Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

குடும்ப அமைப்பு ஏன் பெண்களுக்கு ஆனது அல்ல?


ஒரு நண்பர் என்னிடம் எழுப்பிய சில கேள்விகளுக்கு நான் அளித்த பதில்களை அடுத்தடுத்து பதிவுகளாக இடவிருக்கிறேன். இது முதல் பதிவு,

கேள்வி: குடும்ப அமைப்பானது ஆண்களுக்காகவே இருப்பதாக பெண்ணியம் சொல்கிறது. உண்மையா?

பதில்: உண்மை. அதனாலே நவீன பெண்கள், பெண்ணியத்தால் ஊக்கம்பெறும் நவீன பெண்கள் குடும்ப அமைப்பினுள் மூச்சுத்திணறுவதாக உணர்கிறார்கள். முழுக்க முழுக்க நியாயமான உணர்வே இது. ஆனால் ஆண்களுக்கு இவ்வுணர்வு அதிகமாக ஏற்படாது. ஏனென்றால் நடைமுறையிலும் பண்பாட்டு ரீதியிலும் இவ்வமைப்பு ஆண்களுக்காக உண்டு பண்ணப்பட்டது. இவ்வமைப்பு வழியாக ஆண்கள் ஒரு குறியீட்டு பெருமிதத்தை, தன்னம்பிக்கையை, சமூக ஏற்பை இன்று உணர்கிறார்கள். இன்றைய பெண்களுக்கு, படித்த வேலை பார்க்கும் பெண்களுக்கு குடும்பத்தால் அது கிடைப்பதில்லை. இது முதல் முரண்.

இந்த முரணால் தான் இன்றைய பெண்கள் திருமணத்திற்குள் தமக்கு மகிழ்ச்சியில்லை, பொருத்தப்பாடு இல்லை என்று கூறி விலக்கு கோருகிறார்கள். தம் பிரச்சினைகளுக்கு ஒரு மோசமான கணவன் தமக்கு அமைந்ததே காரணம் என நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல. இந்த அமைப்புக்குள் ஒரு ஆணால் - அவன் எவ்வளவு உத்தமமானவன் என்றாலும் இப்படித்தான் இருக்க இயலும். இப்படி இருக்காவிடில் அவனை பெண் மனம் ஏற்பதும் இல்லை. உ.தா, வீட்டில் சமைத்து, வேலைகளை செய்யும் ஆண்கள் உண்டு. முன்பு நானிருந்த குடியிருப்பில் இரண்டு வீடுகளில் அப்படியான ஆண்கள் இருந்தாரக்ள். காலையிலும் இரவிலும் அவர்கள் சமைப்பதை, வீட்டை சுத்தம் பண்ணுவதைப் பார்த்திருக்கிறேன். இந்த பெண்களிடம் பேசும் போது எந்த இடத்திலும் தம் கணவனின் இந்த பங்களிப்பு குறித்து பெருமைப்படுவது இல்லை, அதை ஒரு அவமதிப்பாக அல்லது ஆணின் போதாமையாக நினைக்கிறார்கள். நடைமுறையில் ஆண்கள் செய்யும் இப்பணிகளை அவர்கள் விரும்பி ஏற்றாலும் இப்படியான உளவியல் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

இது இரண்டாவது முரண் (உளவியல்).

