முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பைக்: நனவுவெளிக் குறிப்புகள் (எ)

 

15) என் வாழ்க்கையின் ஆகக்கொடுமையான அனுபவங்களில் ஒன்று எனச் சொல்ல மாட்டேன் என்றாலும் அந்த இருட்டில் வண்டியோட்டியது கிலியான அனுபவம்தான். சுந்தர் சியின் பேய்ப்படங்களைப் போல என் பீதியைக் காண எனக்கே சிரிப்பாகவும் வந்தது. அங்கங்கே கடைகளும் குடியிருப்பும் வருமிடங்களில் விளக்குகள் ஒளிரும். மீண்டும் கடும் இருட்டு. என்னதான் சாலையின் ஒரு பக்கமாய் அமைக்கப்பட்டிருந்த பிரதிபலிக்கும் அம்பு முனைக் குறியீடுகள் வண்டியை வயலுக்குள்ளோ பாறைகளிலோ பாய்ச்சாமல் தப்பிக்க உதவினாலும் சில இடங்களில் எங்கே சாலை வளைகிறது, எங்கிருந்து வாகனங்கள் வருகின்றன என கணிக்க வேண்டியிருந்தது. பெங்களூர் வந்து பிரதான சாலையை அடையும்வரை ஏதோ முதலிரவில் விளக்கணைத்து நடக்கும் வன்முறை போலத்தான் வண்டியோட்டினேன்


16) அவெஞ்சரில் ஒரு வினோதப் பிரச்சினை - ஷோரூமில் தந்த சாவி அடிக்கடி வளைந்தது. மாற்றுச் சாவியைச் செய்தால் அதுவும் வளைந்தது. ஒருவேளை பிரச்சினை என்னிடம்தான் இருக்க வேண்டும். ஆனாலும் சாவி எப்படி வளையலாம், பஜாஜ் கம்பெனியே நம்மை ஏமாற்றுகிறது, வழக்குத் தொடுக்க வேண்டும், சட்டையைப் பிடித்துக் கேட்க வேண்டும் என டொனால்ட் டிரம்பைப் போல பல்லவி கொதித்துக் கொண்டிருந்தாள். போல்ட் லூசாக இருந்ததும் அவளைத் தூண்டிவிட்டது. வண்டி ஒழுங்காக ஓடினால் போதும் என்பது, சாவி என் தவறாகவும் இருக்கலாம் என் நிலைப்பாடு. ஷோரூமில் இருந்து வண்டியை எடுக்கும்போது சில நேரங்களில் சின்னச்சின்ன பிரச்சினைகள் வருமென்பதும் என் அனுபவம். ஆனாலும் அவள் சொன்னதில் ஒரு விசயத்தை ஒப்புக்கொண்டேன் - சுமோ மல்யுத்த வீரனைப் போல ஒரு பைக்கைக் கொடுத்துவிட்டு அதன் பிரதானமான உறுப்பை மட்டும் இவ்வளவு சின்னதாக, மெல்லியதாக, வளையக் கூடியதாக கொடுத்திருக்கக் கூடாது. அதன் வடிவத்தாலும் கனத்தாலும் வண்டியை அசைப்பதும், திருப்புவதும் கடினமாக இருக்கலாம், ஆனால் நீங்கள் அதை இயக்குவதையும், லாக் செய்வதையும் முத்தம் கொடுப்பதைப் போல வலிக்காமல் பண்ண வேண்டியது என பஜாஜ் நிறுவனம் சொல்லக் கூடும். “கன்னிப் பொண்ணா நினைச்சு காரைத் தொடணும்என்று வாலி சொன்னது காருக்கு மட்டுமல்ல பைக்குக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். முதல் சர்வீஸுக்கு விடும்போது இப்பிரச்சினைகளைக் குறிப்பிட்டேன். சர்வீஸ் பொறுப்பாளர் இதெல்லாம் பிரச்சினையே இல்லையென்பதைப் போல ஒரு அட்டைக் காகிதத்தில் குறித்துக்கொண்டார். முதல் சர்வீஸுக்குப் பின்பு வண்டி இன்னும் சுமூகமாக, வெண்ணெய் போல ஓடும் என்கிறார்கள். மைலேஜும் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். பார்ப்போம்.


17) சர்வீஸுக்குப் பின் வண்டியின் பிக் அப்பும், வேகமும் நன்றாகவே உள்ளன. ஆனால் பூட்டு மட்டும் அதிமுக தலைவர்களின் தலையை வருடிக் கொடுக்கும் மோடியைப் போல உள்ளது. ஒருநாள் திறக்கிறது, இன்னொரு நாள் அசைய மறுக்கிறது. சர்வீஸ் செண்டரில் கேட்டாலும் புதுசு அப்படித்தான், போகப்போக பழகிரும் என்கிறார்கள். நேற்று ஒரு ஆட்டோக்காரரிடம் இதைப் பற்றிப் பேசினேன்: அவர் தன் வண்டிச் சாவியைக் காட்டி இப்போது வரும் வாகனங்களின் சாவிகள் பலவீனமாக உள்ளதாகவும், அதற்கு கம்பெனிக்காரர்கள் கொண்டு வந்துள்ள தொழில்நுட்ப மாற்றங்களே காரணம் என்றார். அவெஞ்சரின் சாவிப் பிரச்சினையைப் பற்றி யுடியூபில் காணொளிகளும் உள்ளன. நம் ஆட்கள் என்ன சீர்திருத்தம், மாற்றம் கொண்டு வந்தாலும் அது புதுப் பிரச்சினைகளையும் கைப்பிடித்து அழைத்து வருகிறது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...