முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"ஜெயஜெய ஜெயஜெய ஹெ"


அந்த பிரசித்தமான அந்த வடிவேலு-கோவை சரளா நகைச்சுவைக் காட்சியுடன் 90s ரோஹிணி, ரேவதி பாணி பெண்ணிய காட்சிகளையும் சேர்த்து மிக்ஸியில் ஓட்டினால் இந்த படம் வந்துவிடுகிறது.

இந்த படத்தின் பலம் கடைசி வரை வரும் இயல்பான செமையான டைமிங் கொண்ட நகைச்சுவை. நகைச்சுவையை எடுத்துவிட்டால் இபடத்தில் ஒன்றுமே இல்லை. 
அந்த கராத்தே சண்டையை எடுத்துக் கொள்வோம் - யாராவது யுடியூபில் பார்த்து இந்தளவுக்கு கராத்தேயில் நிபுணராக முடியுமா? வாய்ப்பே இல்லை. அதே போல தனக்கு எந்த அனுபவமும் இல்லாத கறிக்கோழி தொழிலில் நாயகி களமிறங்கி பத்து நொடிகளில் தன் கணவனையே அதில் முறியடிப்பதெல்லாம் ரொம்ப ஓவராக, எதார்த்தத்துக்குப் புறம்பாக இருக்கிறது.

 பொதுவாக நகைச்சுவைப் படங்களின் முடிவில் ஒன்று வலுவான சமூகப்பகடி இருக்க வேண்டும் - "சூது கவ்வும்" போல. அல்லது கதாபாத்திரங்கள் தம் குறையை உணர்ந்து திருந்த வேண்டும் அல்லது உணரவாவது வேண்டும் - கமல்-கிரேஸி மோகன் டைப் நகைச்சுவை படங்களைப் போல. முதலாவதை அரிஸ்டோபேனஸ் பாணி இன்பியல் என்றும் இரண்டாவதை மியாண்டர் பாணி இன்பியல் என்றும் பழங்கால கிரேக்க இன்பியல் ஆசிரியர்களின் பெயரை வைத்து அழைப்பார்கள். உலகம் முழுக்க பின்பற்றப்படும் பாணிகள் இவையே. இப்படம் முதலாவது பாணியில் எடுக்கப்பட்டது என்றாலும் இதன் முடிவு நகைச்சுவையாக பகடியாக இல்லை, விஜயசாந்தி ஸ்டைலில் இருக்கிறது என்பது ஒரு முக்கிய குறை.

இன்னொரு பிரச்சினை இதன் கருத்தியலில் உள்ளது:

