அண்மையில் ஒரு இளம் எழுத்தாள நண்பர் இக்கேள்வியை என்னிடம் கேட்டார்:
“வணக்கம் அபிலாஷ்,
உங்களிடம் ஒரு கேள்வி.
பெண்களின் பொருளாதார சுதந்திரம் குடும்ப அமைப்பை எந்த அளவிற்கு பாதிக்கிறது? (வறுமையில் வாடும் குடும்பம், பொறுப்பற்ற கணவன் போன்றவை விதிவிலக்கு).”
நான் சொன்னேன்: பெண்களின் பொருளாதார சுதந்திரம் பல குடும்பங்களை உடைக்கிறது. இருவருமே பொருளாதார சுதந்திரம் கொண்டிருக்கையில் பரஸ்பர சார்பு தேவையில்ல. பரஸ்பர சார்பு இல்லையெனில் குடும்பம் எதற்கு?
அவர் மேலும் சொன்னார்: இரண்டு நாட்களுக்கு முன்பு melinda gates-இன் வலைதளத்தை வாசித்தேன். அது ஒரு women empowerment பற்றிய தளம். அதில் ஒரு வார்த்தை கூட குடும்பம் என்ற சொல் இல்லை.
நான் சொன்னேன்: சரியாக அவதானித்தீர்கள். இன்றைய நவீன பெண்களுக்கு குடும்பம் தேவையில்லை. குழந்தைகளும் வருமானமும் போதும். கணவர் பெரும்பணக்காரர் என்றால் மட்டும் ஏற்றுக்கொள்வார்கள்.
இதைப் பற்றி சற்று விரிவாக சொல்கிறேன்:
குடும்பம் எதற்கான அமைப்பு? ஆணுக்கு குழந்தைகளைப் பெற, குடும்ப சொத்துரிமையை அடுத்த தலைமுறைக்கு கடத்தி விட, முடிந்தால் அதை பெருக்கிட, முக்கியமாக ஒரு ஆணுக்கு தன் சொத்துக்களுக்கு (நிலம் புலம், குலமரியாதை, பணம்) வாரிசாக வரும் பிள்ளை தன் சொந்த ரத்தம் என்பதை உறுதி செய்ய. இதுவே தெளிவாக காட்டவில்லையா குடும்ப அமைப்பு பெண்களுக்கானது அல்ல, ஆண்களுக்கானது என்று.
இதனாலே ஒரு மணமுறிவானது பெண்ணை விட ஆணையே அதிகமாக மனரீதியாக உருக்குலைக்கிறது. அவன் தனிமையாகிறான். அவன் தன் சுயமரியாதையை, கௌரவத்தை, ஆண் அதிகாரத்தை, சமூக அடையாளத்தை இழந்துவிட்டதாக நம்புகிறான். இன்று ஒரு நண்பரிடம் இதைப் பற்றி பேசும் போது அவர் சொன்னார்: விவாகரத்திற்குப் பின்பு ஒரு பெண் விடுதலையாகிறாள், ஆண் கைவிடப்பட்டு அனாதையாகிறான். இன்று மணமுறிவுக்குப் பின் மிக அதிகமாக தற்கொலை பண்ணுகிறவர்கள், மன அழுத்தத்திற்கு ஆளாகிறவர்கள், போதை அடிமையாகி அழிகிறவர்கள் ஆண்களே, பெண்கள் அல்ல. மேற்சொன்ன காரணம் தான்.
பெண்களுக்கு இன்று திருமணத்தில் இருந்து என்ன கிடைக்கிறது?
