நேற்று இந்தியா-இங்கிலாந்து போட்டிதான் இந்த உலகக்கோப்பையின் மிகச்சிறந்த போட்டி என்பேன். புலன்களால் உணரக் கூடிய திகிலை அந்த ஆட்டம் தந்தது. அதுவும் பெத்தல் தன்னந்தனியாக தன் அணியை மீட்டுக் கொண்டு வந்து சதமடித்தது, 14வது ஓவருக்குப் பிறகு நிதானித்து கடைசி வரை கொண்டு வந்தது எனக்கு பழைய சச்சினை நினைவுபடுத்தியது. ஜாக்ஸுக்குப் பிறகு சாம் கரனை அனுப்பியது ஆட்டத்தை நிதானப்படுத்தி கூட்டணியை உருவாக்க உதவியது என்றாலும் அது ஒரு எதிர்மறையான முடிவே. அவர்கள் அதற்குப் பதிலாக ஓவர்ட்டனை அனுப்பி 5 பந்துகளில் 15 அடிக்கக் கேட்டிருக்க வேண்டும். ஏனென்றால் டாஸன், ஆர்ச்சர் எல்லாருமே சிக்ஸர் அடிக்கக் கூடியவர்கள்தாம். சாம் கரன் பெத்தல் மீது அழுத்தத்தை அதிகப்படுத்தி விட்டார். பெத்தல் இளைஞர். சதம் அடித்தபின்னர் அவர் மீதான நெருக்கடி அதிகரித்தது. அந்த முக்கியமான சந்தர்பத்தில் இங்கிலாந்து எடுத்த முடிவுதான் இந்தியாவை திரும்ப போட்டிக்குள் வர அனுமதித்தது. அதன்பிறகு பும்ரா, அர்ஷ்தீப், ஹர்த்திக் இங்கிலாந்தின் கழுத்தை நெரித்தார்கள்.
நியாயமாக பெத்தலுக்கும் பும்ராவுக்கும் இணைந்தே ஆட்டநாயகன் விருதைக் கொடுத்திருக்க வேண்டும்.
பிரமாதமான போட்டி!
Comments