ஒப்பிடுகையில் அலெக்ஸாவுக்கு உரையாடல் திறன் இல்லை. மெட்டா அசஸ்டெண்ட் கூகிள் தேடுபொறியைப் போலவே இருக்கிறது.
சாட்ஜிபிடியை சரியாக பயன்படுத்தத் தெரிவதும் அவசியம் - என் நண்பர் ஒருவர் வேலையில் சேர்ந்தார். தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகளை அவர் எழுதியளிக்க வேண்டும். சாட்ஜிபிடியில் போட்டு எடுத்து கொடுத்ததால் அவரை அறிவுத்திருட்டுக்காக வேலையில் இருந்து தூக்கிவிட்டார்கள். ஏனென்றால் அதில் நமது மனிதத்தன்மையையும் சேர்த்து செறிவுபடுத்தாவிட்டால் ரொம்ப மட்டமாக இருக்கும். மக்கள் சாட்ஜிபிடி மொழியைக் கண்டதும் அடையாளம் காணும் அளவுக்கு அது ஒற்றைத்தன்மை கொண்டது.
இப்போதைக்கு சுய-கல்விக்கும், ஆய்வுக்கும் பயனுள்ள தேடுபொறி சாட்ஜிபிடி. ஒரு புதிய கருத்துருவை, எழுத்து வடிவத்தை உருவாக்க அது முன்கூறான சில தகவல்களை அளிக்கும், வேலையை துவக்கி வைக்க, வரைபடத்தை உருவாக்க உதவும்.
இதில் ஒரு விசித்திரம் என்னவெனில் தேடுபொறிகள் நம்மை கூடுதல் தகவல் அறிவும், புத்திசாலித்தனமும், மொழித்திறனும் பெற்றவர்களாக மாற்றுகின்றன. முதலில் கூகிள், அடுத்து சமூகவலைதளங்கள், இப்போது சாட்ஜிபிடி. ஒரு சவாலை கையாள்வதில் நமக்குள்ள வேகத்தை, திறனை அதிகப்படுத்துகின்றன என்பதை கடந்த மூன்று பத்தாண்டுகளில் தோன்றியுள்ள தலைமுறையினரைப் பார்க்கையில் தெரிகிறது. எந்திரங்கள் நம் பிரக்ஞையை தகவமைக்கும் என டெலூஸும், ஓரளவுக்கு ஹைடெக்கரும் சொன்னது இப்போது நிகழ்ந்தேறுகிறது. மனித பிரக்ஞையென ஒன்று தனித்தில்லை என்பதே இதன் மகத்தான பாடம். அது நம்மையும் நாம் அதனையும் தகவமைத்து முன்னேறிக் கொண்டே போகிறோம். இதற்கு முன்பு இணையத்தின் இடத்தை கருவிகளும், இயற்கையின் இயக்கமும் எடுத்துக் கொண்டிருந்தது என்பதே வித்தியாசம். ஆனால் நாம் என்றுமே தனித்துவமாக சுயாதீனமாக இருந்ததில்லை.
நம்மிடம் யாராவது ஒரு கத்தியை, துப்பாக்கியை, ரோஜாவை, கவிதையைக் கொடுத்தால் அதை வைத்து என்ன பண்ணுவதென்று பரபரவென யோசிப்பதே அழகு. பயன்படுத்துவதே மனித ஆற்றல். அது நம்மை என்ன பண்ணிவிடும் என அஞ்சுவதல்ல. அப்படியான அமானுஷ்ய ஆற்றல் எக்கருவிக்கும் இல்லை. ஒரு காலத்தில் மக்கள் ஆணுறையைக் கூடத்தான் அஞ்சினார்கள்.
ஆகையால் நான் சாட்ஜிபிடியைக் கண்டு அஞ்சுவதோ அதை எள்ளுவதோ இல்லை.
Comments