திருமணம் வைபவம் தருகிற கொண்டாட்ட மனநிலை, சமூக அந்தஸ்து, வரதட்சிணையாக தரப்படும் தங்கம், பணம் போன்றவை. முன்பு இந்த தங்கமும் பணமும் பெண்ணிடம் இருந்து கணவனின் குடும்பத்தின் உரிமையாகும். இன்று தனிக்குடும்பங்களில் அது எளிதில் நடக்காது. அப்பெண் இந்த தங்கத்தை தன் கணவனுடன் பகிர்வதை விரும்புவதில்லை. வறுமையில் வாட நேர்ந்தால் ஒழிய அவள் இந்த செல்வத்தை தனதாக வைத்துக்கொள்ளவே விரும்புகிறாள். என் உறவினர்களில், தோழர்களில் கணிசமான பெண்கள் இப்போதும் திருமணத்தின் போதும், பின்னரும் தமக்கு போடப்பட்ட தங்க நகைகளை வைத்திருக்கிறார்கள். கணவன் வீடு கட்டும் போது அவன் தன் சொந்த பணத்தில், தன் பெற்றோரிடம் இருந்து பெற்ற நிலத்தில் கட்டவேண்டும், அதற்கு தன் நகையையோ பணத்தையே கேட்கக் கூடாதென கோருகிறார்கள். ஆனால் வீட்டின் மீது மட்டும் தமக்கு உரிமை இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். கூடவே இன்றைய பெண்கள் சொத்திலும் பங்கைக் கேட்டுப் பெற்றுக் கொள்கிறார்கள். இதுவே சில பத்தாண்டுகளுக்கு முன்பென்றால் கூட்டுக் குடும்பங்களில் இந்த அசையும் சொத்து அப்படியே கடலில் காயம் போல கரைந்துவிடும். அசையா சொத்தும் ஆணுக்கு சென்று விடும். ஆக அன்று பெண்ணுக்கு ஆணின் ஆதரவு அவசியமாக இருந்தது. இன்றைய பெண்ணுக்கு இல்லை.
மேலும் இன்று அனேகமாக எல்லா பெண்களும் நன்கு படித்திருக்கிறார்கள். கடுமையாக உடலுழைப்பைக் கோரும், ஆபத்தான வேலைகளில் ஆண்கள் நிறைந்திருக்க, வசதியான உட்கார்ந்து செய்யும் மூளையுழைப்பு வேலைகளில் ஆண்களுக்கு நிகராக அல்லது அவர்களை விட அதிகமாக பெண்கள் நிரம்பியிருக்கிறார்கள். ஒரு கல்லூரி ஆசிரியனாக சொல்கிறேன் - இளங்கலை பட்டப்படிப்புக்கான இடங்களுக்கு வரும் விண்ணப்பங்களில் 70% மேல் பெண்களுடையனவை தாம். சில கல்லூரிகளில் முழுக்க மாணவிகளாகி விடக் கூடாதே என்று கருதி ஆண்களுக்கும் சரிவிகிதமாக இடமளிக்க முயல்கிறார்கள், ஒரு மறைமுக இட ஒதுக்கீட்டை ஆண்களுக்கு வைத்திருக்கிறார்கள். இல்லாவிட்டால் இருபாலின கல்லூரிகளில் ஆண்களே இருக்க மாட்டார்கள். அப்போதும் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் மாணவிகளுக்கே. பள்ளியிலும் நீண்ட காலமாக இதுவே நிலை. பெண்ணடிமைத்தனம், பெண்ணடிமைத்தனம் என ஜல்லியடிக்கும் நிறைய பேர் இந்த பாரித்த மாற்றங்களை சுத்தமாக கவனிப்பதில்லை. கடந்த இரு பத்தாண்டுகளில் முன்னெப்போதும் காணாத அளவுக்கு பெண்கள் தன்னிறைவு அடைந்திருக்கிறார்கள். வெயிலில் நிற்கிற, சுரங்கத்திற்கு இறங்குகிற, கடுமையான கட்டுமான, ராணுவ சேவைப்பணிகளுக்குத் தான், தெருத்தெருவாக அலைகிற மார்க்கெட்டிங் பணிகளுக்கும், தூக்கத்தைத் தொலைக்கிற டிரைவிங், டெலிவெரி பணிகளுக்கும் தான் படித்த ஆண்கள் தேவை. அதிக சம்பளம் தருகிற, அதிக வசதியான நல்ல பணிகளை படித்த பெண்கள் சாமர்த்தியமாக தேர்வு செய்கிறார்கள்.
சரி நவீனப் பெண்ணுக்கு பொருளாதார ஆதரவு தேவையில்லை? மண உறவில் இருந்து வேறென்ன பெண்ணுக்கு கிடைக்கிறது?
கௌரவம்?
