முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோலியின் பிரச்சனை என்ன?



விராத் கோலி பற்றிய கருத்துக்களில் என்னை மிகவும் கவர்ந்தது அஷ்வினுடையதே. அவர் கோலி கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாகவே நன்றாக மட்டையாடி வருவதாகக் கூறி இருக்கிறார். இது சரி தான். ஒரு மட்டையாளர் தன ஆட்டநிலையை இழக்கும் போது மூன்று விசயங்கள் நடக்கும்:

1) தொழில்நுட்ப பிரச்சனை ஒன்று அம்பலமாகி அதில் இருந்து வெளிவரத் தெரியாமல் தவிப்பார்கள். (காம்ப்ளி, லஷ்மண், திராவிட், ஸ்டீவ் வாஹில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் வரை )
2) உடற்தகுதியின்மை ஏற்படும். (கங்குலி, சச்சின்)
3) பந்து விழும் நீளத்தை கணிக்க முடியாமல் போகும் - சிலருக்கு பார்வைக் குறைபாட்டினாலும் வேறு சிலருக்கு தசைகளுக்கும் நரம்புகளுக்குமான தொடர்புறுத்தல் தாமதமாவதாலும் இது நேரும். (திராவிட் இரண்டுக்கும் உதாரணம்)

ஆனால் கோலிக்கு இந்த பிரச்சனைகள் இல்லை. அவருக்கு நான்காவது, ஐந்தாவது குச்சியில் விழும் முழுநீளப் பந்துகளை விரட்டிச் சென்று ஸ்லிப்பில் அவுட் ஆகும் வழக்கம் இருந்தது. அதையும் கட்டுப்படுத்த கற்றுக் கொண்டார். தேவையான போது சிறப்பாக கவர் டிரைவ் செய்வதும் உதவியது. கால்சுழலையும் ஆப் ஸ்பின்னையும் ஆடும் போது பந்தின் திசையை கணிப்பதில் ஒரு சிக்கல் இருந்தது. இதையும் பந்தை தடுத்தாடும் யுக்தியால் எதிர்கொண்டார். இருந்தும் அவர் தொடர்ந்து முதலாவது அல்லது இரண்டாவது ஸ்லிப்பில் அவுட் ஆகிறார். அல்லது பவுல்ட ஆகிறார். அவர் சதமாடித்து 77 இன்னிங்ஸ் மேலாகிறது. ஏன்?

டெஸ்டிலோ ஒருநாள் போட்டிகளிலோ டி20களிலோ கோலி அவுட் ஆவதில் ஒரு ஒழுங்குமுறை உள்ளது - ஒருநாள் / டி-20 போட்டிகள் என்றால் முதல் 10-15 நிமிடங்கள் நன்றாக ஆடுவார். வெளியே போகும் பந்து விசயத்தில் கவனமாக இருப்பார். நேராக பந்தை விரட்டுவார். பவுண்டரிகள், ஒற்றை, இரட்டை ஓட்டஙக்ள் சரளமாக வரும். அடுத்து புதிய பந்து வீச்சாளர் வருவார். கோலி இப்போது கவனம் இழந்து, நான்காவது குச்சியில் விழுந்து மேலும் வெளியே போகும் பந்தை உடம்புக்கு வெளியே பந்து விரட்டவோ திருப்பி விடவோ முயன்று கீப்பருக்கோ ஸ்லிப்பிலோ கேட்ச் கொடுப்பார். டெஸ்ட் போட்டி என்றால் மேற்சொன்ன முறையிலோ சுழற்பந்தை தவறாக அடிக்க முயன்றோ வெளியேறுவார். இதைப் பார்க்கும் போது பிரச்சனை கோலியின் மனத்தில் தான் இருக்கிறது, அவரது கவனம் முழுக்க ஆட்டத்தில் இல்லை எனத் தெரிகிறது.