மூன்றாவதாக, மத்திய, மேல்மத்திய வர்க்கங்களிலும் சில நேரம் கீழ்வர்க்கத்திலும் கூட இன்றைய பெண்களை பெற்றோர்கள் குடும்ப வேலைக்காக பயிற்சியளித்து வளர்ப்பதில்லை. அவர்களுக்கு சமைக்கத் தெரியாது. அவர்களுக்கு பெருக்கத் தெரியாது. சமையலறையை சுத்தமாக வைத்திருக்கத் தெரியாது. ஒரு பாத்திரத்தில் பாலைக் காய்ச்சத் தெரியாத பல லட்சம் பெண்கள் இன்று இருக்கிறார்கள். பெற்றோர்கள் தம் பெண் பிள்ளைகள் நன்றாகப் படித்து உயர் வேலையில் அமர வேண்டும் என்று கருதியே வளர்க்கிறார்கள். காபி தயாரித்து, இட்லி பொங்கி, சட்னி செய்ய அல்ல. அதுவும் சரிதான். ஆனால் சமூக அழுத்தம் காரணமாக இப்பெண்கள் கட்டிக்கொடுக்கிறார்கள். போகும் வீட்டில் அவர்கள் எந்த வேலையும் செய்யாமல் வாழ வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால் புகுந்த வீட்டில் - அது மைக்ரோ குடும்பமே என்றாலும் - சமையல், பெருக்கி சுத்தம் பண்ணுவது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, காயப்போடுவது, எடுத்து மடித்து வைப்பது, பொருட்களை அந்தந்த இடங்களில் வைப்பது, திட்டமிடுவது என அனைத்து வேலைகளுக்கும் ஆள் வைத்தால் அதற்கும் மாதம் 25,000 ஆவது வந்து விடும். வீட்டு வாடகையாக 15,000-20,000 வைத்துக் கொள்ளுங்கள். இன்று மளிகைப்பொருட்கள், காய்கறி, உணவு விலை மிகவும் அதிகரித்து விட்டது. இந்த செலவுகளுடன் வேலைக்காரிக்கு பெரும் தொகையைக் கொடுக்க கணவனும் மனைவியும் சேர்ந்து ஒன்றரை லட்சத்துக்கு மேல் சம்பாதிப்பவர்களாக இருக்க வேண்டும், சொந்த வீடு இருக்க வேண்டும். அல்லது கட்டுப்படியாகாது. அப்படி முடியாத குடும்பங்களில் பெண் தான் தனக்குத்தெரியாத குடும்ப வேலைகளையும் பண்ணுகிறாள். அல்லது அவற்றையும் சேர்த்து பண்ணிக்கொண்டு வேலைக்கும் போகிறாள்.

இப்படி வேலை பார்த்து தற்சார்பாக இருக்கும்படி வளர்க்கப்பட்ட பெண் தனக்குத் தெரியாத குடும்ப வேலைகளையும் செய்ய நிர்பந்திக்கப்படுகிறாள்.

யோசித்துப் பார்த்தால் இதுவும் ஆணின் தவறு அல்ல. நமது வர்க்க எதிர்பார்ப்புகள் நடைமுறையுடன் பொருந்தாத போது வரும் பிரச்சினையே இது. அல்லது பணப்பிரச்சினை என்றும் சொல்லலாம்.


அடுத்த நான்காவது முரண் குழந்தைப்பேறும் வளர்ப்பும்.

இதற்கும் இன்றைய பெண் தயாராக வளர்க்கப்படுவதில்லை. பால் காய்ச்சக் கூட தெரியாத ஒரு பெண்ணால் எப்படி குழந்தைக்கு உணவளித்து குளிப்பாட்டி வளர்க்க முடியும்? நான் கற்பனையாக சொல்லவில்லை. என் அணுக்கத்தில் இத்தகைய நிறைய பெண்களைப் பார்த்திருக்கிறேன். சொந்த தாயோ மாமியாரோ கூட இல்லாவிட்டால் இக்குழந்தைகள் உணவின்றி சாக வேண்டி இருக்கும். இந்த நவீன பெண்கள் ஒரு குழந்தையை சிறுவயதில் இருந்தே தூக்கி கொஞ்சி விளையாடி இருக்க மாட்டார்கள். நவீன அடுக்கக சூழலில், கல்வியமைப்பில் அவர்களில் அதற்கான பரிச்சயமே இருக்காது. நவீன பெண் குழந்தைகளை நாம் இந்த நோக்கில் வளர்ப்பதில்லை. இதெல்லாம் இயல்பாக தோன்றும் திறன் என ஒரு மூடநம்பிக்கை நம்மிடம் இருக்கிறது. அப்படி அல்ல. இது கற்பிக்கப்படும், பயிற்றுவிக்கப்படும் திறனே. குழந்தைகள் ஒருவித வேற்றுகிரகவாசிகளைப் போல இன்றைய குடும்பங்களில் நுழையும் போது இப்பெண்களுக்கு ஏற்படும் அதிர்ச்சி மட்டற்றது.

