தமிழ் ஸ்டுடியோ அருணின் இலக்கிய பார்வைகளுடன் நான் முழுக்க உடன்படுவதில்லை. ஆனால் தமிழில் மாற்று சினிமாவை உருவாக்க வெளியே இருந்து கடுமையாக பிரயத்தனிக்கும் ஒரு முக்கியமான ஆளுமை. இளைஞர்களுக்கு சினிமா வகுப்புகள், சினிமாவுக்கான இதழ், திரைமொழியை விளக்கும் அருமையான காணொளிகளைக் கொண்ட யுடியூப் சேனல், திரைக்கதை உள்ளிட்ட தொழில்நுட்ப விசயங்களைக் கற்றுத் தரும் பயிலரங்குகள், பதிப்பகம் என ஏராளமான பணிகளை செய்து வருபவர். தமிழில் சில நேரம் நாம் புலம்புவதுடன் நின்று விடுகிறோம். அருணைப் போல சிலரே தாம் விரும்பும் மாற்றத்தை தாமே செய்ய ஆரம்பிக்கிறார்கள். ஒரு சூன்யத்தில் நாமே ஒரு செங்கல்லைக் கொண்டு வைத்து வைத்து ஒரு பாதி சுவரை எழுப்ப முடிந்தாலே அது வெற்றி தான்.
இயக்குநர் கணேஷ் (“மூன்று தோட்டாக்கள்”) என்னிடம் பேசும் போது அருணின் திரைப்பட வகுப்புகள் தனக்கு ஒரு புதிய உலகைத் திறந்து காட்டியதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இப்படி பல இளைஞர்களுக்கு அவர் வழிகாட்டுகிறார். இது பாராட்டத்தக்கது.
இப்போதெல்லாம் மிஷ்கினையும், வெகுஜன சினிமா பிரபலங்களையும் பயன்படுத்தி கட்டணம் வாங்கும் பயிலரங்குகளை நடத்தி தன் இயக்கத்தைக் காப்பாற்றும் புத்திசாலித்தனமும் அவருக்கு வந்திருக்கிறது.
கூடவே அவர் இன்னும் இரு விசயங்களையும் பண்ண வேண்டும்:
பேஸ்புக்கில் அவர் கத்தி சுழற்றும் பதிவுகளை விட யுடியூபில் அவர் சினிமாவைப் பற்றி அலசுகிற, விளக்குகிற காணொளிகள் இன்னும் ஆழமானவை. அவர் ஏன் இதைப் போல எழுதுவதில்லை என்று வியக்கிறேன்.
இதழை நடத்துவது துவங்கி வேறு விசயங்களிலும் அவருக்கு ஒரு தேவையில்லாத பிடிவாதம் உண்டு. அதை அவர் வருமாண்டில் கைவிட வேண்டும் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த செயல்வீரருக்கு என் அன்பையும் பிறந்த நாள் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Comments