முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொழுத்த ஆடுகள்




மகாவிஷ்ணு மதுரைப்பக்கமாக ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இப்போது சின்ன வயதிலேயே சொந்தமாக தனியார் ஜெட் விமானம் வைத்திருக்கிறார் என்று தொலைக்காட்சி செய்தியொன்றில் பார்த்தேன். அதெப்படி இவ்வளவு சீக்கிரமாக இவ்வளவு கோடிக்கணக்கில் சம்பாதித்தார் என அந்த நிகழ்ச்சியிலேயே வினவுகிறார்கள். இது ஒன்றும் கடினம் அல்ல - இந்து மதத்திலும் (வேறு சில மதங்களிலும்தான்) கார்ப்பரேட் கள்ளச்சாமியார்கள் ஒரு சில ஆண்டுகளிலேயே நூற்றுக்கணக்கான கோடிகள் பணத்தை சேர்க்கமுடியும். உழைக்கவெல்லாம் வேண்டியதில்லை. ஓஷோவால் அமெரிக்காவில் சொந்தமாக ஒரு நகரத்தையே உருவாக்க முடிந்தது; நூற்றுக்கணக்கான விலைமதிப்பான கார்கள், தங்க வைர நகைகளை வைத்திருந்தார். "எதுவுமே என்னுடையது அல்ல, என் பக்தர்களின் பரிசுகள்" என்றார் அவர். ஏன் ஏழைகளின் பரிசுகள் அவரிடம் இல்லை? ஏன் உள்நாட்டு, வெளிநாட்டுக் கொடையாளர்கள் பயங்கர பக்திமான்களாக இருக்கிறார்கள்? அடுத்து ஓஷோ கைதானபிறகு அவரது பணம் எங்கே போயிற்று? ஏனென்றால் அவர் தனது பெருமளவுக்கான செல்வாக்கும் செல்வமும் இன்றிதான் இந்தியாவுக்குத் திரும்பி தன் கடைசிக் காலத்தைக் கழித்தார். மீதமிருந்த 100 கோடிப் பணத்தை அவரது வெளிநாட்டு பக்தர்கள் கையாடிவிட்டதாக ஒரு புகார் நீதிமன்றத்தில் உள்ளது. இதேதான் நித்தியானந்தாவுக்கும் அவர் இந்தியாவை விட்டுத் தப்பியோடியபோது நடந்தது. அதெப்படி தனிநபரின் பணத்தை சுலபத்தில் பறிக்கமுடியும்? அது முறையற்று சம்பாதித்த பணமென்றாலும்கூட? ஏன் ஓஷோவில் இருந்து ஜக்கி, நித்திவரை பணக்கார பக்தர்களையே முதலில் நாடுகிறார்கள்? தமது ஆன்மீகத் தொண்டுக்கு பணக்கார பக்தர்களைக்கொண்டு நிதியைத் தேடுவதாக அவர்கள் கூறினாலும் தாம் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணத்தை நூற்றுக்கணக்கான கோடிகள் அவர்கள் ஏன் கொண்டுவந்து ஒரு சாமியாரின் மடியில் கொட்டவேண்டும்?

இந்தக் கேள்விகளை எனக்குத் தெரிந்து யாருமே எழுப்புவதில்லை.

இப்பணம் அடிப்படையில் கறுப்புப்பணமாகும், ஒரு பெரிய கார்ப்பரேட் சாமியாரை பெரும்பணக்காரர்கள் சேர்ந்து உருவாக்குகிறார்கள். தமது பணத்தை அயல்நாட்டில் பதுக்குவதற்குப் பதிலாக இந்த சாமியார்களுக்கு காணிக்கையாக அளித்து வருமான வரித்துறையினரின், அமலாக்கத்துறையினரின் தொந்தரவு இன்றி பாதுகாக்கிறார்கள். அதற்கு ஏற்ப இந்தியாவில் சட்டம் உள்ளது. அதனாலே அவர் சிக்கலில் மாட்டும்போது அவரிடம் இருந்து பணத்தைப் பறித்துக்கொள்கிறார்கள்.

