முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பார்த்தீனியம்

 விஷ்ணுபுரம் அமைப்பு ராணுவ ஒழுங்கையும், ஒற்றைப்பட்டையான சிந்தனையையும், ஹிட்லரிய சிந்தனையோட்டத்தையும், சுயத்தை அழித்துவிட்டு உலவும் சிட்டி ரோபோக்களையும் உருவாக்கிவிட்டு நம் கலாச்சார சூழலுக்கு பல கேடுகளை விளைவித்தாலும் அது சில நல்ல விசயங்களையும் கூடவே செய்கிறது. முக்கியமான படைப்பாளிகளைத் தேர்ந்தெடுத்து விருதளிக்கிறது, அவர்களைக் குறித்த நூலை வெளியிடுகிறது, ஆவணப்படம் எடுத்து அங்கீகரிக்கிறது. அதனால், விஷ்ணுபுரம் அமைப்பு இலக்கியச் சூழலில் விளைந்த - இயற்கையையும் சூழலையும், கிராமங்களையும், விவசாய சுதந்திரமான, தற்சார்பான வாழ்க்கை முறையை ஒழித்து, விவசாயச் செலவுகளை அதிகரித்து, ஏற்றத்தாழ்வுகளைப் பெருக்கி, கூடவே கொஞ்சம் வளத்தையும் கொண்டு வந்த - 'பசுமைப்புரட்சி' என்று தோன்றுகிறது. அது நம்மை உள்ளிருந்து அழிக்கும், கூடவே சில நன்மைகளையும் தரும். விஷ்ணுபுரம் அமைப்பும், அதன் விருதும் ஒரு 'நல்ல தீமை'.

அமைப்புகள் இயற்கையாகத் தோன்றி மறையும்போது, நெகிழ்வுத்தன்மை கொண்டிருக்கும்போது கேடானவை அல்ல. ஆனால் தெளிவான இலக்கும், நடைமுறைகளும் கொண்டு அவை நிறுவனமாகும்போது சுதந்திர சிந்தனையையும், பிசுறுகளையும் எதிர்ப்போக்குகளையும் அவை அழித்துவிடும். அவ்வப்போது இப்பிசுறுகளையும், எதிர்ப்பாளர்களையும் தம்வயப்படுதி செரித்துவிடும். அவை அதிகார அமைப்புகளாக மாறி படைப்பூக்கமான மனிதச் செயல்பாட்டை 'உழைப்பாக்கும்', அதனாலே ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் சுயதணிக்கையையும் சுயகண்காணிப்பையும் வலியுறுத்தும். அதாவது எழுதுவதும், பேசுவதும், வாசிப்பதும் ஒரு உழைப்பு, அதற்கு என்று முறைமையும், நோக்கமும், கூலியும் உண்டு எனக் கூறும். உழைப்பாளருக்கு என்றே தனி பயிற்சியும் இருக்கும். எப்படி வாசிப்பது, சிந்திப்பது, ஆன்மீகத் தேர்ச்சி பெறுவது எனக் கராறான வழிமுறைகளைப் போதிக்கும் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படும். படைப்பாக்கம் ஒரு இருத்தல், அது உழைப்பல்ல - இதை அவர்களுக்குப் புரியவைக்க முடியாது.
இம்மாதிரி அமைப்புகளுக்குள் செயல்படும்போது வரும் வெகுமதிகளும் அனுகூலங்களும் ஒரு நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருப்போருக்கு கிடைக்கும் - அமைப்புக்குள் இருப்போரின் வாசக அங்கீகாரம், விருதுகள், வாய்ப்புகள், வெளிநாட்டுப் பயணங்கள். ஒரு அரசியல் கட்சிக்குள் இருந்தால் கிடைப்பன எல்லாம் இலக்கிய நிறுவனங்களிலும் கிடைப்பனவே. அதைப் பாதுகாக்க படைப்பாளிகள் தமக்குப் பிடிக்காத படிநிலையை, அடிமைச் சிந்தனையை ஏற்பார்கள். போகப்போக அதில் ருசிகண்டு அவர்கள் மாறிவிடவும், தனித்தனி அதிகார நிறுவனங்களாக ஆகிவிடவும் கூடும்.
