Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

உடலுக்காக வாழ்வது


கணையம், கல்லீரல் குறித்தெல்லாம் விவாதம் ஓடுவதால் சொல்கிறேன்: வாயைக் கட்டுப்படுத்துவதும், உடலுக்காகத் தேடித்தேடிச் சாப்பிடுவதும், அதை வலுப்படுத்த உழைப்பதும் ஒரு தனி வேலை. அதற்கு குறுக்குவழியெல்லாம் இல்லை. நல்ல உணவுகளை உண்பதை நம் கலாச்சாரம், சந்தைப் பண்பாடு, சமூகமாக்கல் நடத்தைகள் அனுமதிப்பதில்லை. அதாவது இது குறிப்பாக இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் பிரச்சினை. லத்தீன் அமெரிக்கா போன்ற மூன்றாம் உலக நாடுகளிலும் இப்பிரச்சினை வலுத்து மக்களின் உடல் ஆரோக்கியம் சீர்கெட்டுப் பாதாளத்தில் கிடக்கிறது. ஆனால் பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகளில் நவீன துரித உணவு நுகர்வுக் கலாச்சார சுனாமிக்குள் வந்துவிட்ட மக்களைத் தவிர பிறர் சமச்சீரான உணவையே எடுத்துக் கொள்கிறார்கள். இந்தியாவில் நாம் அப்படிச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. நாம் காலனிய வரலாற்றுக்குள் போனாலே பஞ்சத்திலும் பல்வேறு நோய்த்தொற்றிலும் மக்கள் கொத்துக்கொத்தாக மடிந்த சம்பங்களே கிடைக்கின்றன. அதற்குப் பின்னால் போனாலும் மக்கள் அதிகமாக காய்கறிகளும், புரதமும் எடுத்துக்கொண்டு வாழ்ந்த காலம் ஒன்று உள்ளதா, அது எப்போது எனத் தெரியவில்லை. ஆனால் சிந்து சமவெளி நாகரிகச் சான்றுகள் தொடங்கி, வேதகால, சங்க கால, ஆயுர்வேத, பௌத்தப் பிரதிகளைப் பார்க்கையில் மக்கள்  சீதோஷ்ணத்துக்கும் தாம் வாழும்  மண்ணுக்கும் ஏற்ற சமச்சீரான உணவுகளை உண்டு வந்தார்கள் எனத் தெரிகிறது. நமக்கு சனியன் பிடித்ததே பரங்கிகள் வந்தபோதுதான். அவர்கள் 200 ஆண்டுகள் ஆட்சியில் நம் செல்வத்தை மட்டும் சுரண்டவில்லை, நம் உணவுப் பழக்கத்தையும் மாற்றினார்கள். பணப்பயிர்களை அதிகமாக விளைவிக்க வைத்தார்கள், அதனால் உள்ளூர் பயிர்கள் அழிந்தன. வங்காளப் பஞ்சமே அவர்கள் மக்கள் பயன்பாட்டுக்கான அரிசியை ஏற்றுமதி செய்ததால் ஏற்பட்டதுதானே. ஆனால் பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகள் காலனியவாதிகளாக இருந்ததால் அவர்களுடைய பாரம்பரிய உணவுக் கலாசாரம் அழியவில்லை. ஜப்பானும் பெருமளவு காலனியத்துக்கு உட்படவில்லை. நாம் ஏற்கனவே சோற்றையும் கோதுமையையும் தாம் சார்ந்திருந்தோம், பஞ்சங்கள் காரணமாக நம் மரபணுக்களும் மாறிப்போய் மாவுச்சத்து கொஞ்சம் மிகுந்தால் எடை அதிகமாகும் நிலை ஏற்பட்டது. ஐரோப்பியர்களுடன் ஒப்பிடுகையில் நம் உடலில் தசைகள் குறைவு என்பது ஒரு காலனிய வரலாற்றுத் தொடர்ச்சியாகவே இருக்க வேண்டும் (தசைகள் குறைவான உடலுக்கு குறைவான ஆற்றலும், குறைவான சத்துணவும் போதும்.) நமக்கு நிகழ்ந்த மற்றொரு துரதிஷ்டம் 'பசுமைப் புரட்சி' - அது நம் சிறுதானியங்களையும் உள்ளூர் அரிசி வகைகளையும் அழித்தது.   கொஞ்ச நஞ்சம் இருந்த பன்மையையும் ஒழித்து முழுமையாக மாவுச்சத்து உணவுக்கு அடிமையாக்கியது. அதை முதலாம் கட்ட மறைமுகக் காலனியவாதம் என்று சொல்லலாம். தாராளமயமாக்கல், உலகமயமாக்கலால் சந்தையில் வந்து குவிந்த இனிப்பும் எண்ணெய்யும் மிகுந்த துரித உணவுகளை இரண்டாம் கட்ட மறைமுக காலனியவாதம் எனக் கூறலாம்.

