காந்தி எப்போதும் முதலாளித்துவத்தின் நலனைக் காக்கவே விரும்பினார். காந்தி இப்போது இருந்திருந்தால் நேரடியாக அதானியிடமும் அம்பானியிடமும் பேசி, ஏழைகள் நம் நாட்டின் கண்கள் என உருக்கமாய் அறிக்கை விட்டு, குற்றவுணர்வை சுரண்டி சில பல உதவிகளை செய்யக் கேட்டு "இப்போதைக்கு பொருளாதாரம் வளர்வதற்கு மக்கள் இந்த துன்பங்களை பொறுக்கணும், பெட்ரோல் விலையை குறைத்தாலோ வேலை நீக்கங்களை தடுத்தாலோ விவசாயிகளுக்கு நேரடியான நிதியுதவி செய்தாலோ சமூகத்தின் ஆன்மா கறைபட்டு விடும், ஏனென்றால் துன்பமும் ஏழ்மையுமே நம்மை உன்னதமானவர்கள் ஆக்கும்" என உரையாற்றி, கூடவே அம்பானி, அதானிகளையும் போற்றி நன்றி கூறி இருப்பார். அதாவது ரெண்டு பக்கமும் பெரிய பாதகம் வராத மாதிரி, முதலாளிகளுக்கு நட்டமோ மத்திய வர்க்கம், கீழ்த்தட்டினருக்கு மேம்பாடோ வராத மாதிரி ஒரு அரசியலைப் பண்ணுவார். இந்த status quo அரசியலைத் தான் காந்தியார் இந்தியாவின் ஆன்மாவை சுத்திகரிக்கும் பெரும்பணி எனக் கூறிக் கொண்டிருந்தார். இந்த கார்ட்டூனில் வரும் பகடி நியாயமானதே.
ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன். அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கருத்துகள்