முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நம் எழுத்தை எப்படி பாதுகாப்பது?

 

நாம் பதிவுகளில் எழுதும் கதையில் நமக்கு எந்தளவுக்கு சட்டரீதியான உரிமை உள்ளது என்பதில் சில சந்தேகங்கள் இருந்ததால் திரை எழுத்தாளர் சங்கத்துடன் தொடர்புள்ள ஒரு நண்பரிடம் விசாரித்து சில விசயங்களை அறிந்து கொண்டேன். எழுத்தாள நண்பர்களுக்கு பயனளிக்கும் என்பதாலே அதை இங்கு பகிர்கிறேன்.


  1. இதுவே மிக முக்கியமானது - நீங்கள் ஒரு சம்பவத்தை ஒரு கதையாக அல்லாமல் எங்கிருந்தோ யாரோ சொல்லிக் கேட்ட பாவனையுடன், தோற்றத்துடன் எழுதினால் அதைப் பின்னர் யார் எடுத்து கதையாகமாற்றினாலும்அதற்கு நீங்கள் நீதிமன்றத்திற்கு சென்று உரிமை கோர முடியாது.
  2. உங்கள் பதிவு ஒரு கதை போன்ற வடிவில் இருந்தாலும்இவர் இப்படி சொன்னார், அடுத்து அவர் வந்தார், போனார்என நிகழ் காலத்தில் எழுதினால், அதற்குள் விவரணைகள், துவக்கம், முடிவு ஆகிய கதைக்குரிய சங்கதிகள் இருந்தால் அதுகேட்டதை எழுதுதல்எனும் வகைமைக்குள் சேர்க்கப்படும். அதாவது ஒரு ஜூ.வி, தினத்தந்தி செய்தி அறிக்கை போல் கருதப்படும்.
  3. மாதவராஜின் பதிவில் உள்ள பிரச்சினை மேற்சொன்னது தான். அவரால் இதனாலே நீதிமன்றத்துக்கு போய் வெல்ல முடியாது. இதை அவரும் அறிந்திருப்பார் என நினைக்கிறேன். அவர் இதை சிறுகதை என வகைப்படுத்திஅன்று காலை அந்த ஊரில் மழை சிந்திக்கொண்டிருந்தது. அவர்கள் மூவரும் ஒரு சிறு திகைப்புடன் தமக்குப் பரிச்சமில்லாத புதிய மண்ணில் காலெடுத்து வைத்தனர். அப்போது அவர்களுக்கு தாம் விரைவில் எதிர்கொள்ளப் போகும்…” என்று எழுதியிருந்தால் இந்நேரம் நீதிமன்றத்தில் மனுபோட்டு ஒரு நல்ல உரிமைத்தொகையை வாங்கிவிட முடியும். கிரெடிட் கூட கிடைக்கும். நானோ நீங்களோ பேஸ்புக்கில் இதைப் போலபுனைவு போன்ற எத்தனையோ அபுனைவுகளைஎழுதியிருப்போம். அவற்றை யார் வேண்டுமெனிலும் எடுத்து சற்று கற்பனை கலந்தோ மொழியை மாற்றியோ பயன்படுத்தலாம். நாம் போய் காலரைப் பிடித்து கேட்க முடியாது. இதுவே சட்ட நெறிமுறை, நடைமுறை
  4. சரி ஏன் அபுனைவுகளுக்கும் உரிமை அளிக்கக் கூடாது என்று கேட்டால் அது வேறு பல சிக்கல்களை ஏற்படுத்தும் - செய்தி அறிக்கைகளை யாராவது தம் புனைவில் பயன்படுத்தினால் அதை எழுதிய எல்லா ரிப்போர்ட்டர்களும் நீதிமன்றத்துக்கு போவார்கள். பெருங்குழப்பம் விளையும்.