இந்தச் சூழலில் நாம் ஒழுங்காக உணவை எடுத்துக்கொள்ள தாராளமய சந்தைக்கு, மாவுச்சத்தை குறைந்த செலவில் சுவையாக உணவளிக்கும் உணவுக் கடைகளின் மலிவான மார்க்கத்துக்கு, சுவையை அழுத்தத்தில் இருந்து தப்பிக்கும் போதையாகப் பாவிக்கும் பொதுமக்கள் பண்பாட்டுக்கு, பலவிதமான மூடநம்பிக்கைகளுக்கு (பாக்கெட்டில் கிடைப்பன, இனிப்பானவை நல்ல உணவுகள், சர்க்கரை நோய் இல்லாதவர்கள் நிறைய சர்க்கரை சாப்பிடலாம், ஆரோக்கியமானவர்கள் குண்டாக இருப்பார்கள், நோய் வருவதைத் தவிர்க்க முடியாது) எதிராகப் போராட வேண்டும். ஒரு பண்டிகையோ, திருவிழாவோ, கொண்டாட்டமோ, சந்திப்போ இம்மாதிரி சத்தற்ற மோசமான உணவுகளை உண்ணாமல் சமூகமாக்கல் பண்ண முடியாது. முடிந்த அளவுக்கு தினசரி உணவுகளைச் சமச்சீராக வைத்துக்கொண்டு நண்பர்களுடன் உணவருந்தி சமூகமாக்கல் பண்ண பெரிதாக முயற்சி எடுக்க வேண்டும். காய்கறிகளும் புரதச்சத்து உணவுகளும் விலை அதிகம். நீங்கள் வீட்டில் சமைக்காதவர் என்றால் குப்பையைத் தான் தின்ன முடியும். நான் வீட்டில் உணவு சமைக்காத நாட்களில் என் கல்லூரி வளாகத்தில் முட்டையைத் தவிர வேறொன்றையும் தின்ன முடியாது. அதுவும் அம்முட்டையையும் ஒரே ஒரு கடையில்தான் வைத்திருப்பார்கள். கீட்டோ உணவு எடுத்துக்கொள்வோரு எதிராக 18,000 பேர்கள் இணைந்து நிற்பதாக எனக்கு அப்போது தோன்றும். ஏன் எனக்கு உள்ள கவலை இத்தனை ஆயிரம் பேர்களுக்கு இல்லை என ஆச்சரியம் ஏற்படும். நல்ல உணவு உண்டால் பல்வேறு நோய்கள், வலிகள், மனச்சோர்வு, அழுத்தம் ஏற்படாமல், பிறக்கப் போகும் குழந்தைக்கு மனநல வளர்ச்சியின்மை நோய் ஏற்படாமல் தவிர்க்கலாமே, அதற்காகச் செய்தாலே எவ்வளவு ஆற்றலும் பணமும் மீதமாகும் என யோசிப்பேன். ஆனால் யாருக்கும் அவகாசமோ ஆற்றலோ இல்லை. ஒரு சமூகமாகவே நாம் இன்னும் காலனிய பிரஜை மனநிலையில் இருந்து மீளவில்லை. நம் பண்பாடும் அரசியலும் கூட அதைத் தாண்டி வரவில்லை. நமது பொருளாதார வளர்ச்சி கூட நம் மக்கள் ஆரோக்கியமாக இருப்பது அடிப்படை உரிமை எனக் கருதும் நிலைக்குத் தள்ளவில்லை. பஞ்சம் வந்துவிடுமோ எனும் அச்சம் நம் மனதுக்குள், அரசின் மூளைக்குள் எங்கோ பதுங்கி இருக்கிறது.  

