முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உள்ளே வெளியே



இங்கிலாந்து-இந்தியா டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டி ரொம்ப சுவாரஸ்யமாகப் போகிறது. ஆடச் சிரமமான ஆடுதளம். பந்து ஸீம் ஆகிறது (தையலில் பட்டு ஆட்டமாய் அசைகிறது), ஸ்விங் ஆகிறது (குளிர் சீதோஷ்ணம், மழை மேகமூட்டத்தால் காற்றிலே அலைகிறது). முதலில் மட்டையாடிய இந்தியா 224 எடுத்தால் அடுத்து ஆடிய இங்கிலாந்து 247. அடுத்து ஆடிய இந்தியா 75க்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. அடுத்து இந்தியா எவ்வளவு ஓட்டங்கள் எடுப்பார்கள், ஆட்டம் நான்காவது நாளுக்குப் போகுமா என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால் இந்த ஆடுதளத்தில் பந்தை முன்னங்காலில் விரட்டுவதோ புல் அடிப்பதோ சுலபமல்ல. பின்னங்காலுக்குப் போய் விரட்டுவதும் ரிஸ்க்தான். சில பந்துகள் அரை அடிக்கு உள்ளே வருகிறது. குறிப்பாக வலதுகை மட்டையாளர்களுக்கு. சில பந்துகள் இப்போதே தரைமட்டமாக பல்லியைப் போல ஊர்ந்து வருவதைப் பார்த்தால் மூன்றாவது நாள் ஆட்டமும் கடினமாக இருக்கும், நான்காவது நாளுக்கு ஆட்டம் சென்றால் படுபயங்கரமாக இருக்கும் எனத் தெரிகிறது. எப்போது வேண்டுமானாலும் விக்கெட் விழலாம் என்பதால் தடுத்தாடி ரன் சேர்ப்பதும் சுலபமில்லை. ஓவருக்கு ஒரு பவுண்டரியாவது அடிக்காவிடில் அழுத்தம் அதிகரித்து விக்கெட் போகிறது. எந்த ஒரு குறிப்பிட்ட ஸ்டைலிலும் (விரட்டுவது, வெட்டுவது) மட்டையாளரால் ஆட முடியாது. ஆனால் மைதானத்தின் புல்வெளிப் பரப்பானது வேகமாக உள்ளது. ஆடுதளத்தில் வேகமும் உள்ளது. அதனால் பவுண்டரி அடிப்பது சற்று சுலபம். இதனால்தான் கிடைக்கிற வாய்ப்பில் எல்லாம் நேர்மறையாக ஆடினாலே அரைசதம் கூட அடிக்க முடியும் என மட்டையாளர்கள் நினைக்கிறார்கள். சினிமாவில் புற்றுநோய் முற்றிய நிலையில் காதலர்கள் இருவரும் கல்யாணம் பண்ணிக்கொண்டே சாகலாம் என நினைப்பார்களே மட்டையாளர்களும் அப்படியே கொஞ்சம் ரிஸ்க் எடுத்து வேகமா ரன் அடிச்சே அவுட்டாகலாம் எனும் முடிவுக்கு வருகிறார்கள். இங்கிலாந்து இரண்டாவதாக மட்டையாடியபோது கிராலியும், டக்கெட்டும் பத்து ஓவர்களில் 90க்கு மேல் அடித்தார்கள். அது இல்லாவிடில் அவர்கள் 140க்கு ஆல் அவுட் ஆகியிருப்பார்கள். 100 ரன்கள் லீட் கொடுத்திருப்பார்கள். அந்த அதிரடி துவக்கமே அவர்களைக் காப்பாற்றியது. இந்தியா அடுத்து ஆட வரும்போது ஜெய்ஸ்வாலின் அதிரடி ஆட்ட உத்தியும், கொஞ்சம் அதிர்ஷ்டமும் இந்தியாவுக்கு கைகொடுத்தது. அல்லாவிடில் 30க்கு 3 விக்கெட்டுகள் கொடுத்திருப்பார்கள்.

இங்குதான் இங்கிலாந்தும் இந்தியாவும் செய்த ஆடுகள அமைப்புத் தவறுகளைச் சுட்ட வேண்டும் - இந்த ஆடுதளத்தில் துவக்கத்தில் இருந்தே உள்ளே-வெளியே ஆடுகள அமைப்பே சரியானது. மட்டையாளர் பவுண்டரி அடித்து தன் மீது அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொண்டால் பந்துவீச்சாளர் பதற்றத்தில் நீளத்தைக் குறைத்தால் விக்கெட் விழாது. இன்று ஜெய்ஸ்வாலுக்கு இந்தளவுக்கு பவுண்டரிகளைக் கொடுக்காவிடில் இந்தியா பின்னடைவு பெற்றிருக்கும். அதேபோல இங்கிலாந்து துவக்க வீரர்களை களத்தை உள்ளே அமைத்து அதிகமாகத் தாக்க முயன்றதாலே வேகமான துவக்கம் அவர்களுக்குக் கிடைத்தது. இரண்டு அணித்தலைவர்களும் தவறிழைத்து விட்டார்கள். இரண்டாவது இன்னிங்ஸில் போப்புக்குப் பதில் ஸ்டோக்ஸ் தலைவராக இங்கிலாந்துக்கு இருந்திருந்தால் நான்கு களத்தடுப்பாளர்களையாவது நான்காவது ஓவர் முதலே வெளியே நிற்க வைத்திருப்பார். பவுண்டரிகளை ரத்து செய்திருப்பார். ஜெஸ்வாலின் ஸ்கோர் ஆட்டநாள் முடிவில் 20ஆக இருந்திருக்கும். போப் நாளைக்கு சுதாரித்து ஆடுகளத்தை நிச்சயமாக மாற்றுவார், அத்துடன் விக்கெட்டுகள் சரியும் என நினைக்கிறேன்.
ஒருவேளை இந்தியாவால் 260-300 இலக்கை நிர்ணயிக்க முடிந்தால் உள்ளே-வெளியே ஆடுகளத்தை கில் அமைத்து ரன்களைக் கட்டுப்படுத்த வேண்டும். நான்கு ஸ்லிப்புகளும் கல்லியும் / டீப் பைன் லெக்கும் போதும். நான்கு பேர்களையாவது வெளியே நிற்க வைக்க வேண்டும். ஒற்றை ரட்டை ரன்களைக் கொடுக்கலாம் தப்பில்லை. மட்டையாளர்கள் பத்து ஓவர்களில் 30 ரன்கள் எடுத்தால் விக்கெட்டுகள் நிச்சயமாக விழும். ஆனால் இந்தியா 200க்குள் ஆல் அவுட் ஆனால் வெல்வதற்கு சிரமப்படும். 260-280 தாண்டினாலே வெற்றியின் கதவுகள் திறக்கும். ஆடுதளம் அந்தளவுக்கு நாளை மாறாது என எதிர்பார்க்கிறேன். பார்க்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...