2017இல் இது துவங்குகிறது எனில் அப்போது ஒரு அணித்தலைவராக கோலிக்கு அணிக்குள்ளிருந்தும் வெளியே வாரிய நிர்வாகத்தினரிடம் இருந்து வந்த அழுத்தங்களினால் அவர் தன் ஆட்ட அக்கறையை இழந்து அதுவே பின்னர் ஒரு பழக்கமானதா? ஆட்டத்தின் அரசியலின் பால் அதிகமாக ஈடுபட்டதால் அடிப்படைகளில் ஆர்வம் இழந்து பின்னர் கிரிக்கெட் ஆடுவது அலுவலகம் போவதைப் போல ஒரு பழக்கம் மட்டும் ஆனதா? இக்கேள்விகளுக்கு கோலி மட்டுமே பதிலளிக்க இயலும்.

ஆட்டத்தின் போக்கில் முழுமையாக இருப்பது அவசியம். இதுவும் ஒரு பழக்கமே. கோலியின் மட்டையாட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாகவே இப்படி ஒரு கவனச்சிதறல் வந்து அது ஒரு அமைவாக நிலைப்பெற்று விட்டது. இதை சரி செய்வதற்கு அவராக முயன்றே சரி செய்ய முடியும். மேலும், எதனால் அவர் தன் கவனத்தை ஆட்டத்தில் இருந்து வேறெங்கோ உலவ அனுமதிக்கிறார் என்றும் அவர் யோசித்து கண்டுபிடிக்க வேண்டும்.

முன்பு சச்சின் அணித்தலைவராக இருந்த அணியில் அசருதீன் இப்படி விதவிதமாக அவுட் ஆகிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவரை அணியில் இருந்து நீக்கினார்கள். 98இல் திரும்ப வந்து வெகு சிறப்பாக ஆடினார். சச்சினும் தன் அணித்தலைமையில் இருந்து விலகிய பின்னர் அசரூதீனின் தலைமையின் கீழ் வெகு அற்புதமாக புதிய ஆற்றலுடன் ஆடிக் காட்டினார். ஆனால் தன் தலைமை கோலி அந்தளவுக்கு ஒரு நிதானதத்துடன் உறுதியுடன் கைவிட்டதாகக் கூற முடியாது.

அதனாலோ ஏனோ அவர் ஒரு வீரராகவும், தனிமனிதராகவும் ஒருமுகமாக இல்லை எனத் தோன்றுகிறது. ஆம் களத்தில் முழு ஈடுபாடு காட்டுகிறார், ஆனால் ஆட வரும் போது அந்த பழைய துடிப்பு, ஈடுபாடு இல்லை. அதனால் தான் ஓரு சில தொடர்களில் ஓய்வு பெற்று திரும்ப வந்தாலும் கோலியின் முகத்திலும் உடல்மொழியிலும் ஆட்டத்திலும் ‘ஆன்மா’ இல்லை. மருமகளிடம் கோபித்துக் கொண்டு பூஜை, டிவி சீரியல் என ஒதுங்கி விட்ட மாமியாரைப் போல் தென்படுகிறார்.

இப்போதைக்கு அவர் தன் மனக்குதிரை மீது அமர்ந்து அது எங்கோ போகிறது என்றே அக்கறையில்லாமல் காடுமேடென திரிந்து கொண்டிருக்கிறார். ஒரு ஆட்டத்தில் அரை சதம் அடித்தாலும் அடுத்த ஆட்டத்தில் மீண்டும் தறிகெட்டு ஓடுகிறது மனக்குதிரை. கோலியிடம் இன்னும் 4 ஆண்டுகள், 40 சதங்கள் மீதமுள்ளன. அற்பமான பிரச்சனைகளுக்காக அவர் தன் திறனை, அனுபவத்தை வீணடிக்கப் போகிறாரா இல்லை மனதைக் கட்டுப்படுத்தி அதன் மீது ஏறி அமர்ந்து பழையது போல சவாரி பண்ணுவாரா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...