“புதிர் என்னவென்றால் செலினாவை என்னுடன் மேட்டர் பண்ண விரும்ப வைக்க ஒரே வழி அவளுடன் மேட்டர் பண்ண நான் விருப்பமற்றவனாவதே. இது ஒருபோதும் சொதப்புவதில்லை. இது அவளை எப்போதும் தூண்டுகிறது. ஒரே பிரச்சனை அவளுடன் மேட்டர் பண்ண நான் விரும்பாத போது (இது அடிக்கடி நடப்பதே), எனக்கு அவளுடன் மேட்டர் பண்ண வேண்டாம். இது எப்போது நிகழும்? நான் எப்போது அவளுடன் மேட்டர் பண்ண விரும்பாதிருப்பேன்? அவள் என்னுடன் மேட்டர் பண்ண விரும்பும் போது. அவளுக்கு என்னுடன் மேட்டர் பண்ண விருப்பமே இல்லாத போதே நான் அவளுடன் மேட்டர் பண்ண நான் விரும்புகிறேன். நான் அவளிடம் சத்தம் போட்டாலோ, அச்சுறுத்தினாலோ அவளுக்கு போதுமான பணம் கொடுத்தாலோ அவள் பெரும்பாலும் என்னுடன் மேட்டர் பண்ணுவாள் தான்.”
- மார்ட்டின் ஆமிஸ், Money: A Suicide Notebook நாவலில் இருந்து
திரும்பத் திரும்ப உடலுறவைப் பற்றியும் விருப்பம் பற்றியும் இருவருக்குமிடையே ஒத்திசைவு இல்லாமல் போகிற சந்தர்பங்களின் அபத்தம் பற்றியும் ஆமிஸ் எவ்வளவு வேடிக்கையாகவும் வலியுடனும் எழுதுகிறார் பாருங்கள்! உடலுறவுச் சொல்லை (நான் அதன் பாமரத்தனமான தொனிக்காக “மேட்டர் பண்ணுவது” எனும் சொல்லாடலை தேர்ந்தேன்) அப்பாத்திரம் மீள மீள மாறுபட்ட சொற்களோ, இலக்கிய குறிப்புணர்த்தலோ, அலங்காரம் இன்றி நேரடியாக சொல்லும் போது அவனுடைய எளிமையான கபடமில்லாத மனவமைப்பும் நமக்குப் புரிய வருகிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை எனும் தவிப்பின் பகடி அதே அளவில் ஒரு முரட்டுத்தனமான குரூரத்தில், சுரண்டலில் போயும் முடிகிறது. கடைசி வரியில் அச்சொல்லின் பொருள் நுட்பமாக மாறுகிறது.

Comments