முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாருவைப் பற்றி ஜெமோ சொல்லாமல் விட்டது



ஜெயமோகனின் சிறந்த உரை என்று இதைக் கூற முடியாது.

ஜெயமோகனின் குரலில் திரியில் நெருப்பு போல இயங்குவது ஒரு லட்சியவாதம், அவர் உறுதியாக நம்பும் ஏதோ ஒன்று. அது உள்ளே வரும் போது அவர் மிக மிக உறுதியாக சொல்லும் போது ரொம்பச் சிறப்பாக பேசுவார். இந்த உரையிலேயே அவர் விஷ்ணுபுரம் அமைப்பைப் பற்றி பேசுகையில் அது உள்ளே வந்து சாருவைப் பற்றி பேசுகையில் வெளியே போய் விடுகிறது. திரி அணைந்து இருள் சூழ்கிறது.
ஒரு காரணம் சாருவை அவர் வரலாற்று ரீதியாகவும் தத்துவார்த்த ரீதியிலும் நிறுவ முயலவில்லை என்பது. அசல்தன்மை சாருவை கலைஞனாக்குகிறது, அதற்காக விருதை அளிக்கிறோம் என்பது போதுமான நியாயமல்ல. காளமேகப் புலவர் என்று சொல்லி முடிப்பதும் சரியல்ல.
அதே நேரம் ஜெமோவின் தளத்தில் வெளியாகியிருந்த ஒரு சில கட்டுரைகளில் சாருவை தத்துவார்த்தமாகவும் வரலாற்றுரீதியாகவும் வரையறுக்கிற முயற்சி இருந்தது. ஜெயமோகனாலும் அப்படிப் பேச இயலும். இப்போதெல்லாம். அப்படி சிந்திப்பதே தனக்கு ஒவ்வாமை என்றால் அவர் தன் வழமையான ரசனை விமர்சனத்தின் அடிப்படையில் சாருவின் பிரதிகளில் இருந்து சில பத்திகளை வாசித்துக் காட்டி விளக்கமாகப் பேசியிருக்கலாம். அதையும் செய்யவில்லை. அதற்குப் பதிலாக சாருவைப் பற்றி எழுதப்பட்ட ஒன்றிரண்டு சிறுபத்திரிகைக் கட்டுரைகளை - குறிப்பாக சாருவின் தளத்திலே வெளிவான அந்த புனைவுமொழி கொண்ட கட்டுரையை - பகடி செய்ய பத்து நிமிடங்கள் ஏன் எடுத்துக்கொண்டார் எனப் புரியவில்லை. ஒருவேளை "பிறர் விரிவாகப் பேசட்டும் நான் சுருங்க உரைத்து அமர்கிறேன்" என நினைத்தாரோ தெரியவில்லை.
ஆனால் ஒரு சின்ன தயக்கம் - அவரது நம்பிக்கைகளை, உறுதிப்பாடுகளுக்கு அவை ஒத்துவருமா எனும் தயக்கம், ஒரு அரசியல் தயக்கம் - அவரைத் தடுக்கிறது, மடை திறந்து பாயவிடவில்லை என நினைக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரையில் சாருவை ரசனை விமர்சனம், தன்வரலாற்று விமர்சனம் கொண்டு விளக்க முடியாது. ஹெலன் சிக்ஸு, தெரிதா போன்ற பின்னமைப்பியலாளர்கள், லக்கான் போன்ற பின்னமைப்பியல் உளவியாளர்களின் தர்க்கம் கொண்டோ அல்லது சாருவை ஒத்த லத்தீன் அமெரிக்க, பிரஞ்சு படைப்பாளிகளுடன் ஒப்பிட்டோ விவாதிப்பதே துல்லியமாக அமையும். ஜெயமோகன் ஓரிடத்தில் சாருவின் எழுத்தின் பிரதான அடையாளங்களாக மையமின்மை, தன்னை மறுத்தல், பிரதியாக்கம் ஆகியவற்றைக் குறிப்பிட்டார். சிறப்பு! ஆனால் அவற்றுக்கு தத்துவத்தில் உள்ள இடமென்ன என்றும் பேசியிருக்க வேண்டும். இன்னொரு இடத்தில் நவீனத்துவ இலக்கிய மரபில் தனக்கிருந்த போதாமைகளே சாருவுக்கும் இருந்ததாக சொல்லுகிறார். ஆனால் சாருவைப் போல் அல்லாது ஜெயமோகனால் முழுமையாக மையத்தையோ, தன்னிலையையோ மறுக்க முடிவதில்லை, இது ஏன், இதன் அரசியல், தத்துவ, வரலாற்றுக் காரணிகள் என்னவென அங்கு யாராவது பேசி இருக்க வேண்டும்.
