நேற்று இதைப் பற்றி ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கையில் பொதுவாக வக்கீல்களையோ நீதிமன்றத்தையோ பற்றி விமர்சித்து படமெடுப்பதில்லை, அதற்கு வக்கீல்கள் பற்றின பயமே காரணம் என்றார். இருக்கலாம். பொதுவாக நம் படங்களில் வக்கீல்கள் நீதியின் நாயகர்களாக வருகிறார்கள். ஆனால் வக்கீல் சந்துரு மட்டுமே உலகம் அல்ல. 99% வக்கீல்கள் பணத்தைப் பிடுங்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள், வேலையை செய்வதில்லை. மிரட்டிப் பணம் பறிக்கும் ரௌடிகளைப் போல் நடந்து கொள்கிறார்கள். செய்யாத குற்றத்துக்கு மனிதர்களை வருடக்கணக்கில் அலைய விடுகிற, நோகடித்து கடனாளி ஆக்குகிற களமாக நீதிமன்றங்கள் உள்ளன. நம் தமிழ் சினிமாவில் பாருங்கள் - நீதிமன்றமே நீதியைப் பெற்றுத்தருகிற இடமாக இருக்கிறது. அப்படி ஒரு சில வழக்குகளில் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான வழக்குகளில் என்ன நடக்கிறது? எத்தனை பேர் அந்த நீதிமன்ற வாயில்களில் தம் வாழ்க்கையை தொலைக்கிறார்கள்? இப்படி பொய் பொய்யாக படமெடுக்கும் இயக்குநர்கள் இந்த உண்மைகளையும் பேசலாம் அல்லவா? குறைந்தது ஒரு வழக்கை நடத்த எவ்வளவு காலமாகும், எவ்வளவு செலவாகும் என்றாவது சொல்லலாம் அல்லவா? மாட்டார்கள்.
ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன். அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...
கருத்துகள்