2-3 ஆண்டுகளில் ஒருவர் உழைக்காமலே, சொந்த முதலீடுயின்றியே பெரும் செல்வந்தராகிறார் என்றால் அவர் கறுப்புப்பணத்தின் முகவராக இருக்கிறார் என்று பொருள். கார்ப்பரேட் சாமியார்கள் மிகப்பாதுகாப்பான ஒரு கறுப்பணச் சந்தை நிர்வாகியாக மாறுகிறார்கள். அதனாலே இந்த பெரும் செல்வந்தர்களும் ஊடகங்களும் சேர்ந்து அவர்களுக்கு மகத்தான ஆதரவளிக்கிறார்கள். நாம் அவர்களுடைய கருத்துக்களையும் செயல்பாடுகளையும் விமர்சிக்கும் அளவுக்கு அவர்களுடைய பொருளாதார செயல்பாடுகளை கவனிப்பதில்லை. மகாவிஷ்ணு விளம்பரத்துக்காகவும் யுடியூப் சேனலில் பேட்டியளிப்பதற்காகவும் நிகழ்ச்சிகளை நடத்தவும், அமைச்சர்களை அணுகவும் அவருக்குப் பின்னிருந்து கோவை, திருப்பூர் தொழிலதிபர்கள் இயக்குகிறார்கள், நிதியாதரவுத் தருகிறார்கள் என்பது என் ஊகம், கூடுதலாக வெளிநாட்டினரின் கறுப்புப் பணமும் அவர்வழியாக நம் சந்தைக்குள் புழங்குகிறது என நினைக்கிறேன். அல்லாவிடில் இவர்களால் இவ்வளவு சுலபத்தில் கல்வி நிலையங்களை ஊடுருவி, அரசியல் தலைவர்களை நெருங்க இயலாது. கட்சிகளுக்கு பெரும்பணத்தை நிதியாக அளித்துவிட்டே தம் கடையை இவர்கள் விரிப்பார்கள். எல்லா வாயில்களும் இவர்களுக்குத் திறப்பது இப்படித்தான். ஜக்கி சட்டவிரோதமாக வனநிலத்தை ஆக்கிரமித்து இன்னும் ஆசிரமம் நடத்துவது அவருக்கு உள்ள அரசியல் அணுக்கத்தைக்கொண்டே. வெறும் சன்னியாசிப் பிம்பம் மட்டும் இதைத் தீர்மானிப்பதில்லை. நாட்டில் ஆயிரக்கணக்கில் அனாதைச் சாமியார்கள் இருக்கிறார்களே.

ஒரு கறுப்புப் பண முகவரை நாம் இந்துத்துவவாதி, மதவாதி, சனாதனவாதி, அடிமுட்டாள் என்றெல்லாம் சாடுவது அவரைக் காப்பாற்ற மட்டுமே உதவும். அவருக்குப் பின்னால் இருக்கும் கறுப்புப் பண முதலைகள் இதைப் பார்த்து இளித்துக்கொண்டிருப்பார்கள்.

என்னை ஆச்சரியப்படுத்துவது இரண்டு விடயங்கள் தாம் -

1) இந்த கார்ப்பரேட் கறுப்புப் பணச்சாமியார்களில் ஜக்கியையும் ஶ்ரீஶ்ரீயும் தவிர பெரும்பாலானவர்களால் நிலைக்க முடிவதில்லை. ஆடு கொழுத்ததும் அறுப்பதைப்போல மொத்தப் பணத்தையும் பறித்து ஊரைவிட்டே துரத்திவிடுகிறார்கள். இதற்கும் பொருளாதாரக் காரணங்களே கணிசமாக இருக்கும் என நினைக்கிறேன். இதைப்பற்றி ஆராய்ந்து அறிந்து ஊடகங்கள் ஏன் எழுதுவதில்லை? இந்த ஊடக முதலாளிகளில் எத்தனை பேர்கள் இச்சாமியார்களிடம் தம் கறுப்புப் பணத்தைக் கொடுத்து வைத்திருக்கிறார்கள்?

2) மகாவிஷ்ணு அரசுப் பள்ளியில் பேசிய பேச்சுக்காக மட்டும் கைது பண்ணப்பட்டதாக நான் கருதவில்லை. நிச்சயமாக அந்த வழக்கு நிற்காது. வேறேதோ காரணம் இருக்கிறது. அவர் செட்டில் பண்ணிவிட்டு வந்துவிடுவார் என பலரும் எதிர்பார்ப்பது அதனாலே. மலைமலையாகக் குவியும் கறுப்புப் பணம் ஒரு துரும்பைக்கூட உலகப்பிரபலமாக்கிவிடும். பொதுமக்களின் கறுப்புப்பணத்தை சட்டவரையறைக்குள் கொண்டுவர விரும்பும் அரசியல் தலைமை ஒருபோதும் பெரும் செல்வந்தர்களையும் தலைவர்களையும் அவ்வாறு கட்டுப்படுத்த நினைப்பதில்லை. அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு வலை உள்ளது - அதுவே இத்தகைய சாமியார்கள் எனும் கறுப்புப்பண வங்கிகள். 

என்ன நடந்தாலும் சாமியார்களுக்கு அளிக்கப்படும் நிதிக்கு சாமியார்களும் நிதியாளர்களும் ஒழுங்காக கணக்குக்காட்ட வேண்டும் என ஒரு சட்டத்தைக் கொண்டு வர மாட்டார்கள். அப்படிச் செய்தால் இவர்களை விட ஆற்றல்மிக்க இன்னொரு கறுப்புப் பண முகமையை உருவாக்கிவிட்டே செய்வார்கள். கொழுத்தாடுகள் ஒரு நோக்கத்துடனே வளர்க்கப்படுகின்றன. நாம் ஆடுகளைப் பழிக்காமல் வளர்க்கிறவர்களைக் கேள்வி கேட்கப் பழகவேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...