நான் ஒரு உதாரணம் தருகிறேன். எனக்கு பதினான்கு வயதிருக்கும் போது என் அக்காளின் முதல் பிள்ளையை நான் குளிப்பாட்டி இருக்கிறேன். உணவளித்திருக்கிறேன். ஒரு குழந்தையை கையில் எடுக்கும் பாங்கே தனியானது. அதை மடியிலிட்டு குளிப்பாட்டும் பாங்கும் எளிதானது அல்ல. அதே போல குழந்தையின் முதல் வருடத்தில் எந்தளவுக்கு உறக்கத்தைக் கெடுக்கும் என்பதையும் நான் என் சிறுவயதிலேயே பார்த்திருக்கிறேன். ஏனென்றால் நான் வளர்ந்த சூழலில் எனக்கு பலவிதமான அனுபவங்கள் கிடைத்தன. இன்றைய பெண் குழந்தைகளுக்கு அத்தகைய அனுபவங்கள் வாய்ப்பதில்லை அல்லது வாய்க்கக் கூடாது என்றே வளர்க்கப்படுகிறார்கள். நீ குழந்தையைப் பெத்து போடு, மத்ததை எல்லாம் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லியே அம்மாக்கள் தம் மகள்களை திருமணம் பண்ணி அனுப்புகிறார்கள். அது எத்தனைய சிக்கல்களை ஏற்படுத்தும் என அவர்களுக்குத் தெரிவதில்லை.

அடுத்தது ஐந்தாவது முரண் - தாம்பத்யம்

நவீன உலகில் மற்றொரு சிக்கல் உள்ளது - ஆணும் பெண்ணும் வேலைக்குப் போகும் போது அவர்கள் பரஸ்பரம் உடல்ரீதியாக அணுக்கமாக நேரம் செலவிடும் வாய்ப்புகள் குறைகின்றன. அதாவது நான் செக்ஸை மட்டும் சொல்லவில்லை. அருகருகே இருப்பது, பரஸ்பரம் உடலமைப்பை, வெப்பத்தை, வாசனையை உணர்ந்து கொண்டிருப்பது, இது தான் விருப்பத்தை, பாசத்தை ஏற்படுத்தும், அழகு அல்ல. பார்க்கப் பார்க்க, பழகப் பழகத் தான் விருப்பமும் சார்பும் அதிகமாகும். ஆனால் காலையில் எழுந்தே ஓடி ஓடி இரவு ஏழு மணிக்குத் திரும்புகிற வீடுகளில் அந்த நேரம் இன்று வெகுவாக குறைந்துவிட்டது.

விளைவாக திருமணத்துக்குப் பின்பான வருடங்களில் பரஸ்பரம் விருப்பம் குறைகிறது. தம் வேலையிடங்களிலும் அதிகமாக யாருடன் நேரம் செலவிடுகிறார்களோ அவர்களின் பால் விருப்பம் அதிகமாகத் தோன்றுகிறது. அல்லது சமூக வலைதளங்கள் மூலம் ஆறுதல் தேடுகிறார்கள்.

திருமணத்திற்குப் பிறகு பெண்களின் உடலமைப்பில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதாவது ஒரு பக்கம் உலகம் நீ தற்சார்பாக இருக்க, சம்பாதி, சொகுசாக வாழ், யாருக்காகவும் உன் நேரத்தை வீணடிக்காதே என்று சொல்கிறது, இன்னொரு பக்கம் உடல் உடலுறவு, குழந்தைப்பேறு நோக்கி அவர்களைத் தள்ளுகிறது.

