முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டி20 உலகக்கோப்பை அணி


 

இதுதான் வரப் போகும் டி20 உலகக்கோப்பைக்காக இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு தேர்வு செய்துள்ள அணி:

ரோகித் சர்மா (கேப்டன்),
யஷஸ்வி ஜெய்ஸ்வால்,
விராட் கோலி,
சூரியகுமார் யாதவ்,
ரிஷப் பந்த்( விக்கெட் கீப்பர்),
சஞ்சு சாம்சன்( விக்கெட் கீப்பர்),
ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்),
ஷிவம் துபே,
ரவீந்திர ஜடேஜா,
அக்சார் பட்டேல்,
குல்தீப் யாதவ்,
யுவேந்திர சஹல்,
அர்ஷ்தீப் சிங்,
ஜஸ்பிரித் பும்ரா,
முகமது சிராஜ்
மாற்று வீரர்கள்:
சுப்மன் கில்
ரிங்கு சிங்
கலீல் அஹ்மத்
ஆஷிஷ் கான்
இந்த அணியின் தேர்வே செம உதை வாங்கி வருகிறது. அந்தளவுக்கு எந்த லாஜிக்கும் இல்லாத தேர்வுகள் கொண்டிருக்கிறது. முதல் பிரச்சினை கடந்த சில ஆண்டுகளாகவே சர்வதேச டி20 போட்டிகளில் ஆடாத ரோஹித்தும் கோலியும் தேர்வாகி இருப்பது. இதனால் அவர்கள் இல்லாத போது ஆடி வந்த இந்திய அணியை முழுக்க மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் அணியில் சமநிலை குலைந்துவிட்டது என பி டாக் பிரசன்னா சொல்வதே என் கருத்தும். கடந்த 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்த இரண்டு சீனியர் மட்டையாளர்களும் நன்றாக ஆடி இறுதிப்போட்டி வரை கொண்டு வந்தனர். ஆனால் 50 ஓவர் வடிவத்தில் புகழ் மங்கிவிட்டது, அது வருங்காலத்தில் குறைவாகவே ஆடப்படும் என இவர்கள் அறிவார்கள். அதனால் இன்னொரு உலகக்கோப்பையில் ஆட வேண்டும் எனும் ஆசை வந்துவிட்டது. கூடவே அடுத்த 3-5 ஆண்டுகள் ஐ.பி.எல்லில் ஆடி சம்பாதிக்க வேண்டும். சர்வதேச போட்டிகளில் டி20 ஆடாவிட்டால் ஒருவேளை தம் ஐ.பி.எல் மதிப்பு போய்விடுமோ என அஞ்சுகிறார்கள். மேலும் இருவருடைய மோசமான ஸ்டிரைக் ரேட் குறித்து இப்போதே பரவலான அதிருப்தி இருக்கிறது. 2026இல் ரோஹித் ஷர்மாவை ஏலத்தில் எடுக்க மாட்டார்கள். கோலியின் ஏல மதிப்பும் வீழ்ந்துவிடும். இதைத் தடுப்பதற்காகவே இவர்கள் வரும் உலகக்கோப்பையில் ஆட முடிவெடுக்கிறார்கள். முழுக்க முழுக்க சுயநலமான முடிவு. இவர்கள் நட்சத்திர வீரர்கள், அணித்தலைவர், முன்னாள் அணித்தலைவர் என்பதால் இவர்களுடைய இடத்தில் ஆடிய இளம் வீரர்களையும் அணியில் சமநிலையையும் பலிகொடுக்க தேர்வாளர்களும் வாரியமும் முடிவு செய்தனர்.
பொதுவாக ஒரு மூத்த வீரரிடம் புதிய அணியை ஒப்படைத்தால் அவர் தன்னுடன் ஆடி வந்த அதே வயதான மாடுகளைத் தான் வண்டியில் பூட்ட விரும்புவார். பலவீனமானவர்கள் தம்முடன் பலவீனமானவர்கள், நிலைபெறாதவர்களையே வைத்துக்கொள்ள விரும்புவர். அதுவே பாதுகாப்பின்மையின் உளவியல். அப்போதுதான் ரோஹித்துகள் மீது விமர்சனம் இருக்காது. ரோஹித்தின் மட்டையாட்டம் மெதுவாக இருந்தால், சொதப்பினால் பிற சொதப்பல் பேர்வழிகளுடன் சேரும் போது அது ஓக்கேவாக தெரியும். தோல்வியைப் பகிர்வது சற்று ஆறுதலாக இருக்கும். ரோஹித் தேர்ந்துள்ள அணி இப்படியானதே.