இன்று தனிப்பெண்ணுக்கே நகரங்களில் அந்த கௌரவம் தாராளமாக உண்டு. அதுவும் மணவிலக்காகி குழந்தையுடன் வாழும் பெண்ணென்றால் சற்று இரக்கமும் அன்பும் கௌரவத்துடன் கிடைக்கும்.
குடும்பத்துக்காக உழைக்கிற பெண்களை சகபெண்கள் ஏதோ அடிமையைப் போலத் தான் பார்க்கிறார்கள். ஹவுஸ் வைப், ஹோம் மேக்கர் என்று இப்போதெல்லாம் பெண்கள் தம்மை கௌரவமாக அடையாளப்படுத்த விரும்புவதில்லை. நவீனப் பெண் சற்று கூச்சத்துடன் தான் இதை சொல்கிறாள்.
கணவனின் வேலை, சமூக கௌரவத்தில் இருந்து கிடைக்கும் அடையாளம்? இதை இன்றும் நவீனப் பெண் விரும்புகிறாள் என்றாலும் அவள் தன் கணவன் ஒரு அசாதாரண ஆணாக, அதிகாரமும், புகழும், செல்வமும் படைத்தவனாக இருக்க வேண்டும் என விரும்புகிறாள். கல்லானாலும் கணவன் என்றல்ல, கல்லென்றால் அவன் தலையை கல்லைத் தூக்கிப் போடவே அவள் விரும்புகிறாள். ஆக பெரும்பாலான நவீனப் பெண்கள் சமூக அடையாளத்துக்கு கணவனை சார்ந்தில்லை.
குழந்தைக்கு அப்பா? இது முன்னர் மிக முக்கியமாக இருந்தது. தன் குழந்தைக்கு அப்பா இல்லாமல் போனால் சமூகம் தூற்றுமே எனும் கவலை பல பெண்களை விரக்தியின் விளிம்புக்கே தள்ளியதை அன்றைய கறுப்புவெள்ளைப் படங்களைப் பார்த்தால் தெரியும். இன்று குழந்தையை அப்பா இல்லாமல் தனியாக வளர்க்கும் பெண்ணை நம் சமூகம் ஒரு சாதனையாளராகவே பார்க்கிறது. அவளுக்கு தனி கௌரவத்தை அளிக்கிறது. அதே நேரம் குழந்தைக்கு இனிஷியலாக மட்டும் அப்பாவின் பெயர் இருந்தால் போதும் என நினைக்கிறார்கள். எதிர்காலத்தில் இதுவும் தேவைப்படாது.
இதை ஒரு சமூகச் சீரழிவாக அல்ல, எதார்த்தமாகவே நான் பார்க்கிறேன். அதாவது வடகிழக்கு மாநிலங்களில் இந்நிலை நீண்ட காலமாகவே உள்ளது. அங்கு குடும்பத்தில் ஆணுக்கு எந்த இடமும் மரியாதையும் இல்லை. அவன் ஒரு தேவையில்லாத உதிரி மட்டுமே. சம்பாதிப்பது, குழந்தையை வளர்ப்பது, குடும்பத்தை நிர்வகிப்பது எல்லாமே பெண்கள் தாம். ஆண் என்பவன் காட்டில் சுள்ளி பொறுக்கி விற்று அதில் கிடைக்கிற காசில் சாப்பிட்டு குடித்துவிட்டு எங்காவது ஓரமாகப் படுத்துக் கிடப்பவன் மட்டுமே. அவன் பெண்ணின் கட்டுப்பாட்டை மீறினால் வீட்டில் இருந்து வெளியேற்றிட பெண்கள் முடிவெடுப்பார்கள். அதற்கு அஞ்சியே அந்த ஊர் ஆண்கள் மிகவும் அடங்கிப் போவார்கள். நவீன சமூகங்கள் போகப் போக அனேகமாக இந்த வடகிழக்கு சமூகங்களை பிரதிபலித்து வருகின்றன.
