Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

"நிழல் பொம்மை" - புலப்படாத ஒரு DYSTOPIAN உலகம் - இர.மௌலிதரன்

 

pastedGraphic.png

காலம் கடந்து செல்லும்பொழுது அதன் மாற்றங்களுடன் சேர்ந்து மனிதர்களின் புரிதல்களும், உணர்வுகளும், உணர்ச்சி வெளிப்பாடும் தொடர்ந்து மாறிக்கொண்டே வருகின்றன. அதனுடன் இந்த சமூகமும் மாற்றம் கொள்கிறது . மனிதனால் கட்டமைக்கப்பட்டதுதான் இந்த சமூகம் என்றாலும், அது தன்னிச்சையாக சில மாற்றங்களைத் தனக்குள் மேற்கொண்டு மனிதர்கள் மேலும் அவர்களின் மாற்றங்கள் மேலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவருகிறது. இதனை உற்று நோக்கும் கடமை எந்த நாட்டின் இலக்கியத்திற்கும் உண்டு. இந்த மாற்றத்தை இலக்கியம் தன்னுடைய வடிவத்தின் வழியாக மட்டுமின்றி கருத்தியல் ரீதியாகவும் தனக்குள் புகுத்திக்கொள்ளும் கடமை உண்டு. இதில் பல்வேறு நாடுகளின், மொழிகளின் பண்பாட்டு பரிமாற்றமும், சமூக நடைமுறைகளின் பரிமாற்றமும், மனிதர்களின் உணர்வுகளின் பரிமாற்றமும் நிகழும் வழிகளாக கலையும் இலக்கியம் மட்டுமே திகழ்கின்றன. இலக்கியம் தன்னுடைய சிறந்த படைப்புகளின் வழி இப்பரிமாற்றம் நிகழ வழிவகுக்கிறது. நவீன தமிழ் இலக்கியத்தில் வடிவ ரீதியாகவோ, கருத்தியல் ரீதியாகவோ  நிகழும் மாற்றங்களுக்கு  உலக இலக்கியங்களின் பங்களிப்பு அலாதியானது. நவீன தமிழ் இலக்கிய படைப்பாளிகள் இந்த மாற்றத்திற்கு தங்களை உட்படுத்தி தங்களுடைய படைப்பை மெருகேற்றுவது தமிழ் இலக்கிய உலகை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல உதவுகிறது. தன்நிழல் பொம்மை” (2025) நாவலில் ஆர். அபிலாஷ் சமகாலத்தின் நவ நாகரிக  உலகின் மக்களின் வாழ்க்கையை ஒரு சரடாக வைத்து அதன் மீது தன் புனைவுலகை வடிவமைத்துள்ளார் .

pastedGraphic_1.pngpastedGraphic_2.png

காப்காவின்விசாரணை” (1925) நாவலின் உலகம் இங்கு ஒரு களமாக இடம்பெற்றாலும், இந்நாவலின் ஒட்டு மொத்த உலகம் அதுவல்ல. “விசாரணைநாவலின் கதைமாந்தரான கே-விற்கும்நிழல் பொம்மையின்ரகுவிற்கும் பல வேற்றுமைகள் இருந்தாலும் இருவரும் ஒரே விதமான அலைக்கழிப்புகளுக்கும், குழப்பங்களுக்கும், தனிமையின் இரைச்சல்களுக்கும் உட்படுத்தப்படுகின்றனர் . தொடர்ந்து அவர்கள் இருளுக்குள்ளும் - ஒளிக்கீற்றுக்குள்ளும் மாறி மாறி தள்ளப்பட்டும் - இழுக்கப்பட்டும் தத்தளிக்கின்றனர். ஏனோ அவர்கள் இருவருக்கும் இருள் பிடித்துவிடுகிறது - தம்  மீது அதிகாரம் செலுத்த அனுமதிக்கின்றனர் - எங்கோ ஒரு மூலையில்  ஒடுக்கி ஒளிந்துகொள்ள நினைக்கின்றனர். எங்கு இவர்கள் மாறுபடுகின்றனர்? கே-விற்கு தான் செய்த தவறு என்னவென்று தெரியாமலேயே அலைக்கழிக்கப்படுகிறான். ஆனால், ரகுவிற்கு தான் செய்த தவறு என்னவென்று தெரியும், அதன் விளைவுகளும் தெரியும், இருந்தும் அவர் தன்னுடைய இருப்பைப் பெரும்பான்மை சாதாரண மக்களின் மத்தியில் நிலைநாட்ட பெண்களை ஒரு கருவியாகிக் கொண்டு செயல்படுத்தத் தொடங்கி இந்த இருள் சுழலுக்குள் சிக்கிக்கொண்டு அதன் பின் அதே பெண்களின் துணைகொண்டு மீட்டெடுக்கப்பட்டு தன்னுடைய குற்றவுணர்ச்சிக்குள் தள்ளப்பட்டு இறுதியில் பௌத்தத்திடம் தஞ்சம் புகுந்து விடுகிறார் . இந்த முடிவு இப்படைப்பை நமக்கு நெருக்கமாக்குகிறது .