குடித்து அழிவதை விட நம் மக்கள் மோசமாக உண்டு அழிவதே இன்றுப் பரவலாக உள்ளது

இதையெல்லாம் சொல்ல எனக்கு ஒரு தகுதி உள்ளது - நான் 25 ஆண்டுகளாக நீரிழிவு நோயாளி. எனக்கு இதுவரையில் கண், சிறுநீரகம், தீராப் பசி, ஆற்றலின்மை, ஆறாத காயத்தால் உடல் உறுப்பு துண்டிப்பு என எப்பிரச்சினைகளும் ஏற்பட்டதில்லை. கடந்த மூன்று ஆண்டுகளக எனக்கு சளி கூட வருவதில்லை. என்னைச் சுற்றி நீரிழிவே இல்லாத, பார்க்க பார்க்க ஒல்லியாக உள்ளவர்களுக்கு வரும் நோய்களைப் பார்த்தால் எனக்கு வியப்பாக உள்ளது. அவர்கள் இவ்வியாதிகளைத் தம் விதியென்று ஏற்றுக் கொள்வதைப் பார்த்தால் இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கும் அவர்களுக்கும் ஒரே முக்கிய வித்தியாசம் தான் - நான் வாயைச் சுலபமாகக் கட்டுப்படுத்துகிறேன், வாரத்திற்கு மூன்று நாட்களாவது விரதம் இருக்கிறேன், நல்ல உணவுகளைத் தேடித்தேடி உண்கிறேன். இளவயதிலேயே நீரிழிவு வந்ததால்தான் நான் சுயமுயற்சியில் இதையெல்லாம் பரிசோதனைச் செய்து பார்த்துக் கற்றுக்கொண்டேன். நீரிழிவு அதனால் ஒரு வரமாக அமைந்துவிட்டது. எனக்கு 40-50 வயதுக்கு மேல் நீரிழிவு வந்திருந்தால் அதற்குப் பழகுவது கடினமாக இருந்திருக்கும் - என் உடல் நிலையும் அதற்கு முன் மோசமாக வீழ்ந்திருக்கும். எனக்கு என் நோயின் நிலையை, அறிவியலைப் புரிந்துகொள்ளவே பத்தாண்டுகளுக்குமேல் பிடித்தது. ஆனால் புரிந்துகொண்ட பின்னர் நான் உணவுதான் மருந்து எனக் கண்டுபிடித்தேன். நீரிவு நோய் அல்ல, அது ஒரு அறிகுறி எனப் புரிந்துகொண்டேன். மருத்துவர்களல் நம்மைக் காப்பாற்ற முடியாது (அவர்கள் மருந்து கம்பனிகளின் மறைமுக முகவர்கள் என்பதால்) எனத் தெரிந்துகொண்டேன்.

உடல் என்பது நான் அல்ல, பல கோடி அணுக்களின், குடல் நுண்ணுயிர்களின் கூட்டமைவு. உடல் என்பது ஒரு ஒப்பந்தம். ஒவ்வொரு அணுவும் எனக்காகப் பணியாற்றும்போது நாம் அவற்றுக்காகவும் வேலை செய்வேன். இவ்வுடல் அவ்விதத்தில் ஒரு சிறு வனமும்தான். ஒவ்வொரு உயிரும் அங்கு முக்கிய பங்காற்றும். சூழலை நாம் கெடுத்தால் அந்த உயிரினங்கள் அழிந்து சமநிலைக் குலைந்து வனமே அழிவதைப் போலத்தான் நமக்கு நோய்கள் வந்து உடல் அழிகிறது. உடல் அழிவதானது அணுக்களும் நுண்ணுயிர்களும் கடுமையான் அழுத்தத்துக்கு உள்ளாகி துன்புற்று தம்மை அழிப்பதாகும். அவற்றுக்காக உழைக்கவும் முயற்சி செய்யவும் நான் போராடுவதே இவ்வாழ்க்கை. சமூகத்துக்காகவும் பிறருக்காகவும் இலக்கியத்துக்காகவும் தியாகம் செய்வது இரண்டாம் பட்சமே. ஏனென்றால் அவர்களும் எனக்காக வாழவில்லை. - தம்மை உருவாக்கியுள்ள எண்ணற்ற அணுக்களுக்காகவும் நுண்ணுயிர்களுக்காகவுமே வாழ்கிறார்கள். நாம் இரண்டு கால்கள் முளைத்த பல நூறு கோடி குட்டி வனங்கள். நமக்கு வெளியே உள்ள பல்வேறு உயிரினங்களும் கூட அப்படியே வாழ்கின்றன.  

கணையமும் கல்லீரலும் கூட நமக்கு அந்நியமான தனி உயிர்களே. அவை நமக்காகப் பணியாற்றுவதும் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையிலே - அவற்றை நாம் துன்புறுத்தினால் நீயும் வேண்டாம் ஒரு புண்ணாக்கும் வேண்டாம் என அவை தற்கொலை பண்ணிக்கொள்ளும் (apoptosis). நாம் ஒரு உடலுடன் பிறந்திருக்கிறோம், உடல் நமக்கான கருவி என்று நினைப்பது ஒரு அபத்தம் - நாம் எண்ணற்ற உயிர்களின் ஒருங்கிணைப்பாளர்கள், பேரணி நிர்வாகிகள், தொழிற்சாலை மேலாளர்கள் என்று சொல்லலாம். உணவுக்காக அவை நம்மைச் சார்ந்துள்ளன. சரியாக உணவளிக்காவிடில் அவை தர்கொலை பண்ணவோ அழிந்து வீணாகவோ கூடும். நாம் நமக்காக, நம் இன்பத்துக்காக வாழவில்லை - நம் பிரக்ஞையும் இன்பங்களும் கூட நுண்ணுயிர்களும் அணுக்களும் சேர்ந்து ஏற்படுத்தும் தோற்றங்களே. 'நாம்' ஒன்றுமே இல்லை, மனித நிலை, மனித உயிர் என ஒன்றுமில்லை. அணுக்களும் நுண்ணுயிர்களுமே நம் கடவுள் என ஏற்றுக்கொண்டாலே பல பிரச்சினைகள் சரியாகிவிடும்.


Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...