முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நவீன கவிதை வாசிப்பு - பயிலரங்குக் குறிப்பு 1

 


இன்றைய கவிதை வாசிப்புக்கான இணையவழிப் பயிலரங்கிற்கு வருவோர் அதில் இணையும் முன்பு இதை ஒருமுறைப் படித்து விடவும். அப்போதே உங்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கும்:

நமது இப்போதைய கவிதை வாசிப்பு முறைமை உரையெழுதுவதில் இருந்து தோன்றியிருக்க வேண்டும். தொல்காப்பியம், சங்க இலக்கியத்தை நோக்குங்கால் நாம் இன்னும் ஆழமான, சுதந்திரமான வாசிப்புக்கு பழகியவர்களாக முன்பு இருந்திருந்தாலும் நவீன காலத்துக்கு வந்து நவீன கல்வியைப் பழகும் வேளையில் நாம் மனனம் செய்வதை பிரதானப்படுத்தத் தொடங்கி இருந்தோம். செய்யுள்களை மனனம் செய்வது, உரையாசிரியர்களின் விளக்கங்களை அப்படியே ஏற்றுக் கொள்வது என. பல்வேறு பின்னணிகளின் பொருளில் விதவிதமாக அர்த்தப்படுத்தும் சுதந்திரத்தைக் கூட இத்தகைய வாசிப்பு நமக்கு வழங்கவில்லை. கல்விப் புலத்துக்கு வெளியில் இதழ்களிலும் இலக்கியக் கூட்டங்களிலும் நாம் ரசனை சார்ந்த ஒரு வாசிப்பு முறைமையைப் பழகிக் கொண்டோம். இது வெகுஜன ஊடகத்துக்கும் ஏற்புடையதாக இருந்தது. இதன் நோக்கம் ஒரு படைப்பை அதன் உணர்வு சார்ந்த, மிகையான பகுதிகளை மட்டுமே பிரதானப்படுத்தி வாசிப்பது, வாசிப்பின் முடிவில் மானுடவாத விழுமியங்களான மனிதனின் மேன்மை, விடாமுயற்சி, உழைப்பு, தியாகம், அன்பு ஆகியவற்றின் வெற்றியைப் பிரகடனப்படுத்துதல், அரசியல் களத்தில் சமத்துவம், நீதிக்கான அறைகூவுவது என இருந்தது. அடுத்து, இதன் இன்னொரு கிளையாக கற்பனாவாத, இயற்கை வழிபாட்டு வாசிப்பும் நம்மிடையே வலுவாக இருந்தது. மானுடவாதம், இயற்கை வழிபாடு / கற்பனாவாதம் என நம் கவிதை வாசிப்பு நவீனக் காலத்தில் பிரிந்தது. காதல் கவிதைகள், புறக்கவிதைகள் / அரசியல் கவிதைகள் என்று இது பின்னர் வகைப்பட்டது. அதாவது காதலும் இயற்கையும் ஒரு பகுதியாக, அரசியலும் சமூகமும் இன்னொரு பகுதியானது. கவிதையை நாம் அதன் பேசுபொருளை ஒட்டி ரசிக்கத் தொடங்கினோம். பேசுபொருளை மிகைப்படுத்தி ரசிக்க வைக்கிற சொல்லாடல்களை, அணியை நாம் ரசித்தோம். காதல் என்றால் காதலுக்கான உருவகங்கள், உவமைகள், சொல்லாடல்கள், மிகைக் கூற்றுகள் என விதவிதமாக எதிர்பார்த்தோம்.

