இந்தியா அருமையாக துவங்கி இருக்கிறது. ஆடுதளமே என் ஆர்வத்தைக் கிளப்பியது. கொஞ்சம் உள்ளே சொதசொதவென இருக்கும் என நினைக்கிறேன். இப்போதே சில பந்துகள் தாழ்வாக வருகின்றன. பின்னங்காலுக்குப் போய் அடிப்பதற்கான வேகமும் பவுன்சும் இருக்காது. அதனாலே ஒருவேளை இங்கிலாந்து மட்டையாளர்கள் திணறி இருக்கலாம். கெ.எல் ராகுல் கூட அவருடைய high back lift காரணமாக ராபின்சன் பந்துகளை டைம் செய்யத் திணறியதைப் பார்த்தோம். ஆனால் ரோஹித் சற்று தாமதித்து அடிப்பதால் அவரால் இன்னும் மேலாக டைம் பண்ண முடிகிறது.
சேம் கரனுக்கும் இந்த ஆடுதளம் எடுபடுகிறது. அவருக்கு இரண்டாவது ஓவரைக் கொடுக்காமல் இங்கிலாந்து தவறி விட்டது. குறிப்பாக நாளை வானிலை மாறி மேகமூட்டம் சூழ்ந்தால் கரன் போன்றவர்கள் விக்கெட் எடுப்பார்கள்.
ரொம்ப முக்கியமான விசயம் இந்த ஆட்டம் நான்காவது, ஐந்தாவது நாட்களுக்குப் போனால் ஜடேஜா, ஷாமி ஆகியோருக்கு இந்த ஆடுதளம் ஏற்றத்தாழ்வான பவுன்சுடன் சரக்கடித்த வாய்க்கு பிரியாணியுடன் பொரித்த சிக்கனும் கொடுத்தது போல இருக்கும். குறிப்பாக ஷாமி நிறைய LBW எடுக்க வாய்ப்புண்டு. முதல் இன்னிங்ஸிலே LBW முறையில் இங்கிலாந்துக்கு எதிராக 4 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறோம். ராபின்சன் தாகூரின் குறைநீளப் பந்தை புல் செய்ய முயன்று அவுட் ஆனாரே அதற்கும் ஆடுதளத்தில் மெதுவான பவுன்ஸ் ஒரு காரணம். இதெல்லாம் 4, 5 நாட்களில் கூடுதல் சவால்களை ஏற்படுத்தும். ஏனென்றால் இங்கிலாந்தின் சீதோஷ்ண நிலையைப் பார்க்கும் போது ஆடுதளம் முழுக்க காய வாய்ப்பில்லை. கடைசி வரையில் அது பாதி வெந்த முட்டை தோசை தான்.
இது போன்ற குறைவான பவுன்ஸ் உள்ள ஆடுதளத்தில் கோலி நன்றாக ஆடுவார். புஜாரா கூட நன்றாக ஆட வாய்ப்புள்ளது. ரஹானே சொதப்புவார் என்பது என் கணிப்பு (அவருக்கு பவுன்சும் வேகமும் முக்கியம்).
ஆனால் இந்த ஆடுதளத்தில் இங்கிலாந்து ஒரு சுழலரை தேர்வு செய்யாமல் போனது தவறு. இத்தனைக்கும் இங்கிலாந்தில் இப்போது சில நல்ல சுழலர்கள் உள்ளனர் - இந்த ஆடுதளத்தில் 5வது நாள் ஜேக் லீச் மிக முக்கியமான பவுலராக இருந்திருப்பார். ஏழு மட்டையாளர்களைத் தேர்வு செய்தது இன்னும் பெரிய தவறு. சேம் கரமும் ராபின்சனும் ஆல்ரவுண்டர்கள் எனும் போது 6 மட்டையாளர்களே தாராளம். என் புரிதல் படி 99% ஆட்டங்களில் 7வது எண்ணில் வரும் மட்டையாளர்கள் சதம் / அரை சதம் அடிப்பது அரிது.
ஆனால் ஒரு இன்ப அதிர்ச்சியாக கோலி முதன்முறையாக ஒரு நல்ல அணியை தேர்வு பண்ணி இருக்கிறார். மூன்று வேக வீச்சாளர்கள் (அதுவும் சிராஜின் தேர்வு பாராட்டத்தக்கது), ஒரு மிதவேகப்பந்து ஆல்ரவுண்டர், ஒரு சுழல் ஆல்ரவுண்டர். ஷர்துல் தாக்கூரை பவுலிங் ஆல்ரவுண்டராக டெஸ்டில் முன்னெடுப்பது ஒரு நல்ல முடிவு. ஹர்த்திக் பாண்டியாவின் முதுகுக் காயம் அடுத்த ஒன்றிரண்டு ஆண்டுகளில் முழுக்க குணமாகி அவர் டெஸ்ட் கிரிக்கெட் ஆட வாய்ப்பு மிகவும் குறைவு. அவரை விட இப்போதைக்கு ஷர்துல் ஒரு நல்ல பேக்கேஜ். இன்னொருவர் தீபக் சஹர். வரும் நாட்களில் SENA நாடுகளில் இந்தியா ஆடும் போது அவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்.
கோலி அணித்தேர்வில் (நிறைய யோசித்து) இதற்கு மேல் குழப்பங்கள் செய்ய மாட்டார் என எதிர்பார்ப்போம்.
இந்த போட்டியைப் பொறுத்த மட்டில் 100 ரன்களுக்கு மேல் இந்தியா லீட் எடுத்தால் வெற்றி நிச்சயம். ஆனால் முதல் இன்னிங்ஸில் 200க்குள் அவுட் ஆனாலோ 30 சொச்சம் லீட் மட்டும் எடுத்தாலோ நான்காவது இன்னிங்க்ஸில் ஆட்டம் தலைகீழாக வாய்ப்புள்ளது. ஆக, நாளை இரவுக்குள் நமக்குத் தெரிந்து விடும் இந்த போட்டியின் முடிவு எப்படி இருக்கும் என.

கருத்துகள்