முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வருண் சக்கரவர்த்தியின் தடுமாற்றம்

 


வருண் சக்கரவர்த்தியை எதிரணி மட்டையாளர்கள் அடித்துப் பிளப்பதைப் பார்த்தால் ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. இந்த உலகக்கோப்பை ஆரம்பிப்பதற்கு முன்பு தென்னாப்பிரிக்கா நமக்கெதிராக டி20 தொடரை ஆடினார்கள். அப்போதே இதற்கான முயற்சியை தொடங்கினார்கள். ஆனாலும் அப்போது வருண் கொத்துக்கொத்தாக விக்கெட்டுகள் எடுத்ததால் அவர் அடிவாங்கியது பெரிதாகத் தெரியவில்லை. இந்த உலகக்கோப்பையிலோ வருணுக்கு விக்கெட்டுகளும் விழவில்லை. அவர் வந்ததுமே சிக்ஸர்களாக அடிக்கிறார்கள். அவர் முகமும் பார்க்க ஏதோ வகுப்புக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட அப்பாவி மாணவனைப் போல மாறிவிடுகிறது. அணித்தலைவர் சூரியகுமாரால் இந்த ஆட்டப்பகுதியைக் கட்டுப்படுத்தவும் முடிவதில்லை, விக்கெட் எடுப்பதும் அசாத்தியமாகிறது. பும்ரா, அர்ஷதீப்பை சீக்கிரமாகக் கொண்டு வந்தால் இறுதி ஓவர்கள் பாதிக்கப்படும். ஐந்து பந்து வீச்சாளர்களுடன் இந்தியா போவதால் இந்த ஒரு முக்கியமான கண்ணி அறுபட்டதும் தடுமாறுகிறோம். தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மே.இ தீவுகள் ஆகிய அணிகள் எல்லாமே மத்திய ஓவர்களில் அதிக ரன் அடித்தது இதனால்தான். வருண் சக்கரவர்த்திக்கு என்னவாயிற்று? அவரது புதிர்மை முன்பு போல இல்லையா? அவரை சுலபத்தில் கணிக்கிறார்களா? இல்லை, வேறொரு அணுகுமுறையைக் கொண்டு வந்துள்ளார்கள். இது இப்போதைக்கு எதிரணி மத்திய வரிசை மட்டையாளர்களுக்கு கைகொடுக்கிறது.
வருணிடம் ஏகப்பட்ட மாறுபட்ட பந்துகள் உண்டு. ஆனால் இவை குச்சிகளின் பரப்புக்குள் விழுவன. அதாவது மூன்று குச்சிகளையும் விட்டு அவர் வெளியே பந்தை அதிகம் திருப்புவதில்லை. அப்படிச் செய்தாலும் பந்து வெகுவாகத் திரும்புவதில்லை. அவரது வீச்சில் மட்டையாளர்கள் எக்ஸ்டிரா கவர், லாங் ஆபில் அதிகம் கேட்ச் கொடுப்பதை நீங்கள் பார்க்க முடியாது. அவரை முன்பு பெருக்கி (ஸ்வீப்) அடிக்கப் பார்த்தார்கள். ஆனால் அவர் முழுநீளத்தை விட சற்று குறைநீளத்தில் வேகமாக வீசுவதால் ஒன்று பவுல்ட் ஆனார்கள் அல்லது எல்.பி.டபிள்யு. அல்லது பந்து குச்சிகளுக்கு மேலாகப் போகும். மட்டையில் படாது. அவரது நீளத்துக்கும் வேகத்துக்கும் இறங்கி வருவதும் சுலபம் அல்ல. அவரை இவர்களால் வாசிக்க இயலவில்லை என்பதால் தடுத்தாடுவதும் சுலபம் அல்ல. இந்த நெருக்கடியில் இருந்து தப்பிக்கத்தான் தென்னாப்பிரிக்கர்கள் முதலில் அவரை நேராக அடிக்க முயன்றார்கள். அதாவது அவரை ஒரு உள்வரும் பந்து வீச்சாளராக ஆடினார்கள். குச்சிகளைக் காட்டிவிட்டு நின்று நேராகவோ மிட்விக்கெட் பகுதியிலோ தூக்கி அடித்தார்கள். பின்னங்காலுக்குப் போய் புல் ஷாட் ஆடினார்கள். அல்லது கட் அடித்தார்கள். வருண் பயந்து போய் பந்தை முழுநீளத்தில் வீச சிலர் ரிவர்ஸ் ஸ்வீப், லேப் அடித்தார்கள். அவர் பந்தை வெளியே கொஞ்சம் வீச அவர்கள் அங்கிருந்து வாரி எடுத்து லாங் ஆன் பகுதியில் சிக்ஸர் அடித்தார்கள். இந்த உலக்கோப்பை சூப்பர் எய்ட்ஸின் போது எதிரணி மட்டையாளர்கள் அடித்த இந்த குறிப்பிட்ட சில ஷாட்கள் சிக்ஸர்கள் போன போது வருண் கடும் அழுத்தத்திற்கு ஆளானார். அவர் மேலும் மேலும் குறைவான நீளத்தில் வீசுவதால் அவருக்கு விக்கெட்கள் விழுவதும் இல்லாமல் போனது. அவரது மாறுபட்ட பந்துகள் சுழல்வதை நிறுத்தின.