இதன் அடுத்த கட்டமாகவே நவீனத்துவ கவிதை தோன்றியது. நவீனத்துவ கவிதை மேற்கத்திய தாக்கத்தில் இருந்து தோன்றினாலும் அது நமது ரசனை மரபில் இருந்தும் சில விசயங்களைப் பிரதியெடுத்தது. நவீனத்துவக் கவிதையைப் புரிந்து கொள்ள நாம் மேற்கில் - குறிப்பாக இங்கிலாந்தில் - கவிதை எப்படித் தோன்றியது என விளங்கிக் கொள்ள வேண்டும்.
மேற்கில் நவீனத்துவம் கால்பதிப்பது தேவாலயத்துக்கும் சமூகத்துக்குமான நேரடிப் பந்தம் பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டுகள் துவங்கி பலவீனப்படுவதுடனும், அறிவியல், பகுத்தறிவுச் சிந்தனை, மானுடவாதம், தனிமனிதவாதம், மக்களாட்சி அதன் பிறகு அறிமுகமாவதுடன்தான். இதைப் புத்தொளிக்காலம் என்கிறார்கள். புத்தொளிக் காலம் அங்கு எந்திரமயமாதல், தொழில்புரட்சி, உலகப்போர்கள், மக்களாட்சி எனப் பல கட்டங்களை நோக்கி சமூகத்தைச் செலுத்தியது. மரபான சிந்தனைகளை செல்வாக்கு இழக்க வைத்தது.
கவிதையை மட்டுமே பார்த்தோமானால் 16-18ஆம் நூற்றாண்டுகள் வரைக்கும் இங்கிலாந்தில் விமர்சகர்களும் வாசகர்களும் கவிதையால் வாழ்க்கைக்குப் பயனுண்டா எனும் பிளேட்டோவின் கேள்விக்கு விடைதேடவே விழைந்தார்கள். 'கவிதைப் பேசுவது அசலான உண்மை அல்ல, அது தூய்மையான சாரம் அல்ல, மாறாக அது ஒரு நகல், பிழைபட்ட வடிவம்' என்பது பிளேட்டோவின் வாதம். இதை அவர் ரிபப்ளிக் தொகுப்பில், பத்தாவது நூலில் ஒரு விவாதத்தில் முன்வைக்கிறார். கவிஞர்களை தன் (கற்பனையான லட்சிய) தேசத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்கிறார். இதைக் கடவுள் உண்டா இல்லையா எனும் கருத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

கவிதை கடவுள் தரிசனத்துக்கு வெகுநெருக்கமாக கிரேகத்தில் இருந்தது. ஆகையால் பிளேட்டோ கவிதையை மறுக்கும்போது கடவுளையும் (அதாவது சன்னதம் கொண்ட பூசாரி நாட்டார் வழிபாட்டில் வெளிப்படுத்தும் கடவுள் அனுபவத்தை) தான் மறுக்கிறார். அவர் கடவுளின் இடத்தில் தத்துவத்தை, தத்துவஞானியை வைக்கிறார்.

கத்தோலிக்க மதம் இங்கிலாந்தில் முக்கியத்துவத்தை இழந்து புரொட்டெஸ்டெண்ட் மதம் தோன்றி, அறிவியல், பகுத்தறிவு சிந்தனைகள் வலுவான பின்னர் மதத்துக்கும் தனிமனிதனுக்குமான தொடர்பு பலவீனப்படுகிறது. இப்போது பிளேட்டோவின் அக்கேள்வி இங்கிலாந்தின் கவிஞர்களுக்கும் வாசகர்களுக்கும் முக்கியமாகிறது: வாழ்க்கைக்கு சாரமான, அசலான அர்த்தம் / உண்மை இல்லாத போது கடவுளின் / கவிஞரின் இடம் என்ன? இதற்கான பதிலை ஸ்டீபன் காஸன், பிலிப் சிட்னி ஆகியோர் (பிளேட்டோவின் கருத்துக்களை ஒட்டி) கவிதை வேண்டாம், கவிதை வேண்டும் எனும் இரு எதிரெதிர் தரப்புகளில் நின்று விவாதித்தனர். அதன்பிறகு பரவலாகக் கவிதை நமது நன்னெறிகளை பொழுதுபோக்குடன் அல்லது அழகியலுடன் அளிக்கிறது எனும் பொருள்பட அறிஞர்கள் முடிவு சொல்ல விவாதம் விரிந்தது. கவிதையின் நோக்கம் இன்பம் தருவதா நன்னெறியை போதிபதா? பத்தொன்பதாம் நூற்றாண்டில் இயற்கை வழிபாடு, தனிமனிதவாதத்தை முன்வைக்கிற கற்பனாவாத மரபு அங்கு வெர்ட்ஸ்வொர்த், கார்லிட்ஜ், ஷெல்லி, பைரன், கீட்ஸ் ஆகியோரின் கவிதைகளால் உருவாகிறது. இதன் தாக்கத்தை இன்று வரைக்கும் நாம் உலகம் முழுக்க கவிதையில் காண்கிறோம். இதை மறுத்து அங்கு நவசெவ்வியல் கவிதைகள், நவீனத்துவ கவிதைகள் தோன்றின. கடவுள் இல்லாத காலத்தில் இயற்கை வழிபாட்டுப் போக்கு, அதை மறுத்து செவ்வியல் இலக்கியக் கருத்தாக்கங்களை வழிபடுவது, பண்பாட்டைப் போற்றுவது என இன்னொரு போக்கு அங்கு தோன்றி அதன் அடுத்த கட்டமாகவே நகரமயப்பட்ட நவீனத்துவ மரபு தோன்றியது.