சரி இந்த அணியின் பலவீனங்கள் எவை:
1) ஜெய்ஸ்வாலையும் துபேவையும் விட்டால் சுழலர்களை சிக்ஸ் அடிக்க ஆட்கள் வேறு இல்லை.
2) சூர்யாவை விட்டால் வேகவீச்சை சிக்ஸ் அடிக்க ஆளில்லை.
இம்மூவரையும் விட்டால் நல்ல டி20 சாதனை வரலாறு கொண்டவர்கள் யாருமில்லை. கோலியும், ரோஹித்தும் 50 ஓவர் போட்டிகளில் ஆடும் அளவுக்கு டி20யில் சோபிப்பதில்லை. ஒற்றை ஓட்டமும் நான்குமே அவர்களுடைய வலிமைகள். மெத்தனமான ஆடுதளங்களில் இந்த வலிமையும் மாயமாகிவிடும். ரோஹித்துக்கு மொத்த ஸ்டிரைக் ரேட் 139. 2022இல் தான் கடைசியாக அதிக போட்டிகள் ஆடினார். 29 போட்டிகளில் 24.29 சராசரி. ஸ்டிரைக் ரேட் 134 (மூன்றே போட்டிகள் ஆடி 121 ரன்கள் எடுத்த 2024 ஆம் ஆண்டை நான் பொருட்படுத்தவில்லை.) 2022இல் கோலி 55.78 சராசரியில் 781 ரன்கள் அடித்தாலும் அவரது ஸ்டிரைக் ரேட் 138 மட்டுமே. பொதுவாக குறைவாக ரிஸ்க் எடுக்கும் மட்டையாளர்களால் நல்ல சராசரியில் நிறைய ரன் அடிக்க முடியும். ஆனால் அது அவர்களுடைய அணியின் மொத்த ஸ்கோரை 40-50 ரன்கள் குறைத்து விடும். அதன் பெயரே தன்னல ஆட்டம். கோலி நம் டி20 யுகத்தின் அதீத சுயநலவாதி.
3) ஷிவம் தூபெ நல்ல தேர்வே. ஆனால் ரிஷப் பண்டின் டி20 சாதனை வரலாறு மோசமானது. இதை ஒரு செண்டிமெண்டல் தேர்வு எனலாம்.
4) 66 போட்டிகளில் 22 சராசரி. ஸ்டிரைக் ரேட் 126. பண்டின் சாதனைகள் டெஸ்டில் மட்டுமே. ஏனெனில் டி20களில் பவுண்டரியில் களத்தடுப்பாளர்கள் அதிகம். பண்டால் அந்த கள அமைப்பை மீறி ரன் அடிக்க முடிவதில்லை. தொடர் தோல்விகள் காரணமாக அவர் இப்போது உயர்வான ஸ்டிரைக் ரேட்டில் ஆடுவதும் இல்லை. ஐ.பி.எல் சாதனைகளை வைத்து அவரை மதிப்பிடலாம் என்றால் அதிலும் அவரது ஸ்டிரைக் ரேட் 145 தான். 66 போட்டிகளில் ஆடி தோல்வி அடைந்தவரை ஏன் நேரடியாக உலகக் கோப்பை அணியில் கொண்டு வர வேண்டும்.
5) சஞ்சு சாம்சன் திறமையானவர் என்றாலும் சர்வதேச போட்டிகளில் அவர் கவனமாக நிதானமாக அடிப்பதில்லை. தன்னம்பிக்கையின்மையா கவனமின்மையா எனத் தெரியவில்லை. ஆனால் இவ்வளவு வாய்ப்புகள் கிடைத்தும் 25 போட்டிகளில் 18 சராசரியில் 133 ஸ்டிரைக் ரேட்டில் அடித்துள்ளவரை 9 போட்டிகளில் 147 ஸ்டிரைக் ரேட்டில் ஆடிய இளைஞரின் (ஜிதேஷ் ஷர்மா) இடத்தில் ஏன் எடுக்க வேண்டும்? அதுவும் இந்த ஐ.பி.எல்லிலே ஒரு தலைவராக ஒரு போட்டியை வேண்டுமென்றே எதிரணிக்கு விட்டுக்கொடுக்க தயாரான ஒரு வீரரரை எந்த நம்பிக்கையில் இந்திய அணிக்கு எடுக்க முடியும்?
6) ஹர்த்திக்கும் ஜடேஜாவும் சரியான மட்டையாட்ட ஆட்டநிலையில் இல்லை. ஆனாலும் ஆல்ரவுண்டர்களாக உதவுவார்கள்.