அடுத்து ஆறாவது முரண் - குழந்தைப்பேறு

கருத்தரிக்க அடிப்படையான ஒரு உடற்தகுதி வேண்டும். இன்றைய பெண் குழந்தைகள் அத்தகுதியுடன் வளர்க்கப்படுவதில்லை. பத்தில் ஐந்து பேருக்காவது கர்ப்பப்பையில் சிக்கல்களோ ஹார்மோன் பிரச்சினைகளோ உண்டு. நவீன பெண்களுக்கு கர்ப்பமாதல் அவ்வளவு பெரும் போராட்டமாக இருப்பது சும்மா அல்ல.

ஒரு பக்கம் அவர்களுக்கு குழந்தை தேவையில்லை. அது நியாயமான ஒரு முடிவு. அவர்கள் அதற்காக படித்து உழைத்து வேலை வாங்கவில்லை. சிறுவயதில் இருந்தே குழந்தைப்பேறு அவர்களுடைய ‘பாடத்திட்டத்தில்’ இல்லாத பாடம். கல்யாணத்திற்குப் பிறகு அதில் இருந்து திடீரென ‘கேள்வி’ வந்தால் எப்படி சமாளிப்பார்கள்? பிடிக்காமலே பெற்று பிடிக்காமலே வளர்க்கத் தொடங்கி ஹார்மோன் தூண்டுதலால் அப்பிள்ளைகள் மீது விருப்பத்தை வளர்த்து, சரியாக கவனிக்க முடியவில்லையே எனும் குற்றவுணர்வில் அல்லாடுகிறார்கள். இந்த குற்றவுணர்வு சார்ந்த கோபத்தை தம் கணவர் மீது காட்டுகிறார்கள். செக்ஸை தள்ளிப் போடுகிறார்கள். அது கோபத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது.

என்னுடைய ஒரு தோழியிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் தான் தூங்கி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது என்கிறார். குழந்தைப்பேறுக்கான சிகிச்சை, குழந்தைப்பேறு, பராமரிப்பு, வளர்ப்பு, அதன் பின்பான வேலைகள், அது போக அலுவலக வேலைகள் என்று அலைகழிந்ததில் அவருக்குள் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு, உடற்தகுதி மோசமாகி, கூடவே லாக் டவுன் காலத்தில் நேரத்திற்கு தூங்காமல் போனதில் தூக்கமின்மை வியாதி வந்து விட்டது. மாத்திரை போட்டால் தான் ஒருமணிநேரமாவது தூங்க முடியும். அவர் சதா அரைத்தூக்க நிலையிலே நடப்பார், வேலை பார்ப்பார், பேசுவார். பார்க்க பாவமாக இருக்கும்.

நீங்கள் எந்த நவீன மனைவியிடமும் கேளுங்கள் எங்கே அவர்களுக்கு பிரச்சினைகள் எங்கு அதிகம் என்று - வேலையிடத்திலா குடும்பத்திலா என்று. அவர்கள் குடும்பம் என்றே சொல்வார்கள். ஏனென்றால் ‘அது’ அவர்களுடைய இடம் அல்ல. அது அவர்கள் விருப்பமில்லாமல் செய்யும் வேலை. அவர்கள் தாம் ஓய்வில்லாமல் வேலை செய்துகொண்டே இருப்பதாக நினைக்கிறார்கள். ஒரு வேலையில் அவர்களுக்கு அனைத்து வசதிகளும் உண்டு. அந்த வேலைக்காக அவர்கள் இளவயதில் இருந்தே மனதளவிலும் திறனளவிலும் தயாரிக்கப்படுகிறார்கள். இன்னொரு ‘வேலைக்காக’ அவர்கள் எந்தவிதத்திலும் தயாராகவில்லை. அதில் அவர்களுக்கு விருப்பமும் இல்லை.

அடுத்து ஏழாவது முரண் - மனப்பிரச்சினைகள்.