அடுத்து நாம் இந்திய, தமிழ்க் கவிதைகளைப் பார்த்துவிட்டு மேற்கிற்கு யு-டர்ன் எடுப்போம்.

தமிழ் மரபுப்படி இதை வைத்துப் பார்த்து விவாதம் அகம் - புறம் என விரிந்தது என நாம் பார்க்கக் கூடும் எனினும் அது துல்லியமாக இருக்காது. மேற்கத்திய மரபில் இதை அவர்கள் அகவயமான, ரசனாபூர்வமான, ஆன்மீகமான நோக்கு, புறவயமான அறிவியல் சார்ந்த, பகுத்தறிவு, தகவல் அறிவு சார்ந்த நோக்கு என இரண்டாகப் பிரித்தனர். இதை நாம் நிறுவத்தக்க ஒன்றைப் பேசும் கவிதை, நிறுவ முடியாத ஒன்றைப் பேசும் கவிதை எனப் பார்க்கலாம். மேலும் இது கிரேக்க நாடக மரபில் இருந்த இன்பியல், துன்பியல் வகைமைகளின் அடிப்படைகளையும் தழுவிக் கொண்டது. அதாவது சமூகப் பிரச்சினைகளைப் பகடி செய்யும், பகுத்தறிவுக்கு உட்பட்டு விவாதிக்கும் கவிதையும் (இன்பியல்), அகச்சிக்கல்களைச் - காதல், தனிமை, அனுபவக்கள், தனிமனிதப் பார்வை, ஆன்மீகம், கடவுள் சார்ந்த விவாதங்களைச் - சித்தரிக்கும் கவிதை எனப் பிரிந்தது.

இந்தியாவிலோ தமிழிலோ நவீன கவிதை இப்படி அறிமுகமாகவில்லை., இங்கு ஆங்கிலச் செவ்வியல், கற்பனாவாத, நவ-செவ்வியல் கவிதைகள் காலனிய கல்வி வழியாக அறிமுகமாகி மரபுக் கவிதைகளுடன் சேர்ந்தே படிக்கப்பட்டன. சுதந்திரத்துக்குப் பிறகு நவீன கல்வி பரவலான பிறகே நவீன கவிதை, புதுக்கவிதை எனும் வடிவம் நம் கைக்கு வருகிறது.

