1)
நான் யாருமல்ல! நீங்க யார்?
நீங்களும் யாருமல்லவா?
எனில் நாம் கைகோர்ப்போம் - யாரிடமும் சொல்லாதீர்கள்!
எவ்வளவு அலுப்பானது இது, இப்படி யாராகவோ இருப்பது!
எவ்வளவு பட்டவர்த்தமாக,
தீர்ந்தும் தீராத ஓர் நாள் முழுக்க, நம் பெயரை சொல்லியிருப்பது
ஒரு அபிமானி சதுப்பிடம் ஒரு தவளையாக!
2)
முன்பு வந்துள்ள ஒரு எண்ணம்
இன்றென் மனதில் எழுந்து வந்தது,
ஆனால் அது முடியவில்லை - என்றோ ஒருநாள்
அது எந்த வருடம் என்று நினைவில்லை
அல்லது அது எங்கு போயிற்றென்றோ, அது ஏன்
இரண்டாம் முறை என்னிடம் வந்ததென்றோ,
அல்லது துல்லியமாக அது என்னவென்றோ
சொல்லும் திறன் எனக்கில்லை.
ஆனால் எங்கோ என் ஆன்மாவில், எனக்குத் தெரியும்
அதை நான் சந்தித்ததுண்டு இதற்கு முன் என்று;
அது தன்னை எனக்கு நினைவுபடுத்தியது - அவ்வளவே -
அதன் பிறகு என் வழியே திரும்ப வரவேயில்லை.
3)
நான் வேறொன்றும் வேண்டாம் என்றேன்,
வேறொன்றும் வேண்டாமும் மறுக்கப்பட்டது.
நான் என் இருத்தலை அதற்கு விலையாகச் சொன்னேன்;
மகாகணம் பொருந்திய வியாபாரி புன்னகைத்தார்.
பிரேஸிலா? அவர் ஒரு பொத்தானை திருகினார்,
என் பக்கம் கடைக்கண்ணைப் பாராமலே:
“ஆனால் மேடம், இன்றைக்கு
உங்களுக்கு வேறேதும் காட்ட வேண்டாமா என்ன?”
- எமிலி டிக்கின்ஸன்
தமிழில் ஆர். அபிலாஷ்
- எமிலி டிக்கின்ஸன்
தமிழில் ஆர். அபிலாஷ்

Comments