முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிளேஷ்பேக்



தமிழ் சினிமாவில் மிக மிக மோசமாக பயன்படுத்தப்படும் உத்தி பிளேஷ் பேக். பெரும்பாலான நல்ல படங்களில் இந்த பிளேஷ்பேக் எனப்படும் தொப்பை நம்மை தொந்தரவு பண்ணுவதில்லை. மோசமான படங்கள் பலவற்றில் பிளேஷ்பேக்கை தூக்கி விட்டால் திரைக்கதை வடிவமும் சிக்கென்று இருக்கும். கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் வெளிவந்த ரஜினி படங்களில் பிளேஷ்பேக் ஆரம்பித்தாலே நான் தூங்கி விடுவேன். எனக்கு மிகவும் பிடித்த படமான “காலாவில்” அந்த பிளேஷ்பேக்கை அனிமேஷனில் காட்டி சமாளித்து விட்டார்கள். ஆனாலும் அந்த ஹூமா குரேஷியின் காதல் பகுதி கூட செம போர் தான். “பாட்ஷாவில்” கூட பிளேஷ் பேக் பகுதி செம மாஸாக இருக்கும் என்றாலும் நான் அதை பின்கதை அளவுக்கு வெகுவாக ரசிக்கவில்லை. “தளபதியில்” முதல் ஐந்து நிமிடத்திலே கடந்த காலத்தை முடித்து விட்டு கதைக்கு வந்து விடுவார் மணிரத்னம். “முள்ளும் மலரும்” படத்துக்கு ஒரு மோசமான இயக்குநர் திரைக்கதை எழுதி இருந்தால் படத்தில் ஒரு அரை மணி நேரத்தை குழந்தை ரஜினியும் குழந்தை ஷோபாவுமாக எப்படி வளர்ந்தார்கள் என்பதை பாடலுடன் காட்டி இருப்பார்கள். ஆனால் அதற்கு அவசியமே இல்லை என மகேந்திரன் அறிந்திருந்தார் - ரஜினியையும் அவருடைய தங்கையும் நடந்து கொள்வதைக் கண்டதுமே நாம் அவர்களுடைய கடந்த காலத்தை ஊகித்து விட முடிகிறது.

 

“பேட்ட” படத்திலும் பிளேஷ் பேக் காட்சிகள் ஒரு ஸ்பீட் பிரேக்கர் தான். பிளேஷ் பேக் விசயத்தில் மிக மட்டமான உதாரணம் “அண்ணாத்தெ”.

 

“கஜினியில்” மட்டும் தான் எனக்குத் தெரிந்து பிளேஷ் பேக் காட்சிகள் நேரடியான மற்ற காட்சிகளை விட வெகுசுவாரஸ்யமாக, உயிரோட்டமாக இருக்கும். மொட்டை சூர்யா வந்ததும் படம் அலுப்பூட்டும். (ஆனால் “மொமெண்டோவில்” முழுக்கதையும் நான்-லீனியரில் செம திகிலாக செல்லும்.)

 

எனக்குத் தெரிந்து தமிழின் கறுப்பு வெள்ளைப் படங்களில் பிளேஷ்பேக் அனேகமாக இல்லை. முன் கதையை படத்தின் துவக்கத்திலே சொல்லி விடுவார்கள். பாலசந்தர், பாலுமகேந்திரா, பாரதிராஜா படங்களிலும் இவ்வளவு பெரிய அலுப்பூட்டும் பிளேஷ்பேக்குகளைப் பார்த்த நினைவில்லை. அதன் பின்னர் வேறெப்போதோ தான் இந்த ‘பிளேஷ்பேக் பைத்தியம்’ நம் இயக்குநர்களுக்கு பிடித்திருக்கிறது.

 

பிளேஷ்பேக்கை 15-20 நிமிடத்திற்கு (அல்லது அண்ணாத்தெவில் போல ஒன்றரை மணிநேரத்துக்கு) தனி எபிசோடாக வைக்காமல் சில வசனங்கள் வழியாக சுருக்கமாக சொல்வது ஒரு நல்ல உத்தி. ஏனென்றால் திரைப்படம் - நாடகம், சிறுகதையைப் போன்று - ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் நடக்கிற கதை. ஒரு நாளுக்குள் நடக்கிற திரைக்கதை சுமாராக எழுதப்பட்டு எடுக்கப்பட்டாலும் விறுவிறுப்பாக இருப்பது இதனாலே. கதை நடக்கும் காலம் நாட்களாக, மாதங்களாக விரிய விரிய கதை சோர்வடைந்து விடும். ஆகையால் கதையோட்டத்தின் ஊடே வசனம் வழியாக முன்கதை / பிளேஷ்பேக் சொல்லப்படும் போது வடிவ ஒழுக்கம் கெடுவதில்லை. மிஷ்கினின் “ஓநாயும் ஆட்டுக்குட்டிகளும்” இதற்கு சிறந்த உதாரணம். ஏன் ஓநாய் அந்த குடும்பத்தைக் காப்பாற்ற பாடுபடுகிறான் என்பதை அந்த உருக்கமான monologueஇல் மிஷ்கினின் பாத்திரம் சொல்லும் போது ஒட்டுமொத்த திரையரங்கும் உறைந்து போயிருந்து அதைக் கேட்டதை கண்டேன்.