சுயமாகச் சிந்திப்பதும், அதே நேரம் உலகில் நமது தோற்றத்தை, இருப்பை, அர்த்தத்தை மதத்தின் பாற்பட்டும் மதமின்றி, கடவுள் இன்றி இயற்கையின் பாற்பட்டும் சிந்திப்பது அங்கு, குறிப்பாக இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும், முக்கியமான பேசுபொருளாகிறது. இச்சிக்கல் இந்தியாவில் பெரும்பாலும் நம் கவிதையில் ஒரு முக்கிய நெருக்கடி அல்ல. அதற்கு ஒரு காரணம் நம்மூரில் முன்பு தத்துவார்த்தமாக பகுத்தறிவு, மீமெய்யியல் எனப் பள்ளிகள் பிரிந்து விவாதித்திருந்தாலும் இரண்டு தரப்புகளின் சமரசமே நீடித்தது, பக்தி மரபுக்குப் பின் இந்தச் சிந்தனைப் பள்ளிகள் ஒன்று கலந்து, எதாவது ஒன்று மற்றொன்றை ஆக்கிரமித்தும் ஒரு போக்கு உருவானது. நம்மால் மரபிலும் நவீனத்துவத்திலும் நிலைக்க இயன்றது. நாம் சில நேரங்களில் நவீனத்துவத்தை மரபின் வேரில் இணைத்துக் கொண்டோம். நமது இந்திய நவீனத்துவ கவிஞர்கள் பெரும்பாலானோர் கடவுள் மறுப்பாளர்களோ பகுத்தறிவாளர்களோ அல்லர். தமிழிலும் இதுவே நிலை. நேரடியாகக் கடவுளை ஏற்காதவர்கள் கூட மரபின் சாரத்தை ஏற்றுக் கொண்டனர். சி.சு செல்லப்பா புதுக்கவிதையை நிறுவ முயன்றாலும் இன்னொரு பக்கம் அவர் மரபுவாதியாக விளங்கினார். சாதிச் சங்கத்தில் செயல்பட்டார். தேவதேவன் இப்போதும் கூட தன் கவிதைகள் வழியாக ஒரு புது அத்வைத மெய்யியல் மரபைப் பரிசீலித்து வருகிறார். இதன் இன்னொரு பரிணாமத்தை அபியிடம் காண்கிறோம். நகுலன் இதனிடையே இன்மையை நோக்கி கவிதையை நகர்த்தினார். யுவனிடமும் தேவதச்சனிடமும் ஜென் அழகியலைப் பார்க்கிறோம். கற்பனவாதச் சாயல் கொண்ட நவீன கவிஞர்கள் நம்மிடம் அதிகம். தலித்திய, பெண்ணிய கவிஞர்களின் பகுத்தறிவு, மார்க்ஸிய மரபின் போக்குகளும் அகவயமான போக்குகளும் இணைகின்றன. மனுஷ்ய புத்திரனிடம் ஆன்மீகக் கவிதை காதல் கவிதையாக புலப்படுவதாக எனக்குத் தோன்றுகிறது. இப்படி நாம் கலந்து கட்டிச் செயல்படுகிறோம்.

மேற்கில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய கற்பனாவாதம் ஒரு முக்கியமான போக்கு எனில், இருபதாம் நூற்றாண்டில் ஒரு படைப்பை ஆசிரியரின் வாழ்க்கை, காலகட்டத்தின் வரலாற்றுப் போக்குகளை வைத்துப் புரிந்து கொள்வதா அப்பிரதி எழுதப்பட்ட விதத்தை மட்டுமே வைத்துப் பார்ப்பதா எனும் விவாதம் அடுத்து வந்த முக்கியமான போக்காகிறது. அதாவது வரலாற்றுவாதம், சமூகவியல் வாசிப்பு, தன்கதை வாசிப்பு என ஒரு பக்கமும், கவிதையை அதன் வடிவத்துக்காக வாசிப்பது என இன்னொரு பக்கமும் வாசிப்புக் களம் உடைந்தது. இது பின்னர் மேத்யூ அர்னல்டின் உரைகல் முறைமை, பிரெஞ்சு உருவவியல், நடையியல், அமைப்புவாதம், பின்னமைப்புவாதம் என ஒரு தனிமரபாக வளர்ந்தது. தமிழில் க.நா.சு முன்வைத்தது ஒருவிதமான உரைகல் முறைமைதான் - சிறந்த படைப்புகளைத் தொடர்ந்து வாசித்தால் நம் ரசனை மேம்பட்டு நம்மால் மோசமான படைப்புகளைப் புறந்தள்ள முடியும், ஒப்பிட்டு வாசிக்க வாசிக்க சிறந்த படைப்புகளே மேலெழுந்து உன்னத இலக்கியத்தின் பட்டியல் (cannon) ஒன்று தோன்றும் என அவர் நம்பினார். இதை அவர் வெகுஜன ஊடக மரபுக்கு எதிராக வைத்தார். சி.சு செல்லப்பாவும் மரபுக் கவிதைக்கு எதிராக 'புதுக்கவிதையை' நிறுவும் நோக்கில் நிறைய எழுதினார். அவரது பார்வையும் ஒருவித ரசனைவாதம்தான். அதாவது தமிழில் புதுக்கவிதை, நவீன கவிதை தோன்றியபோது அதை அகவயமாக நோக்கும்பொருட்டும், மொழியைச் செறிவுபடுத்தும் நோக்கிலும் ரசனையாக அதை வளர்ப்பதை முக்கியமாக நம் நவீன கவிதைப் பிதாமகர்கள் கருதினார்கள். கவிதையை அதன் நடை, உருவத்தை வைத்துப் புறவமாக அலசுவது எந்திரத்தனமானது என அவர்கள் கருதியிருக்கக் கூடும் என நினைக்கிறேன்.

