முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரிங்கு சிங் - வளையத்துக்குள் குதிக்க வேண்டிய சர்க்கஸ் சிங்கம்


 

இன்றைய இந்தியா-பாக் டி20 உலகக்கோப்பைப் போட்டியில் ரிங்கு சிங் ஆட மாட்டார் என்கிறார்கள். அவரிடத்தில் ஒரு சுழலர் ஆடக் கூடும். அதாவது வாஷிங்க்டன். அல்லது அர்ஷதீப்பின் இடத்தில் அச்சுழலர் ஆடலாம். ஆனால் ரிங்குவின் இடத்தில் சஞ்சு ஆடலாம். ஒருவேளை அவரை ஆட வைத்தாலும் அவரது இடம் வரும் போட்டிகளில் நிச்சயம் இல்லை.

ரிங்கு சிங் இந்தியாவின் மிகச்சிறந்த டி20 செயல்-தீர்வாளர் (finisher). முதலில் ஆடும்போது நிதானமாக ஆட்டத்தை கடைசி ஓவர் வரை கொண்டு போய் சாவு ஊர்வலத்தில் பட்டாசுவெடிப்பவரைப் போல அதகளம் செய்பவர். அவரால் சில நெருக்கடியான போட்டிகளில் இலக்கை விரட்டிச் செல்கையிலும் இதைச் செய்ய முடியும். இந்திய அணியில் இதற்கான மற்றொரு வீரர் இல்லை. ஹர்த்திக்கின் அதிரடியெல்லாம் 17வது ஓவர் வரைக்கும்தான். துவக்க வீரர்களும் இதற்கும் விடைபெறுவர். நமது ஆல்ரவுண்டர்களால் தனியாக ஆடி வெல்ல முடியாது - நீயா நானா கோபி நாத் போல இப்படின்னா இப்படியும் போலாம், அப்படீன்னா அப்படியும் போலாம் எனத்தான் அவர்களால் ஆட முடியும். அதனாலே ரிங்கு தவிர்க்க முடியாத ஒரு வீரர். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.
1) ஐ.பி.எல்லில் கூட செயல்-தீர்வாளர்களுக்கென ஒரு இடம் இப்போதெல்லாம் இருப்பதில்லை. சர்வதேச டி20 போட்டிகளிலும் இந்தியா ஆட்டத்தை இந்த தீர்வாளர்கள் வருமுன்னே முடிக்கலாம் என நினைக்கிறார்கள். அதாவது - தட்டையான ஆடுதளங்களில் -டி20 ஒரு 15 ஓவர் ஆட்டமாக நம் கண்ணுக்கே தெரியாமல் மாறிவருகிறது.
2) மாற்றுவீரர் விதிமுறை (impact player rule) காரணமாக நிபுணர்களின் இடம் காணாமல் போகிறது. நீங்கள் ஒரு வீச்சாளரின் இடத்தில் ஒரு மட்டையாளரை உபரியாக ஆடினால் தீர்வாளர்கள் ஆடும் ஓவர்கள் குறைந்து போகும். இதுவும் அவரது ஐ.பி.எல் தாக்கத்தைக் குறைத்தது.
3) கடைசியாக ரிங்குவின் பலவீனமான சுழல். அவருடைய ஆட்டம் பந்தின் வேகத்தைப் பயன்படுத்தி அதிக தூரம் அடிப்பதுதான். குறிப்பாக முன்ங்காலில் விழும் வேகப்பந்தை அவரால் சமநிலை குலையாமல் சிக்ஸர் அடிக்க முடியும். பின்னங்காலுக்குப் போய் வெட்டவும் முடியும். களத்தடுப்பில் உள்ள வெற்றிடங்களை இலக்காக்கி எதிர்பாராத ஷாட்களை ஆட முடியும். ஆனால் அவரால் சுழல் பந்தின் பாதையை சரியாக வாசித்து காலாட்டத்தைக் கொண்டு அதை மட்டுப்படுத்தி வலுவாக சிக்ஸர் அடிக்க முடியாது. இதனால் அவரது ஓட்டமெடுக்கும் வேகம் குறைந்து போகிறது. மெத்தனமான ஆடுதளங்களில் ரிங்கு கடற்கரை மணலில் சிக்கிய சக்கரநாற்காலியைப் போலாகிறார்.
ரிங்கு ஒருநாள் போட்டிகளில் கூட ஆட வேண்டியவர்தான். ஆனால் அதற்கு அவர் டி20யில் தன் இடத்தை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு அவர் ஒரு திறனில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது. அவர் ஒரு நல்ல சுழலரிடம் போய் ஆப் ஸ்பின், லெக் ஸ்பின், காரம் பந்து எல்லாம் வீசப் பயில வேண்டும். தன் புதிர் சுழலை ஐ.பி.எல்லில் முயல வேண்டும். அப்படி அவரால் இந்திய அணிக்குள் வந்து இரண்டாவது அல்லது மூன்றாவது சுழலராக முடியும். குறிப்பாக அக்ஸர் ஆட முடியாதபோது.
அல்லாவிடில் சுழலுக்கு எதிரான ஆட்டத்தை வலுப்படுத்தி 4வது எண்ணில் இறங்கி ஆடி சதங்கள், அரைசதங்கள் குவிக்க வேண்டும். ஆனால் அதைவிட மேலே சொன்னது எளிது.
ரிங்கு தன் ஆட்டவாழ்வின் மிக நெருக்கடியான கட்டத்தில் இருக்கிறார் எனத் தோன்றுகிறது - நன்றாக ஆடினால்கூட அவரால் தன்னிடத்தை துண்டு போட்டு வைக்க முடியாது. சமகாலத்தின் நகைமுரண்களில் ஒன்று இது. நன்றாகப் பாடுகிறவர்களால் பாடகர் ஆக முடிவதில்லை, சமையல் நிபுணர்களால் சமைக்க முடிவதில்லை, ஆண்களால் ஆண்மையுடன் இருக்க முடிவதில்லை, எழுத்தாளர்களால் எழுத முடிவதில்லை - அந்த இடத்தை எல்லாம் கோமாளிகள் எடுத்துக் கொள்கிறார்கள். வேறு வழியில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...