ஆம் ஆத்மியின் ஊழலைப் பற்றி தில்லிக்காரர்களான என் மாணவர்கள் முன்பே சொன்னார்கள். ஆகையால் அண்மையில் கேஜ்ரிவால் கைதானபோது நான் ஆச்சரியப்படவில்லை. மக்கள் வேறுவழியில்லாமல் பாஜகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள். ஊழலை ஒழிக்க முதல் வழி தனிச்சொத்தை ஒழிப்பதோ கட்டுப்படுத்துவதோ தான். சொத்தை, பணத்தை கட்டில்லாமல் சேர்த்துக்கொள்ள தனிமனிதர்களுக்கு வாய்ப்பிருந்தால் ஊழல் பெருகுவதை தடுக்க முடியாது. அப்படி ஒழிப்பதாக சொல்லி வாக்கு கேட்பவர்களே அதிக ஊழல் செய்யும் பெருச்சாளிகளாக மாறுவார்கள். தில்லி தேர்தலில் ஆம் ஆத்மியின் வீழ்ச்சி இதற்கு ஒரு சிறந்த உதாரணம்!
ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன். அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...
கருத்துகள்