இந்த 83 டிரெய்லரை ஏன் இப்படிக் கொண்டாடுகிறார்கள் எனத் தெரியவில்லை. இறுதி ஷாட்களில் இந்திய வெற்றியைக் காட்டி மயிர்க்கூசெறிய வைப்பது ஒரு எளிய தந்திரமே. மற்றபடி நிறைய மிகை, தெய்வழக்குகள் கொண்ட ஒரு 'தாயின் மணிக்கொடி, தாயின் மணிக்கொடி ஜெய்ஹிந்த்' பாணி படமாகவே தெரிகிறது. ஒவ்வொரு நடிகரையும் காட்டி இவர் இந்த பாத்திரம் என்று சொல்லுவது, வெஸ்ட் இண்டீஸை திமிர் பிடித்தவர்களாகக் காட்டுவது அவசியமற்றது. அப்புறம் ஸ்ரீகாந்துக்கு தடுப்பாட்டம் தெரியாது என்று ஒரு வசனம் வேறு. ஸ்ரீகாந்து அடிக்க வேண்டிய பந்துகளை உள்தடுப்பு வட்டத்துக்கு மேல் தூக்கி அடித்தாரே தவிர கண்ணை மூடி சுற்றிய மட்டையாளர் அல்ல. தேவையான நேரத்தில் ஒற்றை ஓட்டம் எடுப்பது என ஆடியவரே அவர். எல்லாரும் நத்தையாக ஊர்ந்த காலத்தில் சீக்கா சற்று கூடுதல் ரிஸ்க் எடுத்து ஆடினாரே தவிர இன்றைய சூர்யகுமார் யாதவைப் போன்றவரே அவர். கபில் தேவுக்கு சுத்தமாக ஆங்கிலத்தில் பேச வராது என்பது போல ஒரு காட்சியும் உண்டு. நிஜமாகவே கபில் அன்று அவ்வாறு இருந்தாரா? எனக்குத் தெரிந்து அவர் பெரிய பிழைகள் இன்றி ஆங்கிலம் பேசக் கூடியவரே.
எதுக்குய்யா இந்தியா வெற்றி பெற்றால் பெவிலியனில் நின்று சலூட் அடிக்கிறானுங்க? நான் ஒரு தடவை கூட பண்ணினதில்லையே? பலமுறை மைதானங்களில் இந்தியாவின் ஆட்டங்களைப் பார்த்திருக்கிறேன். யாரும் தேசபக்தி சன்னதம் வந்து ஆடியதைக் கண்டதில்லை. 83இல் நாம் உலகக்கோப்பையை வென்ற போதும் ஜாலியாக ஷேம்பெயின் உடைத்து கொண்டாடினார்களே ஒழிய யாரும் அணிவகுத்து சலூட் அடித்து ஏதோ எல்லையில் ராணுவ வீரர்களை எண்ணி கண்ணில் ஜலம் வைத்ததைப் போல பண்ணியதில்லை. நம் இந்திப்பட இயக்குநர்கள் மட்டுமே இத்தகைய ஜிம்க்ஸை செய்கிறார்கள்.
இப்படத்தின் இயக்குநர் கபீர் கானுக்கு கிரிக்கெட் பற்றித் தெரியுமா, போதுமான அளவுக்கு ஆய்வு செய்துள்ளாரா என்பதே சந்தேகம் தான். இவருடைய The Forgotten Army வெப்சீரிஸை பார்த்திருக்கிறேன். அது ரொம்ப கேவலமாக இருக்கும்.
இந்த படத்தைப் பார்க்கப் போகும் அசல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இப்போதே என் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கிரிக்கெட்டை பிக்பாஸ், சூப்பர் சிங்கர் போல அணுகுபவர்கள் படம் ஆரம்பிக்கும் முன்பே ஜாலியாக கைதட்டி படம் முடிந்த பின்பு திடுக்கிட்டு அழலாம். கபீர் கானின் கைவண்ணம் அப்படி என அவருடைய வேறுபடங்களைப் பார்த்தாலே தெரியும்.
Comments