ஆணிடம் இருந்து கிடைக்கும் பாதுகாப்பு? அண்மையில் ஒரு பேஸ்புக் பதிவு பார்த்தேன். பெண் உடலளவில் எவ்வளவு பலவீனமானவள் என்று. வழக்கம் போல ஒரு ஆண் எழுதியது தான். அது ஆண்கள் தம்மையே ஆறுதல்படுத்திக்கொள்ள, தம்மை உயர்வாக உணர எழுதிக் கொள்வது. உண்மையில் பெண்கள் ஆண்களை விட மனதளவில் பலமானவர்கள், அதிக ஆரோக்கியமானவர்கள், உடலளவிலும் மனதளவிலும். ஆணை விட அதிக ஆயுட்காலம் வாழ்பவர்கள் பெண்களே. புற்றுநோய், மாரடைப்பு போன்ற நோய்களும் பெண்ணுக்கு குறைவாகவே வருகின்றன. ஆண்களை விட பலமடங்கு குறைவாகவே பெண்கள் தற்கொலை பண்ணுகிறார்கள். இன்றைய நவீன பெண்ணுக்கு தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஆண் சுத்தமாகத் தேவையில்லை. அவர்கள் எந்தவிதத்திலும் ஆணை சார்ந்தில்லை.
பாலியல்? வெறுமனே செக்ஸுக்காக ஒரு ஹை வால்டேஜ் ஆணை ஒரு ஆண் வாங்கி வீட்டில் வைத்து பார்த்துக் கொள்வாள் என்று நான் நம்பவில்லை. மேலும் எதிர்காலத்தில் அழகான இளமையான கிகோலோக்கள் இப்போதுள்ளதை விட பலமடங்கு அதிகரிப்பார்கள்; அவர்கள் பெண்ணுக்குள்ள பாலியல் தேவையையும் நிறைவேற்றுவார்கள்.
சமூக, குடும்ப அழுத்தங்கள்? தங்கம், திருமண சடங்கின் கவர்ச்சி ஆகியவை தவிர இந்த அழுத்தங்களும் தான் நவீன பெண்கள் மணமுடிக்க முக்கிய காரணம். ஆனால் இப்படி பெற்றோரின் வற்புறுத்தலால் மணமுடிக்கும் பெண்கள் இயல்பிலேயே கணவனிடத்து ஒரு வெறுப்பில் தான் இருப்பார்கள், அவர்கள் விரைவில் மணவிலக்கு கோரவே வாய்ப்பதிகம். மணவிலக்கு கோருகிற கணிசமான பெண்கள் வைக்கும் காரணம் ஒன்று மாமியாருடன் வரும் பிரச்சினை அல்லது கணவனுடன் மனம் உவந்து வாழ முடியவில்லை என்பதே. அடி உதை, துரோகம் எல்லாம் அரிதான காரணங்களாகி விட்டன. பொருத்தமின்மையே மிகவும் பிரசித்தமான மணவிலக்கு தாரக மந்திரமாகி விட்டது. எனக்கு பொருத்தமின்மையின் பின்னுள்ள உந்துதல் கணவனின் தேவையின்மையே என்று தோன்றுகிறது.
மேலும் இன்றைய பெற்றோர்கள் தமது பெண் குழந்தைகள் பொருளாதார தன்னிறைவுடன் இருப்பதையே விரும்புகிறார்கள். சில பெற்றோர்கள் இக்காரணத்திற்காகவே தமது மகள்களின் திருமணத்தை தள்ளிப்போட்டு அவர்களின் சம்பளப் பணத்தில் வாழ்கிறார்கள். மணவிலக்கின் போதும் அவர்கள் தம் மகள்களை ஆதரிக்கிறார்கள். கணவனுடன் மூன்று மாதங்கள் வாழ்ந்தலே போதும் என்று நினைக்கிறார்கள். ஆகையால் எதிர்காலத்தில் இந்த நவீன பெற்றோர் தம் மகள்களை திருமணத்திற்கு வற்புறுத்தாமல் விட்டுவிடக் கூடும். நவீன ஜப்பானிய சமூகத்தில் இன்று நடப்பதைப் போல நிறைய சிங்கிள் பெண்கள், படித்த பெண்கள் வேலை பார்த்துக்கொண்டே தம் பெற்றோருடன் வாழ்வார்கள். படித்த ஆண்கள் தூங்க வீடில்லாமல் சாலையோரமாக படுத்துறங்குவார்கள்.
