முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

படைப்புக் கலை ஏன் கற்றுத் தரப்படவேண்டும் - அதிஷா

 சினிமா சார்ந்து வருடத்திற்கு 365 நாளும் 365 பயிற்சி பட்டறைகள் நடக்கின்றன. நடிப்பு, திரைக்கதை, எடிட்டிங், இசை, லைட்டிங் லொட்டு லொசுக்கு என ஏகப்பட்ட பட்டறைகளை நடத்துகிறார்கள். இந்த ஒரு நாள் பட்டறைகளுக்கு குறைந்தது ஐந்தாயிரமாவது வாங்குகிறார்கள். அதிலும் பிரபலங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். சமீபத்தில் வெற்றிமாறன் நடத்திய ஒருநாள் வகுப்புக்கு எட்டாயிரமோ பத்தாயிரமோ வாங்கியதாக கேள்விப்பட்டேன். இதைப்பற்றியெல்லாம் யாருக்கும் எந்த விமர்சனங்களும் இருப்பதில்லை. யாருமே ஒரேநாளில் இயக்கம் கத்துக்க முடியுமா, ஒரே நாளில் நடிப்பு வந்துவிடுமா என்று கேட்டு காமெடி பண்ணுவதில்லை. ஆனால் இலக்கிய பயிற்சி வகுப்பு என்றதும் ஏகப்பட்ட கேலிகள் நையாண்டிகள் வந்துவிடுகிறது.

நண்பர் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் வாசகசாலை சார்பாக ஒரு கவிதை பட்டறையை நடத்துகிறார். ஒருநாள் பயிற்சி. அதற்குரிய பாடத்திட்டத்தை நேற்று பகிர்ந்திருந்தார். அதுவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இது நவீன கவிதைக்குள் நுழைய விரும்புகிற இளம் வாசகருக்கு கவிஞருக்கு ஒரு நல்ல அறிமுகமாக இருக்கும். நானும் கூட நேரம் கிடைத்தால் கலந்துகொள்ள நினைத்திருக்கிறேன். அருமையான முன்னெடுப்பு இது. ஆர்வமுள்ளோருக்கு பயன்படும்.
இந்த பட்டறை ஏற்பாட்டளர்களுக்கு ஒரு தயக்கம் இருக்கிறது. அதனாலேயே இது பத்திரிகை வளர்ச்சி நிதிக்காக என்றெல்லாம் சோகமாக பேசுகிறார்கள். அதெல்லாம் தேவையே இல்லை. கவிதை கற்றுக்கொள்ள காசு கேட்டால் என்ன தப்பு… இதுபோல இன்னும் பல கட்டணப்பட்டறைகள் நடக்க வேண்டும். நவீன கவிதைகளுக்குள் எல்லோரும் வரவேண்டும்.
ஆச்சர்யமாக நண்பரும் எழுத்தாளருமான அபிலாஷூம் நாவல் எழுத பயிற்சி பட்டறைகளை நடத்த இருக்கிறார். ஒருநாள் பட்டறை அல்ல. இது இரண்டுமாதங்கள் நடக்க இருக்கிற வாரயிறுதி வகுப்புகள்.
அபிலாஷ் பல ஆண்டுகளாக கல்லூரிகளில் இலக்கியம் பயிற்றுவிக்கிற ஆசிரியர் என்பதால் நிச்சயம் அவருடைய பயிற்சி பயனுள்ளதாக இருக்கும். அனேகமாக தமிழில் அவர் அளவுக்கு இலக்கியத்தை டெக்னிக்கலாக பிரித்து மேய்ந்து பாகம் பிரித்தவர் யாரும் இருக்க முடியாது. சுஜாதாவில் தொடங்கி ஜெயமோகன் சாரு வரை எல்லா வகைமை எழுத்தாளர்களையும் அக்கு அக்காக பிய்த்து போட்டு தொழில்நுட்பம் பேசி இருக்கிறார். நாவல் என்பதன் வடிவம் தொடங்கி அதன் வசனங்கள் வரை எது முக்கியம் எது அவசியமில்லை என அவர் எழுதிய எண்ணற்ற கட்டுரைகளே அவருடைய திறனுக்கு சான்றாக இருக்கும். அவருடைய பட்டறையில் கலந்துகொள்வது நிச்சயம் பயன்தருவதாகவே இருக்கும். (மேலதிக தகவல்களுக்கு அவருடைய பேஸ்புக் பக்கத்தை பார்க்கவும்)
உலகம் முழுக்க எல்லா நாடுகளிலும் இலக்கியம் என்பது கற்றுத்தரப்படுகிற ஒன்றாகத்தான் இருக்கிறது. அங்கெல்லாம் கவிதை நாவல் சிறுகதை என எல்லாமே பயிற்றுவிக்கப்படுகிறது. நம்மூரில்தான் இலக்கியம் என்றாலே ஓசிதான்! புத்தகமும் வாங்கமாட்டார்கள் காசும் கொடுக்க மாட்டார்கள் கற்றும் கொடுக்கமாட்டார்கள்.
எகத்தாளத்திற்கு பஞ்சம் இருக்காது. இலக்கியம் பயிற்றுவித்து வருவதல்ல, அது இயற்கையாக தோன்றும் என்பதெல்லாம் ஆயிரத்தில் ஒருவருக்கும் நடக்கலாம். இங்கே எழுத விரும்புகிற பலருக்கும் தயக்கமும் பயமும் இருக்கிறது, இந்த பட்டறைகள் அதை உடைக்கும். புதிதாக கதவுகளை திறந்துவிடும்!
இலக்கியம் ஜனநாயகப்படுத்தப்பட இதுபோன்ற கல்வி அவசியம். சில ஆண்டுகளுக்கு முன்பு வலைப்பதிவர்களுக்காக நடத்தப்பட்ட சிறுகதை பட்டறை பலரையும் எழுத்தாளர்களாக ஆக்கியது என்பது நினைவுக்கு வருகிறது.
இளங்கோவுக்கும் அபிலாஷூக்கும் வாழ்த்துகள். அவர்களை பின்பற்றி மற்ற எழுத்தாளர்களும் கூட இதுபோன்ற பட்டறைகளை நடத்த முன்வரவேண்டும்.









கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...