இருக்கும். ஆனால் அவர் நீளத்தை சற்று பின்னுக்கு இழுக்க வேண்டும். ஐந்தாவது நாள் அஷ்வினுக்கு பந்து சுழலலாம், கால் பக்கமாய் எகிறி ஷார்ட் லெக்கில் கேட்ச் கிடைக்கலாம். ஆனால் இதெல்லாம் நடக்க அடுத்த மூன்று நாட்களும் வெய்யில் காய வேண்டும். இன்னொரு விசயம் - ஆடுதளத்தின் உள்மடிப்புகள் ஏற்கனவே ஓரளவுக்கு காய்ந்து திடமாக இருந்தால் வெயில் ஆடுதளத்துக்கு சற்று கூடுதல் வேகத்தை கொடுத்து, இதை மட்டையாட்டத்துக்கு சாதகமும் ஆக்கலாம். 

அஷ்வினுக்குப் பதில் உமேஷ் யாதவ் கூட ஒரு நல்ல தேர்வாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போதைக்கு உறுதியாக சொல்ல முடியவில்லை.


இரண்டு சுழல்ர்களை தேர்ந்ததற்கான என் முந்தைய விமர்சனத்தை பின்வாங்கிக் கொள்கிறேன். இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் ஆடுதளம் தில்லி பெரோஷா கோட்லா போல இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆடுதள தயாரிப்பாளர் பிரியாணி செய்ய முயன்று சாம்பார் சாதம் போல ஆகி விட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...