இதை அலசினால் ஒன்று விளங்கும் - இங்கு பதிப்புத் துறை தோன்றி அது வணிகமயமானபோது எழுத்தை முழுக்க பார்முலாவாக மாற்றியது. அது ஒரு தனி பண்பாடானது (வெகுஜன எழுத்து). பல பயன்பெற்றார்கள். ஆனால் அது ஒரு தொழிற்சாலையாகவும் எழுத்தாளர்கள் அங்கு உழைப்பாளர்களாகவும் வாசகர்கள் பயனர்கள் / நுகர்வோராகவும் இருந்தனர். இதை ஏற்க முடியாமல் - முப்பது, நாற்பதுகள் முதற்கொண்டே - எதிர்மரபாக சிறுபத்திரிகை மரபு தோன்றியது. இன்று அம்மரபுக்குள் இருந்து இடைநிலை மரபு ஒன்று தோன்றி அது மேற்சொன்ன 'தொழிற்சாலையாக' மாறுகிறது. இலக்கியச் செயல்பாடு வழிமுறைப்படுத்தப்பட்ட பணியாகிறது. அட்டவணைகள், திட்டங்கள், விதிமுறைகள் வகுக்கப்பட்டு நிதி திரட்டபட்டு அதையே இலக்கிய இயக்கம் என்று அழைக்கின்றனர். நிஜத்தில் அது ஒரு கட்சியையோ தொழில் அமைப்பையோ போன்ற நிறுவனம்தான் என்று நாம் சொன்னால் "ஆம், நாங்கள் மறுக்கவில்லை, இதுதான் காலத்தின் அவசியம், இலக்கியத்தை உயரங்களுக்குக் கொண்டு போக இது தவிர்க்க முடியாதது" என்கிறார்கள். ஆனால் இதையேதான் கல்ட் ஆன்மீகவாதிகளும் அரசியல் இயக்கங்களும் நம்மிடம் கூறின, கூறுகின்றன.
ஒருவிதத்தில் விஷ்ணுபுரம் எனும் பெயர் வெகுபொருத்தமானது - "விஷ்ணுபுரம்" நாவலிலும் இதுதான் நடக்கும்: ஆன்மீகத் தேடலுக்காக நடக்கும் தத்துவ விவாதம் (பௌத்தம் vs வைதீக மதம்) அரசியல் வெற்றிக்குப் பயன்படுத்தப்பட்டு நிறுவனமயமப்படுத்தப்பட்டு எதை முறியடிக்கச் செய்யப்பட்டதோ அதையே உருவாக்கி அபத்தமாக முடியும். இலக்கியத்தின் பெயரில் விஷ்ணுபுரமும் இலக்கியத்தையே நசுக்குகிறது, வெகுஜன மரபை எதிர்த்துக் கிளைத்த ஒன்று அதன் வடிவத்தையும் நெறிமுறைகளையும் எடுத்துக் கொள்கிறது. இந்த விசயம் ஜெயமோகனின் "ரப்பர்" நாவலின் கருவும்தான். அவர் இன்னொரு கதையும் எழுதியிருக்கிறார் - "டார்த்தனியம்". பார்த்தீனியச் செடியை நினைவுபடுத்தும் உருவகம். அதை வாங்கி வந்து வளர்க்கும் குடும்பம் எப்படி அதனால் ஆக்கிரமிக்கப்பட்டு அழிகிறது என்பதே கதை. வளர்க்க முயலும் ஒன்று நம்மையே வளர்பதும், நம்மையே கட்டுப்படுத்துவதும் அவலம். தான் எதிர்காலத்தில் இச்சூழலில் நடப்போகிற டார்த்தீனிய விதைகளைப் பற்றி முன்-அனுமானித்து அவரே எழுதிவிட்டார். மேதைதான்.
வருங்காலத்தில் எழுத்தும் சிந்தனையும் முழுக்க நிறுவனமயமாக்கப்படும்போது அங்கு மூச்சுத்திணறும் அசலான படைப்பாளிகள் வெளியே சிறு குழுமங்களாக மீண்டும் உருவாகும் நிலை ஏற்படும் எனத் தோன்றுகிறது என்று ஒரு நண்பர் சொன்னார். ஆம், உண்மைதான் - இந்த விளையாட்டை ரசித்து இதில் பங்கேற்றுக் கடந்து போகிறவர்களும் அதிகம் இருப்பார்கள் என்றேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...