சரி உங்களுக்குத் தான் மேற்கத்திய அறிவு மீது ஒவ்வாமை வந்துவிட்டது. அதற்குத் தான் இருக்கிறாரே அசல் இந்த தத்துவவியலாளர் நாகார்ஜுனர், அவரைப் போன்ற பௌத்த தத்துவவாதிகள். அவர்களைக் கொண்டு சாருவை நிறுவலாமே? ஏன் செய்யவில்லை? அது மண்ணின் மரபில்லையா? இல்லை தத்துவமே கூடாதா?
இலக்கியத்துக்கு இலக்கியம் மட்டும் போதும், எந்த அறிவு மரபும், தத்துவ சிந்தனையும் கூடாது எனும் பிடிவாதம் இந்த அமைப்பை ஆட்டிப் படைக்கிறது. ஆனால் தூய இலக்கியம் என ஒன்றுள்ளதா? மொழி முதலில் தூய்மையாக, சாராம்சமாக இருக்கிறதா? மொழியில் தான் எல்லா சங்கதிகளும் வந்து கலக்கின்றனவே!
இதனால் யாருக்கு நட்டம்? அறிவு மரபுக்கா? இல்லை அங்கிருக்கும் 500 பேருக்குத் தான். தூய இலக்கியம் என ஒன்று இனி சாத்தியமே இல்லை. இலக்கியத்தை எப்படி வாசித்து மொழிக்குள் கொண்டு வந்து ரசிப்பது, அதன் வழியாக விடுதலையை எப்படி அடைவது எனக் காண்பதற்கே தத்துவம் அவசியமாக இருக்கிறது. நான் இதைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அவர்கள் இதில் உள்ள உண்மையைப் பார்ப்பதில்லை, விமர்சனத்தால் மட்டும் நோகிறார்கள், திரும்ப என்னை வெறுக்கிறார்கள். ஆனால் உங்களை நீங்களே வேலியிட்டுக் கொள்வதால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் சிலநேரம் என்னால் சாமர்த்தியமாக வாயை மூடிக்கொண்டு நிற்க முடியவில்லை. அதனால் சொல்லி விடுகிறேன். எனக்கு ரொம்ப வயதாகி நாம் சாமர்த்தியசாலியாகி கனியும் போது அமைதியாகி விடும். அதுவரை சொல்லிக் கொண்டு தான் இருப்பேன்.
வெறுமனே இலக்கியத்தை மட்டும் படிப்பவர்கள் இலக்கியத்தினால் பலனடைய இயலாது! தத்துவம் இன்றி இலக்கியம் வாசிப்பது வெறும் கையால் கிணற்றைத் தோண்டுவதைப் போன்றது. தோண்டலாம், ஆனால் நகங்கள் பேர்ந்து விடும்.
மற்றபடி விஷ்ணுபுரம் அமைப்பு புதிய வாசகர்களுக்கு இலக்கியத்தை அறிமுகப்படுத்துவது, தங்கள் பள்ளியை சேராத சாருவைக் கொண்டாடுவது, விருதளிப்பது பாராட்டத்தக்கது. சாருவைக் குறித்து ஒரே நேரத்தில் இவ்வளவு கட்டுரைகள் வருவது இதுவே முதல்முறை என நினைக்கிறேன். விஷ்ணுபுரம் அமைப்பின் அறிவொழுக்கம் (அது அக்கிரகாரத்தை விட்டு நீங்கா ஒழுக்கமாக சிலநேரங்களிக் இருந்தாலும்) மெச்சத்தக்கது!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...