சன் ரைசர்ஸ் அணிக்கு நேர் எதிரான திசையில் செல்லும் அணி சென்னை சூப்பர் கிங்ஸ். ஆடுதளம் நின்று வந்தாலோ அதில் அதிக பவுன்ஸும் வேகமும் இருந்தாலோ அவுட் ஆகாமல் ஆட வேண்டும் எனும் உஷார்தன்மை சென்னை மட்டையாளர்களிடம் வந்துவிடும். கடந்த சில ஆண்டுகளாக துவக்க மட்டையாளர்களில் இருந்து மத்திய வரிசை வீரர்கள் வரை மோசமான ஆட்டநிலையில் இருப்பதால் ஏற்பட்ட தற்காப்பு மனநிலையாக இருக்கலாம். இதன் பிரச்சினை என்னவென்றால் எதிரணி வீச்சாளர்களை பதற்றமாக்கி தவறான நீளத்தில் வீச வைக்காமல் அவர்களை செட்டில் ஆக விட்டுவிடுகிறார்கள். இன்று ருத்துராஜும் ஷார்ட்ஸும் ஆட்டத்தை ஆரம்பித்த விதம் ஒரு உதாரணம். இதனால் ஏற்படும் நெருக்கடியாலே பின்னர் தேவையில்லாமல் ரிஸ்க் எடுத்து ஆடி ஆட்டத்தை இழக்கிறார்கள். இதற்குப் பதில் துவக்கத்தில் ரிஸ்க் எடுத்துவிட்டு பின்பு நிதானம் காட்டினால் சென்னை 160-170 எடுத்திருக்க முடியும். சர்பராஸ் கான் சரியாகத் துவங்கினார். ஆனால் ஒரே ஒரு தவறு அவருக்கு விக்கெட்டைப் பறிகொடுக்கச் செய்தது. சென்னைக்கு உண்மையில் தேவை முதல் ஆறு ஓவர்களில் சன் ரைசர்ஸின் அணுகுமுறை. தோற்றாலும் அதிரடியாகத் தோற்போம் எனும் மனநிலை. அதற்கான மட்டையாளர்கள் - சஞ்சு, துபே, கார்த்திக் - அவர்களுடைய அணியில் உள்ளார்கள். மாத்ரேயும் ருதுராஜும் ஒரே மாதிரி ஆடக் கூடியவர்கள் என்பதால் சர்பராஸை மாத்ரேயின் இடத்தில் கொண்டு வரலாம். துவக்க வீரர்கள் அடித்தாடினால் பிரெவிஸ் திரும்பியதும் 8-10 ரன் சதவீதத்தை சுலபத்தில் தக்க வைக்கவும் சராசரியாக 200 அடிக்கவும் முடியும்.
டி20யில் எல்லா பந்துகளையும் சிக்ஸர் அடிக்காவிட்டாலும் அப்படிச் செய்வதான தோரணை அவசியம்.
Comments