இவ்வாறு எப்படிப் பார்த்தாலும் நவீனப் பெண்ணுக்கு மணவுறவு அவசியம் இல்லை!
இப்படிப்பட்ட சூழலில் நவீன ஆண் என்ன செய்ய வேண்டும்? முதலில் குடும்ப வாழ்க்கை பெண்ணை விட தனக்கே அதிகம் அவசியம் என அவன் புரிந்துகொள்ள வேண்டும். குடும்ப உறவு அதற்காகவே உருவாக்கப்பட்டது, அது அடிப்படையில் சுரண்டலை, அசமத்துவத்தை முன்னெடுப்பது என்பதை எந்த குற்றவுணர்வும் இன்றி ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த முற்போக்குவாத கொத்துபுரோட்டா தத்துவங்களை அள்ளி மூளையில் நிறைத்துக் கொள்ளக் கூடாது. எதார்த்தம் உலகம் வேறு, இவர்கள் பேசும் லட்சியங்கள் வேறு. இந்த லட்சியங்களை நம்ப முனைந்தால் வாழ்நாள் பூரா செருப்படி தான் கிடைக்கும்.
ஆக, தன்னுடன் தாம்பத்தியத்தில் பங்குபெறும் பெண்ணுக்கு அதனால் என்ன பயன்மதிப்பு என அவன் யோசித்து பின்னர் தாலிகட்ட வேண்டும். “இந்த மணவாழ்வில் நீ என்ன பெற்றுவிடப் போகிறாய்? உன் எதிர்பார்ப்பு என்ன?” என்று நேரடியாகக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். பணம், நகை, சொத்து என்றால் அதை சம்பாதித்துக் கொடுக்கும் தகுதி உங்களுக்கு உண்டா? இல்லையென்றால் தாலியைக் கட்டாதீர்கள். வேண்டுமென்றால் ரக்ஷாபந்தன் கட்டலாம்.
காதல் என்பது காதலுக்குள் மட்டுமே செல்லுபடியாகும், மணவாழ்வில் அல்ல. மணவாழ்வு என்பது அடிமைப்பணி. குடும்பம் ஒரு செயற்கையான அமைப்பு. பயன்மதிப்பு இல்லாத போது ஒரு பெண் அதனுள் உழைப்பை செலுத்த ஒன்று அவள் பைத்தியமாக இருக்க வேண்டும் அல்லது அவளுக்கு ஒரு போதாமை இருக்க வேண்டும், அவள் ஆணை எதற்கோ சார்ந்திருக்க வேண்டும். அப்படியான பெண் கிடைத்தால் ஒழிய இந்த மணவாழ்வு எனும் பொறியில் போய் மாட்டிக்கொள்ளக் கூடாது. (ஆண் ஏன் பெண்ணை சார்ந்திருக்கக் கூடாது என்றால் இன்றைய பெண்கள் அத்தகைய ஆண்களை விரும்புவதில்லை) மற்றபடி உங்களைத் தேவையில்லாதவருடன் 50-60 வருடங்கள் வாழலாம் என்றெல்லாம் கற்பனை பண்ணி இறங்கினால் டவுசர் கிழிந்து போகும்.
உங்களுக்கு சமமாகப் படித்த, உங்களுக்கு சமமாக வேலை செய்யவும், தன்னிறைவாகவும் வாழ முடிகிற, எந்தவிதத்திலும் உங்கள் பங்களிப்பை சார்ந்திராத ஒரு பெண்ணைத் தேர்வு செய்யாதீர்கள். ஒரு பொறியியலாளர் ஒரு பொறியியலாளரை, ஒரு மருத்துவர் ஒரு மருத்துவரை மணப்பதெல்லாம் - நீங்கள் அப்பெண்ணை விட ஐந்து, பத்து மடங்கு அதிகம் சம்பாதிக்க வரையில் - சுத்த அபத்தம். இதனால் உங்களுக்கு மட்டுமல்ல அப்பெண்ணுக்கும் நிம்மதியிழப்பே எஞ்சும்.