  5. ஒரு சம்பவத்தை கற்பனை கலந்து கதையாக்காமல், ரொம்ப மெனெக்கடாமல் சமாளிக்க மற்றொரு வழி உள்ளது - நீங்கள் எழுதும் பதிவில்பார்த்த ஒன்றாக’, ‘கேட்ட ஒன்றாகஅல்லாமல் நீங்களும் பங்கெடுத்த ஒன்றாக மாற்றிவிட வேண்டும். உங்கள் நண்பர் ஒருவருடைய டெபிட் கார்டின் சிவிவி எண்ணை யாரோ திருடி வழக்கு பற்றி நீங்கள் எழுதும் போதுநாங்கள் இருவரும் போலீஸ் நிலையம் சென்றிருந்தோம்என்று உங்களையும் ஒரு பாத்திரமாக சேர்த்து சில வரிகள் கூடுதலாக எழுதி விடுங்கள். இப்போது இதுசுயசரிதையாகமாறி விடும்.
  6. நீங்களும் ஒரு பிரபலமுமாக பங்குபெற்ற ஒரு அனுபவத்தை நீங்கள் எழுதினாலும் அதில் உங்களுக்கு உரிமை வந்துவிடும். அதே கதையை நீங்கள் அவரது வாழ்க்கைக் கதையாக எழுதினால் அதில் உங்களுக்கு உரிமை இல்லை.
  7. நீங்கள் ஒரு பிரபலத்தின் வாழ்க்கைக் கதையை புறவயமாக தொகுத்து எழுதும் போது அதில் வரும் சம்பவங்கள் நீங்கள் கேட்டோ வாசித்தோ பார்த்தோ அறிந்தவை எனும் வகையில் பொது நுகர்வுக்கு உரிய வரலாற்றுத் தகவல்கள் ஆகிடும். நான் புரூஸ் லீ பற்றி ஒரு வாழ்க்கை சரிதை எழுதியிருக்கிறேன் (“புரூஸ் லீ: சண்டையிடாத சண்டை வீரன்”). அதை யாராவது எடுத்து கதையாக சற்று மாற்றி பயன்படுத்தினால் என்னால் உரிமை கோர முடியாது. ஆனால் புரூஸ் லீ பற்றின நாவலாக அதை நான் எழுதியிருந்தால் அதில் வரும் சம்பவங்களின் உரிமை முழுக்க எனக்கானது மட்டுமே. .தா., எஸ்.ராவின்மண்டியிடுங்கள் தந்தையேநூல்.
  8. சட்டப்படி பார்த்தால் இப்போது பேசப்படும் விசயம் கதைத்திருட்டு அல்ல, ஆனால் தார்மீக ரீதியாக தவறான செயல் என்று நான் விசாரித்த நண்பர் சொன்னார். எனக்கு தார்மீகம் கீர்மீகத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை. அப்படி ஒன்று இந்த உலகில் இல்லவே இல்லை. தவறு செய்வோர் கொங்கூற்றுக்கு இரையாவர் என்பதும் ஒரு கற்பனையும் நான் நம்பவில்லை. அதனால் நம் படைப்பை பாதுகாத்துக் கொள்வது நம் பொறுப்பு. சர்ச்சை, விவாதங்கள், கண்டனங்களால் ஒருவித சிறிய அழுத்தத்தை ஏற்படுத்தலாம். ஆனால் நடப்புலகில் பெரிய தாக்கம் இருக்காது. நம் வீட்டை நாம் பூட்டுப் போட்டு பாதுகாத்துக் கொள்வோம்
  9. திரைக்கதைக்கு என்று ஒரு உரிமை இல்லை. அதாவது நான் எழுதிய திரைக்கதையை ஒருவர் எடுத்து பயன்படுத்தினால் என்னால் போராட முடியாது. ஆனால் கதைக்கு (plot outline) உரிமை உண்டு. திரைக்கதையாளர்கள் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொள்வது, முன்னூக்கத் தொகை (இணையம் வழி / காசோலையாக) வாங்குவது பாதுகாப்பு. பணம் இருந்தால் திரைக்கதை எழுத்தாளர் சங்கத்திலும் உறுப்பினர் ஆவது இன்னும் பாதுகாப்பு.
  10. இங்கு வந்து யாரையும் கடிந்துரைத்து நேரத்தை வீணடிக்காதீர்கள். (எஸ்.ராவை தாக்குவது என் நோக்கமல்ல. இது கல்வி நோக்கத்துடன் எழுதப்பட்ட பதிவு மட்டுமே :) ) 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...