அதாவது வருணை தடுத்தாட முடியாமல் எதிரணியினர் சிக்ஸர் உத்தியைக் கையில் எடுக்க அது வருணை நிலைகுலைய வைக்கிறது. வருண் இதைச் சரி செய்ய முதலில் சிக்ஸர்களைத் தடுத்து அவர்களை ஒற்றை, இரட்டை ஓட்டங்கள் எடுக்க வைக்க வேண்டும். வருணின் பந்துகள் ஒரு கால்சுழரைப் போல வெகுவாக வெளியே சுழல்வதில்லை. அவர் கிட்டத்தட்ட கும்பிளேயைப் போல வீசுபவர். முன்பு கும்பிளேயையும் இப்படித்தான் சில மட்டையாளர்கள் நின்ற வாக்கில் நேராக சிக்ஸர் அடித்தார்கள். பின்னுக்குப் போய் கட் அடித்தார்கள். கும்பிளே தன் கால்சுழல் பந்திலும் நீளத்திலும் கவனம் செலுத்தி சமாளித்தார். இப்போது அவர் வருணுக்குப் பரிந்துரைப்பதும் இந்த உத்தியைத்தான். எனக்கு அது எடுபடாது எனத் தோன்றுகிறது. வருண் தன் பந்து வீச்சின் முறைமையை மாற்றி மீண்டு வருவதற்கான கால அவகாசம் இல்லை. அதற்குப் பதிலாக அவர் கால் பக்கமாக மட்டையாளர்களை இலக்காக்க வேண்டும் என நினைக்கிறேன். அதாவது மிதவைப் பந்துகள், கால்சுழல் பந்துகளை நடு மற்றும் கால் குச்சிகளை நோக்கி வீசி அதற்கு ஏற்ப லாங் ஆன், டீப் மிட் விக்கெட், பைன் லெக், நேரான களத்தடுப்பாளர்களை வைத்து எதிர்மறையாக வீச வேண்டும். அப்போதும் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுவார்கள். ஆனால் அதைக் குறித்து அவர் அதிகம் கவலைப்படக் கூடாது. வேண்டுமென்றால் கவர் பகுதியில் இருந்து ஒருவரை எடுத்து ஸ்வீப்பில், பாயிண்டில் வைக்கலாம். அந்த ஷாட்டில் எப்படியும் ரிஸ்க் உள்ளது. பந்து கொஞ்சம் பவுன்ஸ் ஆனால், நின்று வந்தால் விக்கெட் கிடைக்கும். அடுத்த சில போட்டிகளில் வருண் எல்.பி.டபிள்யு, பவுல்டை மறந்துவிட வேண்டும். காலில் விழும் பந்துகளை நேராக அடிப்பது சிரமம். மட்டையை வீசுவதற்கான இடமும் கொடுக்காவிட்டால் மிட்விக்கெட், நேரான சிக்ஸர்கள் வருவதும் குறையும். பந்து அதிகமாகச் சுழலும்போது மட்டும் அவர் பழையபடி குச்சிகளுக்கு நேராக வீசலாம். ஒன்றிரண்டு சிக்ஸர்கள் போனாலும் விக்கெட் விழும்.
இந்த உத்தியைத் திறம்படக் கையாள்பவர் சுனில் நரைன். அவர் பந்தை வெளியே தூக்கி அடிப்பதற்கான இடத்தையே தர மாட்டார். எல்லா பந்துகளும் கால்பக்கமாகவே போகும். வருண் அவரது ஐ.பி.எல் பந்துவீச்சை கவனித்தாலே பெரிய திறப்பாக அது அமையும்.
இப்போதைக்கு சிக்ஸர் போனதும் வருண் வெளியே வைடாக, குறைநீளத்தில், முழுநீளத்தில் என என்னென்னவோ முயல்கிறார். இந்த முயற்சிகள் அவரைப் பலவீனப்படுத்த அதிகமாக அடிவாங்குகிறார். அவர் குழப்பத்தில் இருக்கிறார். அவர் செய்ய வேண்டியதெல்லாம் தன் திசையை மாற்றுவதுதான். செய்வாரா என இறுதிப் போட்டிவரை காத்திருந்து பார்க்கலாம்.
இப்போதைக்கு துணிச்சலான இந்த அணுகுமுறையைக் கொண்டு வருணின் ஆட்டத்தை நிர்மூலமாக்கிய எதிரணி மட்டையாளர்களை, அவர்களுடைய வியூக அமைப்பாளர்களை, பயிற்சியாளர்களை, பகுப்பாய்வாளர்களை, புள்ளியியலாளர்களைப் பாராட்ட வேண்டும். சபாஷ்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...