ஏற்கனவே சின்னச்சின்ன மனச்சோர்வு பிரச்சினைகளை சந்தித்து வந்த பெண்கள் (இன்று ஐந்து வயது குழந்தைகளே தமக்கு டிப்ரஷன் என்று சொல்கின்றன, பள்ளிக்குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டும் - பத்தில் ஐந்து பேருக்காவது மனச்சோர்வு வருகிறது.) குழந்தைப்பேறின் போது சுலபத்தில் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள். சில பெண்களுக்கு குழந்தைப்பேறின் போது தற்காலிகமாக நீரிழிவு வருமே அதைப் போலத்தான் இதுவும். இன்றைய அழுத்தமான சூழலில் (இரண்டு வேலைகள் - ஒன்று பிடித்த வேலை, இன்னொன்று பிடிக்காதது) அவர்களுக்கு இந்த மனச்சோர்வு தீர்வதில்லை, அது மோசமாகிறது. இன்றைய இளம் தாய்மார்கள் கடுங்கோபத்தில் இருப்பது இதனாலே. அமெரிக்காவில் செய்த ஒரு ஆய்வில் குழந்தைப்பேறுக்குப் பிறகான சில வருடங்களில் பெண்கள் மணவிலக்கு கோரும் வாய்ப்பு பலமடங்கு அதிகரிக்கிறது என்று கண்டுபிடித்தார்கள்.

நவீன மனைவிகள் இப்படி ஏழு முரண்களுடனே வாழ்கிறாள், பிடிக்காத வேலையை செய்யும் ஒரு ஊழியரைப் போல முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு, பெரிய சுமையில் தோளில் ஏந்திக்கொண்டு குடும்பத்தை சுற்றி சுற்றி ஓடுகிறாள். வேலைக்குப் போகும் பெண்களில் ஒரு பகுதியினர் இன்று வேலைக்கு ஆள் வைத்து, தம் தாய் / மாமியாரின் உதவியுடன் இந்த குடும்ப அழுத்தங்களை சமாளிக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் நிம்மதியாக இல்லை. ஏனென்றால் அவர்கள் இதற்காக வளர்க்கப்படவில்லை.

வீட்டிலே இருக்கிற பெண்களும் மகிழ்ச்சியாக இல்லை. அவர்கள் ஒரு சிறைக்கைதியைப் போல் உணர்கிறார்கள். மனச்சோர்வு, சண்டைகள், அலுப்பு. ஏனென்றால் அவர்கள் இப்படி இருப்பதற்காக வளர்க்கப்படவில்லை.

இந்த முரண்களால் ஏற்படும் கோபத்தையெல்லாம் ஒரு நவீன பெண் தன் கணவனை நோக்கி செலுத்துகிறாள். அவளுக்கு அவனாலே தன் வாழ்க்கை சிரழிந்து விட்டது எனத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் அது அவன் தவறு அல்ல. இது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பான குடும்ப அமைப்பு. இது ஒரு துருபிடித்த எந்திரம். இன்றைய சூழலுக்கு பொருந்தி வராத ஒரு அமைப்பு.

இன்னொரு பக்கம் நீங்கள் எந்த ஆணிடம் வேண்டுமானாலும் கேளுங்கள்: அவனுக்கு மிக மிகக் குறைவான புகார்களே இருக்கும். மனைவி தன் சுதந்திரத்தைப் பறிக்கிறாள் என்பது அவற்றில் பிரதானமாக இருக்கும். ஆனாலும் அவன் குடும்ப வாழ்க்கையில் மிகவும் ஏமாற்றமடைகிறான் என்பதே உண்மை. (நீயா நானா போன்ற விவாதங்களிலோ சமூகவலைதள பெண்ணிய பக்கங்களிலோ இதைப் பேசவே மாட்டார்கள்.)