நீதிமன்றத்தில் நீதிபதி "திருமண உறவில் ஒரு பெண்ணுக்கு மிகவும் அவசியப்படுவது நீதியும் சமத்துவமும்" என்கிறார். இதைப் போலதொரு பொய்யை வேறொங்கும் காண முடியாது.  நீதியும் சமத்துவமும் இந்த உலகில் எங்காவது காணக் கிடைக்கிறதா? வேலையிடத்தில், சமூகத்தில், ஏன் நீதிமன்றத்தில் கூட? உங்களிடம் குறைந்தது 50,000 இல்லாமல் ஒரு வருடம் ஒரு வழக்கை நடத்த முடியுமா? ஏழையும் பணக்காரனும் அங்கு ஒன்றா? இந்த இடங்களில் நாம் நீதியும் சமத்துவமும் இல்லாமல் நிம்மதியாக மகிழ்ச்சியாக செயல்படுகிறோமே எப்படி? மனிதனுக்குத் தேவை அடிப்படையில் பணம், அதிகாரம் இரண்டுமே. இவை நீதியையும் சமத்துவத்தையும் தருவதில்லை, மாறாக இரண்டையும் கோராமல் இருக்கச் செய்கின்றன! இந்த படத்தில் கூட நாயகிக்கு நீதியையும் சமத்துவத்தையும் அவளுடைய அம்மாவோ அப்பாவோ வழங்குவதில்லை. அவளுக்கு அவர்களிடம் ஏன் கொலைவெறி வருவதில்லை? ஏனென்றால் அவளுடைய பிரச்சினை சமத்துவமின்மை அல்ல. உண்மையில் அவளுடைய பிரச்சினை சுயமரியாதை மறுக்கப்படுவதே. அதற்குக் காரணம் படிக்கவும் வேலை செய்யவும் வாய்ப்பு மறுக்கப்படுவது. நீதி, சமத்துவம் வேறும் சுயமரியாதை வேறு. உதாரணமாக, சாதியமைப்புக்குள்ளும் நாம் சுயமரியாதையை தக்க வைக்க முடியும் (பரஸ்பரம் மரியாதையை காப்பாற்ற முடிந்தால், திமிரில்லாமல் இருந்தால்), ஆனால் நீதியையும் சமத்துவத்தையும் அடைய முடியாது (மாற்றுசாதியில் மணமுடிக்க வாய்ப்பு இல்லாததால்). இந்த வித்தியாசம் முக்கியமானது - சமத்துவமின்மைக்குள் பேணப்படும் சமத்துவமே நாம் நாடுவது.
 அடுத்து, அவள் தனக்கு நேசம் தோன்றாத ஒரு ஆணுடன் வாழ நிர்பந்திக்கப்படுகிறாள், எவ்வளவு முயன்றும் அவன் ஒரு மரியாதைக்கும் அன்புக்கும் உரியவனாக இல்லை. அதனாலே அவள் அவனை விட்டு செல்கிறாள். எப்படிப் பார்த்தாலும் அவன் அருவருக்கத்தக்க சுபாவம் கொண்டவனாக இருக்கிறான். அவன் மட்டுமல்ல இப்படத்தில் எல்லா ஆண்களுமே. ஆண்கள் கனிவும் பண்பும் கொண்டவர்களாக மாறினால் பெண்களை அவர்கள் சமத்துவத்துடன் நடத்துவார்கள் என எந்த உறுதியும் இல்லை. காவல் நிலையத்தில் கூடத்தான் பண்புடன் மரியாதையுடன் பேசுவார்கள். ஆனால் அது காவலர்களின் உண்மையான நிறம் அல்லவே! ஒரு வழக்கில் சிக்கிக் கொண்டால் அவர்கள் பேசும் விதமே மாறிவிடும். பணத்தைக் காட்டினால் இன்னொரு விதமாகப் பேசுவார்கள். ஒரு பெண்ணிடம் பொதுவெளியில் மரியாதையாகப் பழகும் ஒருவன் அவள் ஒரு பாலியல் தொழிலாளி என அறிந்தால் வேறுவிதமாகப் பேசுவான், நடத்துவான். ஏன்? இந்த கட்டமைப்பு அதைத்தான் கோருகிறது. ஆக, பணமும் அதிகாரமும் சமூகக்கட்டமைப்புமே ஒருவரது நடத்தையும் தீர்மானிக்கின்றன.  ஆண்களுடைய பிரச்சினையும் இதைப் போல பண்பான நடத்தை அல்ல, அவர்கள் செயல்படும் சமூகக்கட்டமைப்பும் அங்கு செயல்படும் அதிகாரமுமே பிரச்சினை ஆகின்றன. வெளியில் சாதி பாராத ஒருவர் தன் சாதியினர் அதிகமாக உள்ள இடத்தில் சாதிய சிந்தனையை தன்னை அறியாது வரித்துக் கொள்வார். சமத்துவத்தையும் சுயமரியாதையையும் குழப்புபவர்கள் இந்த நுட்பமான சமூகவியல் காரணிகளை கவனிக்கத் தவறுகிறார்கள்.

இந்த குழப்பம் இருப்பதாலே கராத்தே கற்று, சண்டை போட்டு சொந்தமாக வியாபாரம் செய்து (அதாவது தன் கணவனை போலச் செய்து அவனையும் அவ்வழி வென்று) நாயகி நீதியையும் சமத்துவத்தையும் பெற்றுவிட்டதாக படம் தட்டையாக சித்தரிக்கிறது. மனைவியின் கருத்தைக் கேட்பது, அவளை அடிக்காமல் கனிவாக நடத்துவதே பெண்ணியம் எனக் காட்டுகிறது. ஒரு மரபான சமூக அமைப்பில் ஒரு படிநிலை இருக்கிறது. அங்கு நீங்கள் உத்தமமாக இருந்தாலும் ஒருவர் மற்றவரை நசுக்கியே ஆக வேண்டும். அது மென் அதிகாரமாகவோ வன் அதிகாரமாகவோ இருந்தே தீரும். கணவன் அதிகாரத்தை கைக்கொள்ளாவிடில் அதை மனைவி எடுத்துக் கொண்டு கணவனை நசுக்குவாள். இதுவே எதார்த்தம். 

ஆனால் மசாலா சினிமா என்பது கண்ணைத் திறந்து காணும் ஒரு கனவு அல்லவா! அதனால் இயக்குநர்கள் இந்தளவுக்குத் தான் நுண்ணுணர்வுடன் இருக்க முடியும். என்ன வடிவேலுவுக்கு கிரெடிட் கொடுத்திருக்கலாம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...