ஆனால் ஜடேஜாவின் மாற்றாக அக்ஸரை எடுத்திருப்பது மட்டமான முடிவு. டி20யில் அவரால் போட்டிகளை வெல்ல முடியாது. ரோஹித்தே அவரது 50 ஓவர் ஆட்டத்தை வைத்து எடுத்திருப்பதாக சொல்கிறார். எனில் பூஜாராவின் டெஸ்ட் ஆட்டத்தை வைத்து அவரது 50 ஓவர்கள் அணியில் சேர்க்கலாமா? அதுவும் உலகக் கோப்பையின் போதுதான் சோதனைகள் செய்ய வேண்டுமா?
7) சஹலின் தேர்வும் முட்டாள்தனமான வியூகம். அவரையும் குல்தீப்பையும் சேர்த்து ஆட வைக்க முடியாது. அது மட்டையாட்டத்தை மட்டுமல்ல களத்தடுப்பையும் பாதிக்கும். மேலும் இருவரும் ஆடினால் மத்திய ஓவர்களில் அவர்களில் ஒருவர் சிக்ஸர்களுக்குப் போனால் கடைசி 5 ஓவர்களை வீச பும்ரா, அர்ஷ்தீப்பின் ஓவர்கள் மீதமிருக்காது. இது பெரிய ரிஸ்க்காகும்.
😎 இளமையும் வலுவான ஸ்டிரைக் ரேட்டுமே டி20 போட்டிகளை வெல்ல உதவும். வயதும் அனுபவமும் ரன்களும் அல்ல. 60 பந்துகளில் அடிக்கப்படும் 80ஐ விட 20 பந்துகளில் அடிக்கப்படும் 40 மேலானது. இது நான் சொல்வது அல்ல. உலகம் முழுக்க டி20 அணிகளின் உத்தி இதுதான். இந்திய அணி மட்டும் தான் டி20யை 50 ஓவர் பாணியில் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால நாம் வீரர்களின் நட்சத்திர மதிப்பும், ஊடக வியாபாரத்தின் தேவையுமே முக்கியமென நினைக்கிறோம். வெல்வது ரெண்டாம் பட்சமே. இந்த அணி உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பு மிக மிக குறைவே என அகார்க்கருக்கும் தெரியும். ஆனால் அவரது கைகள் கட்டப்பட்டுள்ளன.
9) பந்துவீச்சில் சிராஜின் தேர்வு ரோஹித்துக்கு அவர் மீதுள்ள பாசத்தைத் தாண்டி எந்த ஞானத்தையும் காட்டவில்லை. சிராஜ் எந்தளவுக்கு மட்டமான டி20 வீச்சாளர் என உலகமே அறியும். ஆவேஷ் கான் மட்டுமே ஓரளவுக்கு சுமாரான ஆட்ட வரலாற்றைக் கொண்டவர். ஆனால் கலீல் அஹமது இந்த ஐ.பி.எல்லின் நன்றாக வீசினாலும் அவர் இதுவரை ஒரு சர்வதேச டி20யிலும் ஆடியதில்லை.
10) மூன்று வேகவீச்சாளர்களையும் 5 சுழலர்களையும் எடுத்ததன் லாஜிக்கும் புரியவில்லை. ஆடுதளங்கள் ஸ்விங் ஆகவோ சுழலவோ செய்யாது என ஐ.ஸி.ஸியே சொல்லிவிட்ட பிறகு எந்த நம்பிக்கையில் இதை செய்கிறார்கள்? நீங்கள் கடைசியாக எந்த உலகக் கோப்பைத் தொடரில் பந்து திரும்பியதைப் பார்த்தீர்கள்? 1996இல்? 2014இல்? காலம் அதன் பிறகு வெகுவாக மாறிவிட்டது. ஆனால் ரோஹித்தும் அகார்க்கரும் ஐயோ பாவம் சஹலும் அக்ஸரும் இதற்கு மேல் எப்போது உலகக்கோப்பையில் ஆடுது என செண்டிமெண்டலாக யோசித்து தேர்வு செய்திருக்கிறார்கள்.
11) ஸ்குவாடில் மூன்றே வேக வீச்சாளர்கள் உள்ள நிலையில் ஒரு போட்டியில் இரண்டு வேகவீச்சாளர்களுடன் ஆடும் ஒரு போட்டியின் பாதியில் ஹர்த்திக் காயம் அடைந்தால் எங்கு போவார்கள்?
12) மேற்சொன்ன சீனியர்களின் ரிடையர்மெண்ட் பிளான் அனுதாப முடிவுகளின் விளைவாகத் தான் கடந்த ஓராண்டாக இந்தியாவின், உலகின் தலைசிறந்த பினிஷராக விளங்கிய ரிங்கு சிங்கை பிரதான 15 பேர் ஸ்ஸ்குவாடில் எடுக்கவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...