இன்றைய ஆணுக்கு ஒரு பாரம்பரியமான கணவனுக்கு கிடைக்கக் கூடிய எந்த வசதிகளும் மகிழ்ச்சிகளும் இல்லை.
மனைவி சுவையாக சமைத்துப் போடுவதில்லை. ஏனென்றால் அவளுக்கு சமைக்கவே தெரியாது.
மனைவி வீட்டையோ அவனையோ போதுமானபடிக்கு கவனிப்பதில்லை. ஏனென்றால் அவளுக்கு நேரமோ விருப்பமோ இல்லை.
அவன் கேட்கும் போதெல்லாம் அவள் படுக்கைக்கு வரப்போவதில்லை. ஏனென்றால் அதற்காக அவள் வாழவில்லை. அவளுக்கு வாழ்க்கைத் தேர்வுகள், நோக்கங்கள் வேறு. எனக்குத் தேவையான போது நீ வா என்று கோருகிறாள். அவனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.
அவனுக்கு ஒரு குழந்தையை பெற்றுத் தரக் கேட்டால் அவள் தயங்குகிறாள். அவன் அதிர்ச்சியாகிறான். ஆனால் அவள் அதற்காக வளர்க்கப்படவில்லை. அவளுக்கு வேறு லட்சியங்கள், நோக்கங்கள் உள்ளன. தாய்மை தன் அடையாளமல்ல என்று அவள் நினைக்கிறாள்.
அவள் அவனுக்கு அடங்கிப் போவதில்லை; அவள் அவனை மதிப்பதே இல்லை - என்னதான் சமத்துவம், சமநீதி என்றெல்லாம் பேசினாலும் ஒவ்வொரு ஆணும் தன் மனைவி தனக்கு அடங்கிப் போக வேண்டும் என்றே உள்ளுக்குள் விரும்புகிறான். குறைந்தது தன்னை சமமாக நடத்த வேண்டும் என்றாவது விரும்புகிறான். அவளுக்கு அதிலும் விருப்பமில்லை. ஏனென்றால் அவள் சிறுவயதில் இருந்தே யாருக்கும் அடங்கிப் போனதில்லை, அவள் நேசிக்காத ஒருவனை சமமாக நடத்தவும் விரும்பவில்லை. சிறுவயது முதலே தன் விருப்பங்களை தலையாகக் கருதி தன்னை தோளில் தாங்கி வளர்த்த அப்பாவைப் போன்றே தன் கணவனும் இருக்க வேண்டும் என எதிர்பார்த்து அவள் வருகிறாள். ஆனால் அவளுக்கு அவனுடைய எதிர்பார்ப்பைப் பார்த்து அதிர்ச்சியாக இருக்கிறது. இவனை ஜெண்டில்மேன் என்றல்லவா நினைத்தேன், வெளியே பார்க்க நவீனமாகவும் உள்ளுக்குள் “என் ராசாவின் மனசிலே” ராஜ்கிரண் மாதிரி இருக்கிறானே என குழம்புகிறாள்.

சரி இவ்வளவு பிரச்சினைகள் இருந்தும் ஆண் ஏன் இந்த குடும்ப அமைப்பை ஏற்றுக் கொள்கிறான்? ஏனென்றால் இந்த அமைப்பில் இருந்து ஆணுக்கு சோறும் செக்ஸும் கிடைக்கவில்லை என்றாலும் பண்பாட்டுரீதியான ஒரு குறியீட்டு மரியாதையும், அங்கீகாரமும் கிடைக்கிறது, அவனுடைய ஆண்மையை இச்சமூகம் ஏற்பதே திருமணத்தினால் தான். (ஆண்மை என்று நான் சொல்வது ஆண்-மையவாத விழுமியங்களையே.) பழைய சமூகத்தில் இருந்து ஆண்மைக்கான சடங்குகள் இன்று இல்லாதபட்சத்தில் அவனை ஒரு ஆணாக யாரும் பொருட்படுத்துவதில்லை. அவன் தன்னை ஒருத்தி ஆணாக ஏற்க வேண்டும் என்று விரும்பித்தான் கல்யாணம் பண்ணிக்கொள்கிறான். ஆனால் இங்கு வந்தால் செருப்படிகள் தாம் கிடைக்கின்றன. அப்போ நாம சினிமாவில் பார்த்தது எதுவுமே உண்மை இல்லையா, நமது இலக்கியவாதிகள் கதைகளில் எழுதுவது எதுவுமே உண்மையில்லையா என்று அவன் குழம்பிப் போகிறான். காலையில் இட்லி செய்து ஊட்டி விட்டு, முந்தானையால் வாயைத் துடைத்து விட்டு டிபன் பாக்ஸுடன் வேலைக்கு அனுப்பி திரும்பி வந்ததும் கூச்சத்தில் ஓடி ஒளிகிற, கட்டி அணைத்ததும் வெட்கி சிவக்கிற, தான் வாங்கி வரும் இனிப்புகளை ரசித்து உண்கிற அந்த “என்ன சொல்ல, ஏது சொல்ல” சமந்தா எங்கே எங்கே எங்கே என்று அவன் கதற வீட்டுக்குள் எக்கோ அடிக்கிறது, கூடவே செருப்படியும் வருகிறது.

