முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வனிதா சொல்லும் உண்மை



வனிதா ஒரு புத்திசாலி அல்ல, அதனாலோ ஏனோ அவர் சொல்வதில் எப்போதும் வெளிப்படைத்தன்மையும் உண்மையும் இருக்கும். இங்கு வனிதா சொல்லியிருக்கும் உண்மை இன்னும் முக்கியமானது. ஏனெனில் அரசியல் சரிநிலை கருதி நாம் வாய்மூடிக் கடந்து விடும் போது அவர் உடைத்து சொல்லியிருக்கிறார், ராஜா அம்மணமாகப் போகிறார் என சிறுவன் கூவியதைப் போல.

ஆம், திருமா விக்ரமுக்காக புரொமோஷன் பண்ணுவது தப்புதான். பிக்பாஸ் என்பது மனிதர்களை ஒரு இடத்தில் பூட்டி வைத்து அவர்கள் தமக்கேற்ப ஆட வைத்து கண்காணித்து இந்த அடிமை வணிக விளையாட்டு பொழுதுபோக்கை பார்வையாளர்களை நுகர மட்டுமல்ல, அதை மறைமுகமாக நடத்துபவர்களாகவும் மாற்றும் நிகழ்ச்சி. அதாவது இந்நிகழ்ச்சி நம்மில் ஒவ்வொருவரையும் கண்காணிப்பாளனாக, சர்வாதிகாரியாக மாற்றுகிறது. உடல் மீது கண்காணிப்பின், கட்டுப்படுத்தலின் வழி அதிகாரம் செலுத்துவதை இயல்பாக்குகிறது. இது நம் சமூகத்துக்கு மிக மிக ஆபத்தான ஒன்று - இதைப் பார்த்து ஏற்றுக்கொண்டு விட்டால் அலுவலகங்களில், சமூகத்தில், குடும்பத்தில் இது நடக்கையில் அது தவறாக நமக்குத் தெரியாது என்பதை எனது பிக்பாஸ் நூலில் நான் பேசியிருக்கிறேன். 

விக்ரம் என்னதான் அறம், முறம், நீதி, அநீதி என்று பேசினாலும் அவர் இந்த கண்காணிப்பு அரசியலை, சர்வாதிகாரத்தை மறைமுகமாக ஏற்றபடியே தான் அதைச் செய்கிறார். ஒரு தனிமனிதராக அது அவரது விருப்பம். ஆனால் இதை ஒரு அரசியல் கட்சி புரொமோட் செய்யும் போது சமூகநீதி, அறம் என்பவை கேலிக்கூத்தாகின்றன. 

மேலும் அரசியல் என்பது மக்களுக்காக பணி செய்தல் என்றால் அதற்கும் ஒரு ரியாலிட்டி ஷோவுக்கும் என்ன சம்மந்தம்?

 என்னைப் பொறுத்தவரையில் பிக்பாஸ் என்பவர் ஹிட்லரின், முசோலினியின், மோடியின் உருவகமே. எனில் திருமா மறைமுகமாக இவர்களை, இவர்களுடைய அரசியலை ஆதரிக்கிறாரா?

இவ்வளவு யோசிக்க வேண்டுமா என்றால் கலாச்சார அரசியல் இவ்வளவு நுட்பமாக, மறைமுகமாகத் தான் இருக்கும். எம்.ஜி.ஆரி பிம்ப அரசியல் இப்படித்தான் இருந்தது. அதன் தாக்கம் இன்றும் உள்ளது. 

பிக்பாஸின் தாக்கமும் அப்படியே நாம் அறிந்தோ அறியாமலோ பின்பற்றும் ஒரு கலாச்சாரமாகும். அதை எதிர்க்க வேண்டும், நம் நண்பர்களே அதில் இருந்தாலும் ஆதரிக்கக் கூடாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...