pastedGraphic_3.png

நிழல் பொம்மையின்உலகைப் பின்தொடர்வதற்கோ, அது பிடிபடுவதற்கோ ஒரு வாசகனுக்கு சற்று கடினமாக இருந்தாலும், அந்த உலகம் பிடிகொடுத்த பிறகு மொத்த உலகமும் நம் கண்முன்னே விரியத்தொடங்குகிறது. ஒவ்வொருவருக்கும் ஒருவிதமாக இந்த உலகம் விரியலாம். எனக்குச் சற்று வித்தியாசமாக ஒரு இறுக்கத்தை, ஒவ்வாமையை கொடுக்கும் உலகமாக தோன்றத்தோன்ற இது ஒரு dystopian உலகமாக விரியத் தொடங்கியது. இந்தப் பின்னனியில் நான் நாவலைத் தொடர்ந்து வாசிக்கும்பொழுது அனைத்தும் ஒரே நேர்கோட்டில் வந்து சேர்ந்தன. Dystopian உலகத்தின் அனைத்து விதிகளையும் மிகச்சரியாகநிழல் பொம்மையின்இந்த உலகம் பின்பற்றுகிறது. முதல் விதி - அடக்குமுறை - சர்வாதிகாரம். எந்த அளவிற்கு என்றால் அரசியல்-சமூகk கட்டமைப்பு தொடங்கி  தனி மனித  எண்ணங்கள் வரைத் தன்னுடைய அதிகாரத்தின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது ( லோகோஸ்).

இரண்டாவது விதி - தனிமனிதன் தன்னுடைய சுயத்தை இழந்து அதிகாரத்தின் சாட்டைக்கு நடைபோட தொடங்கும் ஒரு மந்தை மாந்தர் கூட்டமாக மாறுவது. இந்த சாராம்சம் இந்நாவலின் உலகில் வெகு நேர்த்தியாக அதே நேரத்தில் புதுவிதமாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அதன் ஊழியர்களுக்கு அறிவுசார்ந்த போதனைகள் வழங்கி அவர்கள் எவ்வாறு ஒரு அதிமனிதனாக உயர வேண்டும் என்ற மாயையை அவர்கள் முன் உருவாக்கி அதன் பிடியிலே தொடர்ந்து அவர்களை அறிவிழந்து ஒரு ஆட்டுமந்தைக் கூட்டமாக ஒற்றை நோக்குடன் ஓடவைப்பதின் வழி அவர்களைத் தங்களுடைய சுயத்தை இழக்க வைக்கிறது லோகோஸ் .

மூன்றாவது விதி - தொழில்நுட்பங்கள் மனிதர்களை வெறுமனே கட்டுப்படுத்துவதில்லை அடிமையாக்குகின்றன. இங்கு ஸ்வாமிஜி என்ற செயலி மூலம் அந்த மொத்த லோகோஸ் உலகமும் கண்காணிக்கப்படுகிறது. அவர்களின் செயல்கள், பேச்சுகளோடு அது நிற்காமல் செயற்கை நுண்ணறிவின் துணையோடு அவர்களின் எண்ணங்களையும் கண்காணிக்கிறது.  அவர்கள் எக்காரணம் கொண்டும் சர்வாதிகாரத்தின் பிடியில் இருந்து நழுவ விடாமல் பார்த்துக்கொள்கிறது. ஒரு கட்டத்தில் அந்தச் செயற்கை நுண்ணறிவே தன்னிச்சையாகச் செயல்பட்டு தானே சில முடிவுகளை எடுப்பதாகவும் கூறப்படுவது அந்தச் செயலியின் கதாபாத்திர இயல்போடு மிகவும் பொருந்தியுள்ளது.

