முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தினேஷ் கார்த்திக்கின் அவஸ்தை



நாம் பாசத்தில் ‘வெளிப்படையாக’ சொல்லுகிற சில விசயங்கள் அடுத்தவரை ஊசி போல சில நேரங்களில் குத்தி விடும். நேற்றைய கே.கே.ஆர் ஆட்டம் முடிந்ததும் தினேஷ் கார்த்திக்கை பேட்டி எடுத்தார். சீக்கா வழக்கம் போல மைக்கை எடுத்து “டேய் கார்த்திக் வாடா போடா டேய்” என்று ஆரம்பித்து விட்டு “நீ இத்தனைக் காலமும் உன் திறமையை வீணடித்து விட்டாய் என வருத்தம் உண்டு. ஏனென்றால் உனக்கு திறமை மிகவும் அதிகம்” என்று புலம்பினார். தினேஷ் கார்த்திக்கின் முகத்தில் எதையோ மிதித்தது போல ஒரு உணர்வு. ஏற்கனவே மோசமாக ஆடி அவுட் ஆன வருத்தமும் களைப்பும். அதில் இந்த ஆள் வேறு பழைய பல்லவியை எடுக்கிறாரே என வருத்தம் அவருக்கு. 


பந்துகளை கணித்து இஷ்டத்துக்கு அடிக்கிற திறமையை பொறுத்த மட்டில் தினேஷ் கார்த்திக் கோலியை விட மேலானவர், ரோஹித்துக்கு இணையானவர்.

 

அதே நேரம், திறமை நிறைவேறாமல் போன விசயத்தில் கார்த்திக் ஒரு தனி சாதனையாளர். 18 வயதிலேயே இந்திய அணிக்குள் வந்து இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரராக சிறப்பாக ஆடி ரன்கள் அடித்து பிறகு அவருடைய பொறுமையின்மை, சமநிலையின்மை, உணர்வுக்கட்டுப்பாடின்மை (சுருக்கமாக temperament இல்லாமை) காரணமாக ஒருநாள், டெஸ்ட் அணிகளில் இருந்து விலக்கப்பட்டார். இப்போது 18 வருடங்கள் கடந்தும் இந்த டி-20 உலகக்கோப்பையில் ஆவது தனக்கு இடம் கிடைக்குமா என ஏங்கினார். ஆனால் கிடைக்கவில்லை. கார்த்திக்கின் பிரச்சனை அவர் நன்றாக ஆடும் போது அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காது, அவரிடத்தில் அவரை விட நன்றாக ஆடும் ஒருவர் வந்து விடுவார் (தோனி) அல்லது அவருக்கு வயதாகி விட்டது என ஒரு இளைஞரை அவரிடத்தில் கொண்டு வந்து விடுவார்கள் என்பது. மற்றபடி அவருக்குள்ள திறமைக்கு அவர் ஒரு சிறந்த மத்திய வரிசை மட்டையாளராக ஒருநாள், டெஸ்ட், டி-20 போட்டிகளில் ஜொலித்திருக்கலாம். தோனி எனும் ராட்சசன் குறுக்கே வந்த பின்னரும் கூட தொடர்ந்து எண் 6இல் ஆவது ஆடி ஆட்டங்களை வென்றளித்திருக்க முடியும்.

 அவரால் துவக்க எண்ணில் இருந்து ஏழாவது எண் வரை நன்றாக ஆட முடியும். அவருக்கு என்றும் உடற்தகுதியில் பிரச்சனைகள் இருந்ததில்லை. அரசியல் பண்ணுவது, வம்பு தும்பு, ஒழுங்கீனம் எதுவும் இல்லை. சுமாரான கீப்பர் என்றாலும் நல்ல களத்தடுப்பாளர். ஆனால் விதியும், மதியும் அவருடைய வாழ்க்கையில் விளையாடி விட்டன.


கார்த்திக்கின் ஆட்ட வாழ்க்கையின் ஒரே சாதனை ஐ.பி.எல்லில் தொடர்ந்து ஒரு மதிப்புமிக்க மட்டையாளராக, finisherஆக இருப்பதே. ஶ்ரீகாந்தின் பாராட்டு எனும் புலம்பல் கார்த்திக்குக்கு தன் மொத்த 18 வருட கால தோல்விகளையும் டிரைலர் போட்டு காண்பித்திருக்கும். செருப்பெடுத்து சப்பென அறைந்தது போன்ற உணர்வு. முகத்தில் அந்த அதிர்ச்சியும் வருத்தமும் மறையாமல் “சார் நீங்க பத்து வருசமா இதையே தான் சொல்லிக்கிட்டு இருக்கீங்க” என கார்த்திக் பதிலளித்தார். அப்போதும் நம் ஶ்ரீகாந்துக்கு தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என விளங்க வில்லை. “உனக்கு ரொம்ப திறமை இருக்குடா. அதான் நான் பத்து வருசமா சொல்றேண்டா. நீ இந்த முறை ஐ.பி.எல் இறுதிப் போட்டியிலாவது அடிப்பியாடா? சொல்லுடா அடிப்பியாடா?” இதுவும் பாராட்டு போன்ற ஊசிக்குத்தல் தான் - அதாவது நீ எந்த முக்கிய ஐ.பி.எல் போட்டிகளிலும் ரன் அடித்ததில்லை, இம்முறையாவது அடிப்பாயா எனக் கேட்கிறார். அந்த புள்ள சாதித்தது இதில் ஒன்றில் தான், இதிலும் ஏன் இவ்வளவு விமர்சனம் வைக்க வேண்டும் மிஸ்டர் சீக்கா என எனக்குத் தோன்றியது.


அவர் இதற்குப் பதிலாக “கார்த்திக் நீ ரொம்ப திறமையானவன். எனக்கு உன் மீது நம்பிக்கை உண்டு. நீ இந்த ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் ஒரு முக்கியமான இன்னிங்க்ஸ் ஆட வேண்டும். செய்வியா?” எனக் கேட்டிருக்கலாம். ஆனால் சீக்காவுக்கு தான் வாயில் வாஸ்து சரியில்லையே.


ஏனென்று தெரியவில்லை, எப்போதும் ஒரு விமர்சனத்தை முன்னொட்டாக வைத்து பாராட்டுவது வெறும் விமர்சனத்தை விட மக்களை அதிகமாக காயப்படுத்துகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...