இன்னொரு பக்கம், வானம்பாடி இயக்கம், திராவிட இயக்கம் , மார்க்ஸிய இயக்கம், தமிழ் தேசிய இயக்கம் ஆகியவை கற்பனாவாத கவிதைகளை, அரசியல் முழுக்கக் கவிதைகளை, மரபுக் கவிதைகளைப் போற்றி வளர்த்தன. வானம்பாடிக் கவிதைகள் (மு.மேத்தா, வைரமுத்து, தமிழன்பன், அப்துல் ரகுமான்) பெரும்பாலும் காதல் கவிதைகளாகவோ சமூகப் பகடிகளாகவோ இருந்தன. அவற்றில் மிகையும் போலித்தனமும் இருந்தன. அவற்றை முழுக்க ரசனை பாணியிலே வாசித்தோம். அதனாலே அவை கவியரங்குகளின் வழியாகத் தம்மை நிலைப்படுத்தின. வானொலி, டிவி ஆகிய தொழில்நுட்ப ஊடகங்களின் வருகையுடன் கவிதையைப் படித்துக் கேட்டு ரசிக்க வேண்டிய ஒரு நிர்பந்தம் போய் அந்த இடத்தை திரைப்பாடல்கள், திரை வசனங்கள், விளம்பரப் பாடல்கள் எடுத்துக் கொண்டன. அத்துடன் வானம்பாடி மரபு வீழ்ந்தது. வானம்பாடி மரபில் அப்துல் ரகுமான் அறிமுகப்படுத்திய சர்ரியல்வாதம் சற்றே மேம்போக்காக இருந்தாலும் முக்கியமானது. துரதிஷ்டவசமாக நவீனத்துவ கவிதையில் அது பெரிய செல்வாக்கைச் செலுத்தவில்லை.

மார்க்ஸிய கவிதைகள் இன்னும் வாழ்க்கைக்கு நெருக்கமாக, எதார்த்தமாக, விளிம்பு நிலைக் குரல்களை முன்னிலைப்படுத்த விழைந்தாலும் அவையும் சில நேரங்களில் பிரச்சாரமாகவே அமைந்ததாலும், நவதாராளத்துவ பொருளாதாரத்தின் எழுச்சிக்கு முன்பு மார்க்ஸிய இயக்கங்கள் தளர்ந்து போனதாலும் மார்க்ஸிய கவிதைகளால் சமகாலத்தில் தம்மை நிலைப்படுத்த முடியவில்லை. அது நவீன கவிதையுடன் கலந்து மறைந்து போனது. அதாவது இன்றைய பெண்ணிய கவிதை, தலித் கவிதை, எதிர்க்கவிதை ஆகியவற்றில் மார்க்ஸிய கவிதையின் நிழலை நாம் காண முடியும்.

அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் பிரான்ஸிலும் 50கள் துவங்கி எழுபதுகள் வரை ஆட்சி செலுத்திய வாசிப்புக் கோட்பாடுகள் எண்பதுகளின் பிற்பகுதியிலும் தொண்ணூறுகளிலும் தமிழில் அறிமுகமாயின. உளவியல் வாசிப்பு, மார்க்ஸிய வாசிப்பு, பெண்ணிய வாசிப்பு, வரலாற்றுவாதம், அமைப்பியல்வாதம், பின்னமைப்பியல்வாதம் என பல அலைகள் தோன்றின. இதையடுத்து பினநீவினத்துவம் வலுவாக அறிமுகமானாலும் அது கவிதையிலோ கவிதை வாசிப்பிலோ பெரிய தாக்கத்தை இன்னும் ஏற்படுத்தவில்லை.

நவீன கவிதையை வாசிக்கும் முன்பு மேற்சொன்ன விமர்சனத் தரப்புகளின் மேலோட்டமான புரிதலாவது அவசியமாக உள்ளது. ஏனென்றால் நவீன கவிதை என்று நாம் இன்று பார்க்கிற ஒன்று நவீனத்துவ, பின்நவீனத்துவப் போக்குகளை உள்வாங்கியதாகும். அதில் நவீனத்துவத்துக்கு முந்தைய போக்குகளையும் நீங்கள் காணக் கூடும். மரபான, நவீனத்துவ, பின்நவீனத்துவ விமர்சனங்களுடனே இன்றைய கவிதை தோன்றி உருக்கொண்டிருக்கிறது என்பதால் முன்னவற்றைப் புரிந்துகொள்ளாமல் பின்னதை வாசிக்க இயலாது. முழுமையாக விளங்கிக் கொள்ள இயலாது.

ஒரு இடுபணி. கீழ்வரும் கவிதையின் பின்னணிகளைக் கற்பனை செய்து பார்த்து 3-5 சொற்றொடர்களில் கொடுங்கள். பின்னணி என்று நான் சொல்வது இக்கவிதை எந்தக் கருத்தியல், சமூகவியல், வரலாற்று, தத்துவார்த்த கோணத்தில் உங்களால் வாசிக்கப்படக் கூடும் என்பது. நான் சொல்வது நேரடியான வரலாற்றுச் சம்பவமோ தகவலோ அல்ல. கவிதை இந்த நேரடித்தன்மையைக் கடந்த ஒன்று:

கோணம்
- சி. மணி

நீ கவிதை எழுதுவதும்
அவன் மலம் எடுப்பதும்
மதிப்பீட்டில் வேறானாலும்
வகையில் ஒன்றுதான்
ஒரு கோணத்தில் பார்த்தால் பார்த்தால்
அவனது
உனதைவிடச் சிறந்தது.
மேலும்
அலைவுகளை விட்டுச் செல்வதைவிட
சுவடற்று மறைவது மேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

சினிமாவும் சர்வாதிகாரமும்: யோசா சொல்வதென்ன?

  காட்சி ஊடகம் நமக்குப் பொழுதுபோக்க உதவுகிறது என்றாலும் அது அடிப்படையில் மனிதரைச் சிந்திக்க விடாமல் செய்து செயலூக்கத்தை ஒழிக்கிறது, இது சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது என்று சில மாதங்களுக்கு முன் நான் விஜய்யின் வருகையை ஒட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இன்று தற்செயலாக மரியோ பார்கஸ் யோசாவின் ஒரு கட்டுரையைப் படித்தால் அதில் அவர் கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் சொல்கிறார். காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் உள்ள சமூகம் சர்வாதிகாரத்துக்கு எதிராகச் செயல்பட முடியாமல் முடங்கும் என்கிறார்: (...) making the present unreal, turning actual history into fiction has the effect of demobilising the citizen, making him or her feel exempt from any civic responsibility, encouraging the conviction that it is beyond anyone's reach to intervene in a history whose screenplay is already written. Along this path we may well slide into a world where there are no citizens, only spectators, a world where, although formal democracy may be preserved, we will be resigned to the kind of lethargy dictatorships asp...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...