நான்காவது விதி - பயம் - நம்பிக்கையின்மை - விரக்தி. லோகோஸில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களும், மாணவர்களும் தங்களுடைய நிலையைத் தக்க வைக்க எவ்வளவு போராடியும் தொடர்ந்து ஒருவித பதற்றமான மனநிலையே அவர்களுக்குள் தொடர்கிறது. லோகோஸ் அவர்களுக்குத் தொடர்ந்து ஓட்டமும் - புது புது இலக்குகளும் - தெளிவில்லாத பாதைகளும் கொடுத்து ஒருவித நிலையற்ற மனநிலையில் அவர்களை வைத்து அந்தரத்தில் ஊசலாட வைத்த வண்ணம் உள்ளது. இந்த நிலை ஒரு சர்வாதிகாரத்தின் அடக்குமுறைகளைச் செயல்படுத்த ஏதுவான ஒரு நிலை என்பதால் அது தடைபட்டுவிடாமல் பார்த்துக்கொள்கிறது அந்த உலகம் .

pastedGraphic_4.png

காப்காவின் உலகத்திற்குள் ரகு உலாவுவது போல வெளித்தோற்றத்திற்கு தோன்றினாலும் - சற்று உற்று கவனித்தோமேயானால் ரகு காப்காவாகவே உலாவருகிறார் அபிலாஷின் இந்த dystophian உலகத்திற்குள். காப்காவின்உருமாற்றம்கதையின் நாயகன் கிரெகெர் சாம்ஸாவைப் போல இங்கு ரகு குள்ளனாக இருக்கிறார். காப்காவின் அந்த இருண்ட வாழ்வின் ஆதிபுள்ளியாக இருக்கும் அவரது தந்தையைப் போல இங்கு ரகுவின் தந்தையும் அவரை வெறுத்து ஒதுக்குகிறார். இருவரும் அன்னையால் வளர்க்கப்பட்டவர்கள். பெண்களை நேசிக்க விருப்பப்பட்டு நேசிக்கத் தெரியாமல் போனவர்கள் . நீதிக்காக காத்திருந்து அந்த காத்திருப்பினால் காவுவாங்கப்பட்டவர்கள். நீதியைக் கடந்து தண்டனையை நோக்கி ஈர்க்கப்படுகின்றவர்கள். இருளுக்குள் பழகி தற்காலிக ஒளியினால் ஏமாற்றப்பட்டு மீண்டும் மீண்டும் இருளுக்குள் தள்ளப்பட்டு இருள்தான் உண்மை என்ற பெரும் தத்துவத்தை உணர்ந்தவர்கள். அவர்கள் தங்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் நிஜமா நிழலா என்ற குழப்பத்திலிருந்து தப்பிக்க பல வழிகளைத் தேடுகின்றனர்; சாக்ரடீஸ் - பிளாடோவின் குகை கைதிகளின் நிழல் பொம்மைகளிடம் அதற்கான விடையைத் தேடுகின்றனர்; பெண்களின் ஆதிக்கத்தில், அணைப்பில், மனதில் விடையைத் தேடுகின்றனர்; மரணத்திடமும் ஒரு கட்டத்தில் விடை தேட எத்தனிக்கும் தருணத்தில் காப்கா ரகுவை விட்டு விலகிச்சென்று மரணத்திடம் தஞ்சம் புகுந்துகொள்கிறார். ரகுவோ அந்த மரணத்தாலும் ஏமாற்றப்பட்டு தனிமையின் சிறையில் சிக்கி இறுதியில் பௌத்தத்தின் நிழலில் தன்னுடைய உண்மையான உயரத்தை உணர்கிறார்.

pastedGraphic_5.png

சுருங்கச் சொல்வதானால் அபிலாஷ் உருவாக்கிய சமகாலத்தை ஒட்டிய ஒரு dystopian உலகில் காப்காவை ரகுவின் உருவத்தில் ஒரு பொம்மையாக வைத்து விளையாடும் ஒரு நிழல் விளையாட்டுதான் இந்த நிழல் பொம்மை .