முற்போக்கு மண்டையன்கள், லிபரல் ஏமாற்றுப்பேர்வழிகள் ‘மணவாழ்வு என்பது இரண்டு சமமான மனிதர்கள் இணைந்து மகிழ்ச்சியை நாடும் சுயமரியாதையான ஒரு உறவு’ என்று சொல்வார்கள், அந்த பொய்யை நம்பாதீர்கள். அப்படி சொல்பவர்களின் குடும்பத்துக்குள் எட்டிப் பார்த்தாலே உண்மை பல்லிளிக்கும். சுரண்டல் இல்லாமல் குடும்பம் இல்லை. யாராவது ஒருவர் அதிகம் சுரண்டப்பட தன்னை ஒப்புக்கொடுக்க வேண்டும், யாராவது ஒருவருக்கு தன்னை அதிகமாக கைவிடுவது அவசியமாக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் இந்த அமைப்பு தகர்ந்து போகும். (அப்படி தகர்ந்தாலும் எனக்கு தனிப்பட்ட முறையில் பிரச்சினை இல்லை; ஆனாலும் உங்களுக்கு குடும்பம் வேண்டுமெனில் அதன் தாத்பரியத்தைப் புரிந்து கொண்டு இருங்கள்.)
உங்களுக்கு குடும்ப வாழ்க்கை வேண்டுமா, சமத்துவம், சமநீதி போன்ற லட்சியங்களை நம்பாதீர்கள். சமத்துவ கோஷம் போடுகிறவர்கள் உங்களை தங்கள் அதிகாரத்தின் மூலம் சுரண்டவும், நசுக்கவுமே முயல்கிறார்கள் என நினைவுகொள்ளுங்கள். எப்படி சமூகத்தில் படிநிலை உள்ளதோ தாம்பத்திய உறவுக்குள்ளும் அப்படித்தான். எப்படி சமூகத்தில் நாம் நமது உணர்வுகளுக்கோ பண்புக்காகவோ அல்ல, பணத்துக்காகவும் அதிகாரத்துக்காகவும் மட்டுமே ஏற்கப்படுகிறோமோ உறவிலும் அப்படித்தான். சினேகம், புரிந்துணர்வு எல்லாம் அதன் மீது பூசப்படும் வாசனை திரவியம் அன்றி, ஒரு குடும்ப வாழ்வு அதைக் கொண்டு ஓடாது. அன்பு, மரியாதை போன்ற பண்புகளால் உங்களை மெல்லுணர்வு கொண்டவர்களாக மாற்றினால் அது உங்களை தன்னம்பிக்கை அற்றவர்களாக பெண்களிடம் காட்டும். அதற்கு மேல் உங்களை மதிக்கவோ ஏற்கவோ மாட்டார்கள். உங்களுடைய வலிமை என்ன, உங்களுடன் இருப்பதால் ஒருத்திக்கு கிடைக்கும் அனுகூலம் என்னவென நேரடியாகவே காட்டுங்கள், அதை முழுமையாக ஏற்கத் தயாராக உள்ள பெண்ணை மட்டுமே பரிசீலியுங்கள்.
இந்த தன்னலம் மிக்க, சுரண்டல் மிக்க நவீன உலகில் நீங்களும் சுயநலமும் ஆதிக்கவுணர்வும் கொண்டவராக உங்களைக் காட்டிக் கொள்ளுங்கள். அதை நிரூபியுங்கள். நவீன உலகில் பணமும் அதிகாரமும் தன்னம்பிக்கையுமே ஆணின் புகலிடம், காதல், அன்பு, கருணை, நுண்ணுணர்வு அல்ல. இணக்கமான, பிரியமான ஆண்களையே விரும்புகிறோம் என வெளிவேஷம் போடும் நவீனப்பெண்கள் உள்ளுக்குள் வலுவான ஆதிக்கமான உறுதியான ஆணையே நாடுகிறார்கள். நவீன காலத்தில் அவனாலும் தன்னைவிட பலவீனமான பெண்ணைக் கண்டடையும் ஆணாலும் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும். நவீன உலகம் ஒரு வனம், அங்கு நீங்களும் விலங்காக இருக்கவில்லை என்றால் வேட்டையாடப்படுவீர்கள்!

Comments