ஆனாலும் தன் ஆண்மைக்கு கொஞ்ச நஞ்சமாவது மரியாதை கிடைக்கிறதே என்று அவன் கிடைக்கிறதை நக்கிக் கொண்டு வாழலாம் என முடிவெடுக்கிறான். இன்னொரு பக்கம் தான் அடிமையைப் போல வேலை செய்வதாக எண்ணி மனதுக்குள் கதறிக்கொண்டிருக்க அவன் மனைவியோ அவனை எப்போது எப்படி போட்டுத்தள்ளலாம் என்று அவகாசம் நோக்கி காத்திருக்கிறாள். இருவரும் பரஸ்பரம் காலையில் பார்த்து குட்மார்னிங் சொல்லிக் கொண்டு “போய் சாவுடா / டி” என்று மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார்கள். இப்படி வாழ்கிறவர்களில் பாதிக்கு பாதி பேருக்காக குடும்பநல நீதிமன்ற வக்கீல்கள் சப்புக்கொட்டிக்கொண்டு “வர்லாம் வர்லாம் வர்லாம் வா வெளியே வா” என்று வாசலுக்கு வெளியேவே நிற்கிறார்கள்.

ஆம் குடும்ப அமைப்பு பெண்களுக்கானது அல்ல, அது முழுக்க முழுக்க ஆண்களுக்கானது. பெண்கள் இத்தனைக் காலமும் அந்த அமைப்பை சார்ந்திருந்ததால் பொறுத்துக் கொண்டார்கள். இனி அவர்களுக்கு அது தேவையில்லை. சமூக அழுத்தத்தால் பெற்றோர்கள் அவளை மணவாழ்க்கை நோக்கித் தள்ளி விடுகிறார்கள். தம் பெண் பிள்ளைகளை தாம் ‘இதற்காக’ வளர்க்கவில்லை என்று அவர்களுக்குத் தெரியும் என்பதாலே அவர்கள் தம் மகள்கள் “எனக்கு அவன் கூட இருக்க பிடிக்கலைப்பா” என்று கண்ணைத்திருமிக் கொண்டு வந்தால் “வாம்மா வீட்டுக்கு வெளியிலேயே வக்கீல் நிற்கிறார். நாம போய் ஒரு பெட்டிஷன் போடுவோம். அப்போ தான் வழிக்கு வருவான்” என வாசலிலே தலையை நீட்டி நிற்கும் வக்கீல் மீது மோதிகொண்டு “இருய்யா வந்திட்டேன்ல” என்று சொல்லியபடி கிளம்புகிறார்கள். “சார் சார் எனக்கு எடுத்த உடனே ஒரு 50000 அக்கவுண்டில போட்டிருங்க, அப்போ தான் நான் கேஸையே எடுப்பேன்” என்று கூவியபடி அவன் பின்னாலே கறுப்பு அங்கி பறக்க ஓடுகிறார்.