பெண்கள் இந்தப் புத்தகத்திற்கு எப்படி எதிர்வினையாற்றப் போகிறார்கள் என்பது என்னுடைய மிகப்பெரிய எதிர்பார்ப்பு. முழுக்க ஒரு ஆணின் மனக்கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட ஒரு புனைவு  இது. அதிலும் முற்றிலும் ரகுவின் பார்வையில் மட்டுமே கதை நகர்கிறது. அதனால்தானோ என்னவோ மாதா ராதாவையோ, ஜனனியையோ, மார்த்தாவையோ, சஹிதாவையோ நம்மால் புறிந்துகொள்ள முடியாதபடி அவர்கள் இருளுக்குள் இருக்கின்றனர். ஒரு பிரதான கதாபாத்திரத்தின் சிந்தனையை - எண்ண ஓட்டங்களை - மனசாட்சியின் வெளிப்பாட்டை இத்தனை வெளிப்படையாக கூறிய படைப்பு அரிதானது. ரகு வாசகர்கள் மத்தியில் ஒரு கலவையான விமர்சனத்திற்கு உள்ளாவான்அதுவே இப்படைப்பின் வெற்றி என்று நான் கருதுகிறேன். ரகுவை ஒரு உயிருள்ள மனிதன் என்பதைத் தாண்டி நவநாகரிக நகரத்தின் பெரும்பான்மையான மனிதர்களின் ஆழ்மனதின் வெளிப்பாடாகத்தான் நான் பார்க்கிறேன், அதன் அளவு வேண்டுமென்றால் கூடி குறையலாம், ஆனால் இது முற்றிலுமாக மறுக்க முடியாத ஒன்று .

இக்கதையில் எனக்கு மிகவும் பிடித்த இடம் ரகுசஞ்சய் சந்திப்பு. ரகுவும் சஞ்சய்யும் முதல் இரண்டு முறைகள் சந்திக்கும்போதும் வேறுவேறு மனநிலையில் இருக்கின்றனர். முதல் சந்திப்பின்போது இருவரின் குரூரம் வெளிப்பட்டாலும், இருவருக்குள்ளும் அதற்கான காரணம் இருப்பினும், இருவரும் பரஸ்பரம் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. அதுவே கதையின் முடிவில் இருவரும் தங்கள் வினைகளின் காரணங்களை கண்கூடப் பார்த்துப் புரிந்துகொள்ளும் தருணம் இருவருமே மன்னிப்பின் கரங்களின் வழி பேரன்பின் தொடுதலை உணர்ந்துவிடுகின்றனர், அதோடு தங்களுடைய குற்றவுணர்விலிருந்து விடுதலையயும் அடைகின்றனர். சஞ்சய்யின் தம்பியின் நிலையைப் பார்த்த ரகு விற்கு அதுவரைப் பாரமாக இருந்த அவன் உடல் இலகுவாகிட அவன் சாதாரணமாகிறான் . சாதாரணம் பெரும் கனவாக இருக்கும் ரகுவிற்கு அது ஒரு தற்காலிக இளைப்பாறலாக இருக்கலாம்.

உண்மையைச் சற்று மிகையுடனும், மீறலுடனும் கூறும்பொழுது ஒரு சிறந்த புனைவுலகம் உருவாகிறது. அந்த வகையில்நிழல் பொம்மைஒரு அடர்த்தியான, விவாதத்திற்கு ஏற்ற கருத்தியல் பின்னணியில் நிகழ்காலத்துடன் நெருக்கமான, ஆழமான சிந்தனைகளுடன், பல சிறந்த தத்துவ கோட்பாடுகளின் நடுவே ஒரு அசாதாரண மனிதனின் வாழ்வின் கனவான சாதாரணத்தை நோக்கி நகரும் அகம் சார்ந்த ஒரு வாழ்வியல் பயணத்தை சுற்றி உருவாக்கிய ஒரு மாறுபட்ட புனைவுலகம்.


நிழல் பொம்மை

நாவல்

எழுத்து பிரசுரம்

450 பக்கங்கள்


Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...