 

“மூடர் கூடம்” படத்தில் பிளேஷ்பேக்கை மனிதர்களின் போலியான சுயவரலாற்றை பகடி செய்ய பயன்படுத்தி இருப்பார்கள். அதில் அந்த Great Dane நாய்க்கு கூட ஒரு பிளேஷ் பேக் வைத்து இயக்குநர் நவின் அதகளம் பண்ணி இருப்பார்.

 

“கைதியில்” பிளேஷ்பேக்கே இல்லை என்பது படத்தின் நாயகனுக்கு ஒரு தனி வசீகரத்தை அளித்தது.

 

ஒரு அதிநாயகன், சீரியல் கில்லர், பயங்கரவாதி போன்ற பாத்திரங்களின் வாழ்க்கையை மட்டும் பேசும் படங்களில் தான் பிளேஷ்பேக் செமையாக வேலை செய்கிறது. உ.தா., “பேட்மேன்” தொடர்வரிசைப் படங்கள். வில்லன் “ஜோக்கரைப்” பற்றின அந்த படத்தில் கூட முன்கதை அவ்வளவு சிறப்பாக இருந்தது. தமிழில் ராமின் “கற்றது தமிழ்”, “தரமணி” போன்ற படங்களில் விளிம்பில் வாழுகிற ஒரு சாமான்ய மனிதன் தான் ஏன் அவநம்பிக்கை மிக்கவனாக, பொறுக்கியாக மாறினேன் என அவனுடைய குரலிலே சொல்லுவதாக அமையும் பிளேஷ் பேக் காட்சிகள் சிறப்பாக இருந்தன. ஆனால் இதில் ஒரு தவிர்க்க முடியாத விதி கதை முழுக்கவே அந்த எதிர்மறையான, சைக்கோவான பாத்திரத்தைப் பற்றி இருக்க வேண்டும் என்பது. அவனை ஒரு வில்லனாக மாற்று ஹீரோவுக்கு அதிக இடமளிக்கும்பட்சத்தில் அவனுக்கான வில்லன் பிளேஷ்பேக் எடுபடுவதில்லை. இதற்கு மிஷ்கினின் “சைக்கோ” ஒரு சிறந்த உதாரணம்.

இதுவே உறவுகளைப் பற்றின, தனிமனித சிக்கல்களைப் பேசுகிற தமிழ் படங்களில் பிளேஷ்பேக் வைத்தால் அது கதையை தொய்வாக்கி விடுகிறது.   

 

சிவசங்கரியின் நாவல் ஒன்றைத் தழுவி மலையாளத்தில் பத்மராஜன் “இந்நலே” (நேற்று) என்றொரு படமெடுத்தார். ஒரு இளம்பெண்ணுக்கு விபத்தில் தன் கடந்த காலம் முழுக்க மறந்து போகிறது. தன் பெயரென்ன, ஊரென்ன, திருமணமாகி விட்டதா எதுவும் நினைவில்லை. ஒரு புதிய பெயருடன் அடையாளத்துடன் புதிய வாழ்க்கை ஒன்றை அமைத்துக் கொள்கிறாள். தன்னைக் காப்பாற்றிய இளம் மருத்துவரை காதலித்து அவரைத் திருமணம் செய்ய முடிவெடுக்கிறாள். திருமணத்துக்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆண் சில புகைப்படங்களுடன் அவளைத் தேடி வருகிறார். அப்பெண் தன்னுடைய மனைவியாக இருக்கக் கூடும் எனக் கோரி அவளைப் பார்த்து ஊர்ஜிதம் செய்வதற்காக காத்திருக்கிறார். அப்போது அவர் அவளுக்கு திருமணப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்கிறார். அவளுடைய படங்களையும் அங்கு காண்கிறார். அவருக்கு எதுவோ புரிந்து போகிறது. அப்பெண் தன்னைப் பார்க்க வருமுன் அவர் கிளம்பி சென்று விடுகிறார். பிளேஷ்பேக்கை இப்படி சொல்லாமலே சொல்லி படத்தை சுவாரஸ்மாக, விறுவிறுப்பாக பத்மராஜன் எடுத்திருப்பார். பிளேஷ்பேக் மட்டும் வந்து விட்டால் அப்படம் காணாமல் போய் விடும். ஒரு மனிதனின் வாழ்வில் பிளேஷ்பேக் காணாமல் போய்விட்டால், அது கிட்டத்தட்ட கிடைக்க வாய்ப்பு அமைந்து பின்னர் நிகழாது போனால் என்னவாகும் என்பதே அப்படத்தின் ஒற்றை வரி என்று கூறலாம்.