ஒருவிதத்தில் நவீன பெற்றோர்கள் தம் மகள்களைத் திருமணம் செய்து கொடுப்பது பற்றி ஒரு குற்றவுணர்வில் இருக்கிறார்கள். அவர்கள் மணநாளன்று பெருமிதத்தில் தம் மகள்களை நோக்கி கண்கள் தளும்ப அட்சதை போடுவது எல்லாம் சினிமாவில் மட்டுமே நடக்கிறது. நிஜத்தில் அவர்கள் வருத்தத்துடனே தம் ‘பிள்ளைகளை’ மணமேடைக்கு அனுப்புகிறார்கள். அவர்கள் மணவிலக்கு கோரும் போது பெற்றோர்கள் பேசி சரிகட்ட முயலவோ விசாரிக்கவோ செய்யாமல் உடனே உவந்து வக்கீலைத் தேடிப் புறப்படுவது இந்த குற்றவுணர்வினாலே. மேலும் இன்றைய பெண்கள் தம் பெற்றோர்கள் சொல்வதையெல்லாம் கேட்பது இல்லை. “நீ வற்புறுத்ததுனால தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இனியாவது நான் சொல்றதை கேளுப்பா” என்று சொல்லி வாயை அடைத்து விடுகிறார்கள். அம்மாவோ “நான் அப்பவே நினைச்சேன் அந்த பையன் சரி இல்லேன்னு. அவனோட அக்கா, தங்கச்சி, அவன் அம்மா யாருமே மூஞ்சி சரியில்ல. என் பொண்ணுக்கு சினிமா ஹீரோ மாதிரி ஒரு மாப்பிள்ளை கிடைச்சிருப்பான். இந்த குரங்குக்கு பிடிச்சு கொடுத்திட்டேனே” என நினைப்பார்.

பெண்களாவது இன்று தப்பித்து வந்துவிடுகிறார்கள். இந்த எதார்த்தம் எல்லாம் புரியாமல், ஆள்கடத்தல் பாணியில் நடக்கிற மணவாழ்க்கைக்குள் போய் சிக்கிக்கொள்கிற ஆண்களின் நிலை தான் பரிதாபம். கல்யாணத்துக்கு முன்னால் அவனுக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் எதுவுமே தாலி கட்டியபிறகு அவனுக்குக் கிடைப்பதில்லை. அதை வெளியே சொல்ல முடியாமல், எல்லாவற்றையும் முழுங்கிக் கொண்டு வாக்கிங் அழைத்து வரப்படும் செல்ல நாயைப் போல அவன் இருக்கிறான். அவனுக்கு குலைக்கவோ கடிக்கவோ உரிமை இல்லை. சாப்பிடு, வாலாட்டு, சாப்பிடு, வாலாட்டு! இந்த நாய் விளையாட்டுகள் முடிந்த பின்னர் அவனைத் தூக்கி தெருவில் விட்டு விடுகிறார்கள். தன்னைப் பிடிக்காத மனைவியின் வெறுப்பு, கோபம், ஒவ்வொரு விசயத்துக்கும் அவளிடம் கெஞ்ச வேண்டிய நிலைமை, அவள் ஒரு கட்டத்தில் வெறுத்துப்போனால் மணவிலக்கு, நீதிமன்றத்தில் வருடக்கணக்காக நடந்து, செட்டில்மெண்ட் கொடுத்து, குழந்தையையும் மனைவியிடம் பறிகொடுத்து அனாதையாகத் திரும்பினால் வீட்டில் ஒருத்தரும் இருக்க மாட்டார்கள். அப்பெண்ணோ empowered woman ஆகி விட்டதாக ஊரே பாராட்டி சீராட்ட, வீட்டில் தன் பெற்றோரின் உதவியும் ஆசீர்வாதமும் பெற்று மகிழ்ச்சியாக் இருப்பாள்.
உண்மையில் அவளுக்கு மணவிலக்கின் போது தான் சுதந்திரம் கிடைக்கிறது. அதனால் மணவிலக்கே பெண்களின் வாழ்வில் ஆக மகிழ்ச்சியான கொண்டாட்டமான தருணம். அவர்கள் எதற்காக வளர்க்கப்பட்டார்களோ இனி அதற்காக அவர்கள் வாழலாம், மற்றொரு மணவாழ்க்கைக்குள் நுழையும் வரை.

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...