முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீரிழிவு ரிவர்ஸல் எனும் ஏமாற்று


ரிவர்ஸல் பேக் எனும் பிட்னஸ் நிறுவனத்தின் யுடியூப் விளம்பரம் ஒன்றைப் பார்த்தேன். அதில் பல “மாடல்கள்” தோன்றி எனக்கு நீரிழிவு நோய் போய் விட்டது (I am free of diabetes now) எனப் பேசுகிறார்கள். இதே போன்று வேறு பல விளம்பரங்களையும், காணொலிகளையும் கண்டிருக்கிறேன். இதையெல்லாம் நம்பாதீர்கள்: 

1) நீரிழிவை கட்டுப்படுத்தத் தான் முடியுமே ஒழிய, நிரந்தரமாக குணப்படுத்துவது சாத்தியமில்லை. 


2) கணையத்தை மாற்று அறுவை செய்து கொண்டால் ஒருவேளை தீர்வு கிடைக்கலாம். ஆனால் அது மிகவும் செலவு பிடித்தது, அதற்கான ரிஸ்கும் உண்டு.


3) குடலின் நீளத்தைக் குறைத்து, வயிற்றை சுருக்கித் தைக்கும் bariatric சிகிச்சை பண்ணிக் கொண்டோருக்கு எதிர்பாரா விதமாக நீரிழிவு குணமாவது உண்டு.


4) இந்த தீவிரமான அரிதான சாத்தியங்களை ஒழித்துப் பார்த்தால் நீரிழிவை ரிவர்ஸ் செய்கிறேன் பேர்வழிகள் சொல்வது சுத்தப் பொய். 


5) நீங்கள் டைப் 1 நீரிழிவாளர் என்றால், ஒருநாளை நூறு யூனிட்டுகளுக்கு மேல் இன்சுலின் எடுப்பவர் என்றால் அதை 10-20 என குறைக்கலாம். எப்படி? உண்ணாநோன்பின் வழி - One meal a day என்கிறார்களே அந்த வழியில் நாளொன்றுக்கு ஒரே ஒரு வேளை குறைவான கலோரிகள் சாப்பிட்டால் இன்சுலினையும் குறைவாக எடுத்துக் கொண்டு நீரிழிவின் மோசமான விளைவுகளை தவிர்க்கலாம். (பசி, சோர்வு, தொடர்ந்து சிறுநீர் கழிப்பது துவங்கி கண்பார்வை, கை, கால்களை இழப்பது வரை) இதுவொன்றும் புதிதல்ல, 1920 களிலேயே மருத்துவர்கள் இதை வெற்றிகரமாக முயன்று பார்த்திருக்கிறார்கள். நிறைய பேரால் பசியைத் தாங்க முடியாது என நினைத்து இதை பொதுவெளியில் மருத்துவர்கள் பரிந்துரைப்பதில்லை.


6) அடுத்து, மூன்று வேளை சேலட், கொழுப்பை மட்டும் சாப்பிட்டு இன்சுலின் அளவை 60-70% குறைக்கலாம் என நினைக்கிறேன் (பேலியோ டயட்).


7) எடை குறைப்புக்கும் இன்சுலின் சென்சிட்டிவிட்டிக்கும் தொடர்புண்டு (அதாவது எடை குறைந்தால் இன்சுலினையும் குறைக்கலாம்) என ஆய்வுகள் சொல்லுகின்றன. ஆனால் இந்த வித்தியாசம் மிகச் சொற்பமானதே. அடிப்படையில் உள்ளே போகும் உணவின் அளவும், வகைமையுமே ரத்த சர்க்கரையின் சூத்திரதாரி.


8. இதே தர்க்கப்படி, ஒருவரது உடலுழைப்பு, உடற்பயிற்சியின் அளவுக்கும், அவருடைய கட்டுடலுக்கும் அவருடைய ரத்த சர்க்கரைக்கும் தொடர்பில்லை. நான் மாணவனாக இருக்கும் போது தாம்பரத்தில் ஒரு ஜிம்முக்கு சென்றேன். அதை நடத்தி வந்த 40 வயது மாஸ்டர் புரூஸ்லீயைப் போல கட்டான தசைகளுடன் இருப்பார். அவர் 16 வயதில் இருந்தே நீரிழிவுடன் போராடி வந்தார்.


9) டைப் 2 நீரிழிவாளர்கள் ஒருவேளை இந்த டயட் முறைகளில் மாத்திரைகளை நிறுத்த முடியலாம். ஆனால் அதுவும் தற்காலிகமே. நமது உடல் பல மாயங்களை செய்யக் கூடியது. உடலில் வேறேதாவது பிரச்சனை ஏற்பட்டு அதனால் சர்க்கரை அளவு ஏறி இறங்கலாம். ஆனால் டைப் 2வை பொறுத்தமட்டில் மருந்தின்றி வாழ்வது சாத்தியமே. அதே நேரம் இதை “ரிவர்ஸல்” எனச் சொல்லி ஏமாற்றுவது நியாயமல்ல. ஒருவேளை ஒரே ஒரு தேநீர் சாப்பிட்டாலே இந்த “ரிவர்ஸல்” சோலி முடிந்து விடும். 


10) ரிவர்ஸலை நம்புவதைப் போன்றே மருந்தால் மட்டுமே நீரிழைக் கட்டுப்படுத்தலாம் என நினைப்பதும் மோசமான விளைவுகளைத் தரும். உடல் எடை கூடிக் கொண்டே போகும். ஒருவித லேசான மயக்க நிலை தொடரும். மாத்திரைகளில் இருந்து இன்சுலினுக்கு “முன்னேறி” 20-30 யூனிட்டுகளில் இருந்து 150-180 யூனிட்டுகள் வரை எடுக்கும் நிலை வரலாம். இது பெட்ரோல் லீக் ஆகும் வண்டியில் மேலும் மேலும் பெட்ரோல் நிறைப்பதற்கு சமமான வியர்த்தமான வேலை என்று சொல்வார்கள். அதற்குப் பதில் குறைவான பெட்ரோலில் வண்டியை ஓட்டப் பழகுவதும், மாற்று எரிசக்தியை நாடுவதும் அதிக பலனளிக்கும், நீடித்த பலனளிக்கும் வழிமுறைகள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...