 

Lion என்றொரு மிகவும் உணர்வுபூர்வமான படம் இருக்கிறது. A Long Way Home என்கிற வாழ்க்கைக் கதையை தழுவி எடுக்கப்பட்டு 2016இல் வெளியான படம் இது. (நெட்பிளிக்ஸில் கிடைக்கிறது.) சரூ எனும் ஒரு ஐந்து வயது ஏழைச் சிறுவன் ரயில் நிலையத்தில் வைத்து தொலைந்து போகிறான். கொல்கொத்தாவில் அவன் தெருவிலும் அனாதை இல்லத்திலும் வாழ்ந்து பின்னர் ஆஸ்திரேலியாவில் உள்ள தம்பதியினரால் தத்தெடுக்கப்பட்டு அங்கு செல்கிறான். காலப்போக்கில் அவன் தன்னுடைய சிறுவயது பின்னணியை மறந்து போகிறான். இருபது வருடங்களுக்குப் பிறகு நண்பர்களுடனான ஒரு விருந்தில் ஜெலேபி சாப்பிடும் போது அவனுக்கு சட்டென்று தன்னுடைய கடந்த கால வாழ்க்கை சன்னமாக மனதில் நிழலாடுகிறது. ஆனால் ஒரு பிரச்சனை - அவனுக்கு எல்லாம் நினைவிருக்கிறது, சொந்த ஊரின் பெயரைத் தவிர. அதைக் கண்டுப்பிடித்தால் மட்டுமே சொந்த தாயையும் சகோதரனையும் அவன் கண்டுபிடிக்க முடியும். அவன் கூகிள் எர்த் இணையதளத்தை பயன்படுத்தி பல மாதங்களாகத் தேடி தன் ஊரைக் கண்டுபிடித்து சொந்த தாயைப் போய் சேர்வதே மிச்ச கதை. ஒரு குழந்தையின் நினைவில் பிளேஷ்பேக்கு இடமில்லை என்பதை வைத்தே மொத்த கதையும் பின்னப்பட்டிருக்கிறது. அந்த நினைவு மட்டும் இருந்தால் அக்கதையே இல்லை.

பிளேஷ்பேக் என்பதே பழைய நினைவை மீட்பது தானே! ஒருவேளை ஒரு கணப்பொழுதில் நாம் காணாமல் விட்ட ஒரு சம்பவம் ஒருவருடைய வாழ்க்கையை தலைகீழாக்கினால், ஒருவருடைய மரணத்துக்கு வழிவகுத்தால், அந்த இல்லாமல் போன நினைவு நம்மை பின்னர் துரத்தினால் என்னவாகும் என்பதே மிஷ்கினின் “பிசாசு”. தான் கவனிக்காமல் விட்ட அந்த நினைவை அவன் மீட்டெடுக்கிற பிளேஷ்பேக்கே அப்படத்தின் இறுதி திருப்புமுனை.

 

பிளேஷ்பேக் அடிப்படையில் நாவலுக்கான உத்தி. நாவலில் அதை எப்படி வேண்டுமெனிலும் நாம் பயன்படுத்த முடியும். முன்னுக்குப் பின்னாக காலத்தை பல நூறு பக்கங்களை கலைத்து அடுக்க முடியும். அது கதையோட்டத்தை பெரிதாக பாதிக்காது. புரூஸ்டின் In Search of Lost Time நாவல் ஒவ்வொரு நிமிடத்துக்குள்ளும், அதிலுள்ள வினாடிகளுக்கும் மடிப்பு மடிப்பாக பல நினைவுகளை பிளேஷ்பேக்கில் சொல்ல முயல்கிற படைப்பு. வெர்ஜினியா வூல்பின் Mrs Dalloway நாவலின் நனவோடை உத்தியும் சங்கிலித் தொடர் பிளேஷ்பேக்குகளின் பாணியே. ஆச்சரியமாக, தல்ஸ்தாயின் “போரும் அமைதியும்” எனும் பிரமாண்ட நாவலில் பிளேஷ்பேக்குள் மிக மிக சொற்பமே. இதையே “அன்னா கரெனினாவுக்கும்” சொல்லலாம். ஆனால் நாவலைப் போல சிறுகதையும், திரைக்கதையும் பிளேஷ்பேக்குக்காக உருவாக்கப்பட்ட வடிவங்கள் அல்ல - அவற்றில் பிளேஷ் பேக்கை பயன்படுத்துவது கத்தி மீது நடப்பதைப் போன்ற காரியம்.

நன்றி: சமயம் டாட் காம்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...